சனி, 19 பிப்ரவரி, 2011

நாவின் விபரீதம்

அல்லாஹ் மனிதனுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கின்றான். அவைகளில் மிக முக்கியமானது பேசும் நாவாகும். நாவை ஒரு கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம். கத்தியைக் கொண்டு ஒருவருக்கு அறுவை சிகிச்சிசை செய்து, அவரின் உயிரைப் பாதுகாக்கவும் செய்யலாம். அதே கத்தியைக் கொண்டு ஒருவரின் உயிரை எடுத்தும் விடலாம். இதே போன்றுதான் நாவும். நாவைக் கொண்டு சுவர்க்கம் செல்லவும் முடியும். அதே நாவு நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமையலாம். ஆகவே நாவை பேணிப் பாதுகாப்போம்.

மனிதனின் உயர்வுக்கும்;, தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது நாவு என்று சொன்னால் அது மிகையாகாது. இதை எப்படி நாம் பயன்படுத்துகிறோமோ அதன் படியே முடிவும் இருக்கும். சிலர் இந்த நாவை, சரியாகப் பயன்படுத்தி மனிதர்களில் ''சிறப்பிடத்தைப்'' பெற்று விடுகிறார்கள். சிலர் இதே நாவை முறையற்ற வழியில் பயன்படுத்தி ''மனிதர்களில் தரம் தாழ்ந்தவர்கள்'' பட்டியலில் இடம் பெற்று விடுகிறார்கள். இப்படிப்பட்ட நாவைப்பற்றி திருக்குர்ஆனும், நபி மொழியும் என்ன கூறுகின்றன என்பதைக் காண்போம்.
எதைப்பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைப்பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலன், பார்வை இதயம் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல்பற்றி) கேள்வி கேட்கப்படும். (17:36)


ஒருவனிடம் கண்காணித்து எழுதக்கூடியவர் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (50:18)

நிச்சயமாக அடியான் சில நேரங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரிய விஷயங்களை அதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகிறான். (எனினும்) அல்லாஹ், அதற்காக அவன் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் நரகில் வீழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

ஓர் அடியான் சில வார்த்;தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா? கெட்டதா? என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

(நாளை மறுமையில்) மனிதர்களை முகம் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை என ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்;மிதி)

அரைகுறை ஞானமுள்ள எந்த விஷயத்தையும் நாம் வெளிப்படுத்தக்கூடாது! ஏனெனில் நாம் பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் வானவர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் தவறாகப் பயன்படுத்திய வார்த்தைகளைப் பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய தண்டனை வழங்கப்படும்.
நாம் சிந்திக்காமல் பேசும் சில வார்த்தைகள் நம்மை நரகத்தின் அடித்தளத்திற்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும் என நபி ஸல் அவர்கள் கூறியதை மனதில் பதிய வைக்க வேண்டும். இந்த ஹதீஸ் நாவை எந்த அளவிற்கு கவனமாகக் கையாள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.


நாவினால் நிகழும் சில தவறுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. அவற்றைத் தெரிந்து முற்றிலும் அப்படிப்பட்ட தவறுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
1. புறம் பேசுதல்
மனிதர்கள் கூட்டமாகக் கூடி விட்டாலே அங்கு யாரையாவது குறை கூறி விடுகின்றனர். ஆண், பெண் இருபாலரும் அடுத்தவரைப்பற்றி குறிப்பிட்டு புறம் பேசுவது வாடிக்கையான செயலாக மாறி விட்டது. இப்படி அடுத்தவரைக் குறை கூறி பேசுவதை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.

சிலர் நாங்கள் உண்மையைத்தானே கூறுகிறோம் இதில் தவறென்ன இருக்கிறது? என்று கேட்கலாம். ஒருவரிடத்தில் இருக்கும் தவறைக் கூறுவதே புறமாகும். ஒருவரிடத்தில் தவறிருக்கக் கண்டால் அத்தவறை உரியவரிடம் நேரடியாகக் கூறி அவரது தவறை நீக்க முயல வேண்டுமே தவிர ஊர் முழுக்கப் பறைசாற்றக் கூடாது.


ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் புறம் பேசுவது என்றால் என்ன? எனத் தோழர்களிடம் வினவினார்கள். அதற்குத் தோழர்கள் அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே இதனை நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுவது என்பது) நீர் உம் சகோதரரைப்பற்றி அவர் வெறுப்பதைக் கூறுவதாகும் என பகர்ந்தார்கள். நான் கூறும் விஷயம் என் சகோதரரிடம் இருந்தால்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நீர் கூறும் விஷயம் அவரிடம் இருந்தால் நீர் அவரைப் பற்றி புறம் பேசிவிட்டீர். நீர் கூறும் விஷயம் அவரிடம் இல்லையென்றால் நிச்சயமாக நீர் அவரைப்பற்றி அவதூறு கூறிவிட்டீர் எனப் பகர்ந்தார்கள். (முஸ்லிம்)

புறம் பேசுவது தனது சகோதரரின் மாமிசத்தைப் புசிப்பதைப் போன்றது என்று திருக்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றது.

மேலும் உங்களில் சிலர் சிலரைப்பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். (49:12)


புறம் பேசுதலைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது புறம் பேசுபவரின் வார்த்தையைக் கடலில் போட்டால் இதனுடைய கடுமையான சொல்லின் காரணத்தால் கடல் நீரின் தன்மையே மாறிவிடும் என்றார்கள்.


