ஞாயிறு, 14 மார்ச், 2010

பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்


பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று (மார்ச் 12) அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனிதமக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார். பெரியார் தாசன் தனது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்தாண்டுகளாக தனது உள்ளத்தில் ஏற்பட்ட முடிவை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது என்று பெரியார் தாசன் குறிப்பிட்டார்