நான் நபி ஸல்  அவர்களிடம், சஃபிய்யா (ரலி) அவர்களுடைய இன்னன்ன விஷயங்கள் உங்களுக்குப் போதுமானதாகும் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ கூறிய அந்த வார்த்தையை கடல் நீரில் கலந்தால் (அதனுடைய தன்மையையே) மாற்றி விடும் என்றார்கள். (அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்)

புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள். தமது கரங்களாலேயே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தை, கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினால் ஆன நகங்கள் இருந்தன. அவற்றின் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும், நெஞ்சங்களையும் (தாமே) காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே இவர்கள் யார்? என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (அதாவது புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் பங்கம் விளைவித்தவர்கள் என்று விளக்கமளித்தார்கள். (அஹ்மத், அபூதாவூத்)

இப்படிப்பட்ட பெரும் பாவமான புறம் பேசுதலை நாமும் தவிர்ந்து கொண்டு, அவை பேசப்படும் இடத்தை விட்டு விலகி விடவும் வேண்டும்.


(முஃமீன்கள்) வீணானதைச் செவியுற்றால் அதைப்புறக்கணித்து, எங்களுக்கு எங்கள் அமல்கள், உங்களுக்கு உங்கள் அமல்கள்! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை என்று கூறுவார்கள். (28:55)

(ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனத்திற்குரியவர்கள்) வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள். (23:3)


புறம் பேசுதலைத் தவிர்ந்து கொள்வதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய மணிமொழிகளை மனதில் பதிய வைக்க வேண்டும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

1. முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ''எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே! என நபி ஸல்  அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

2. எவர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதையே பேசட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

3. நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் உறுதியாக பற்றிப்பிடித்துக் கொள்ளத்தக்க ஒரு விஷயத்தை அறிவியுங்கள்! என்று கேட்டேன். ''எனது இறைவன் அல்லாஹ் என்று கூறி! பிறகு அதிலேயே உறுதியாக இருப்பீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னுடைய விஷயத்தில் தாங்கள் அதிகம் அஞ்சுவது என்ன? என்று கேட்டேன். அப்போது தனது நாவை பிடித்துக் காட்டி இதுதான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி). ஆதாரம் : திர்மிதி


2. அவதூறு

நிச்சயமாக கற்புள்ள அப்பாவிகளான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறுகிறார்களே அத்தகையோர், இம்மையிலும் மறுமையிலும் (அல்லாஹ்வினால்) சபிக்கப்பட்டுள்ளனர். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு, கடுமையான வேதனையும் உண்டு. (24:23)


3. கோள்

''ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் இல்லாத ஒன்றை கூறி இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்படுத்துவதை'' சிலர் தொழிலாகவே கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குழப்பங்கள் ஏற்படுகின்றன. எத்தனையோ பேர் கொலை கூட செய்யப் பட்டுள்ளனர். இப்படி பெரும் பாதிப்புகள் இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதே இல்லை. இப்படி கோள் சொல்லித் திரிபவர்களை அல்லாஹ் மன்னிக்க வில்லையெனில் நரகம் செல்லாமல் சுவர்க்கம் செல்லவே முடியாது. கப்ரில் கடுமையான வேதனையுமுண்டு என்று இஸ்லாம் நமக்கு எச்சரிக்கை செய்கின்றது.

குறை சொல்லி புறம் பேசித்திரியும், ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (104:1)


கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்லும் போது இந்தக் கப்ருகளில் உள்ள இருவரும் வேதனை செய்யப்படுகின்றார்கள் அவர்கள் இருவரும் (அவர்களின் எண்ணத்தில்) பெரும் பாவத்தினால் வேதனை செய்யப்படவில்லை. ஏன்றாலும், அது பெரும் பாவம்தான். ஆவ்விருவரில் ஒருவர் கோள் சொல்லித்திரிபவராக இருந்தார். மற்றொருவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யமாட்டார் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


4. பொய் சாட்சி

அவர்கள் (அல்லாஹ்வின் அடியார்கள்) பொய் சாட்சி சொல்லமாட்டார்கள். மேலும் அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம்
செல்வார்களாயின் கண்ணியமானவர்களாக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள். (25:72)

பெரும் பாவங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ''அல்லாஹ்விற்கு இணைவைப்பது, பெற்றோருக்கு நோவினை செய்வது, பொய் சாட்சி சொல்லுவது'' என்று பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)



5. தர்மம் செய்ததை சொல்லிக் காட்டுதல்
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்கு காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததை சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் தர்மங்களை, பாழாக்கி விடாதீர்கள். (2:264)

மறுமை நாளில் அல்லாஹ் மூன்று சாரார்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு, கடுமையான வேதனை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். கைசேதப்பட்ட, நஷ்டமடைந்த அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன், (தனது) கீழாடையை (பெருமைக்காக, கரண்டை காலுக்கு கீழ்) தொங்க விடுபவன், (தான் செய்த தர்மத்தை) சொல்லிக்காட்டுபவன், பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள். (முஸ்லிம்)



6. சபித்தல்

ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்கமாட்டான் என நபி ஸல்  அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, அபூதாவூத்)

ஒருவர் இன்னொருவரை ''பாவி'' என்றோ, ''காஃபிர்'' என்றோ கடுஞ்சொல் கூற வேண்டாம். (ஏனெனில்) குற்றம் சுமத்தப்பட்டவர் அப்படி இல்லையெனில் அது அவர் (சொன்னவர்) பக்கமே திரும்பி விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)



7. இறந்தவர்களை ஏசக்கூடாது

இறந்தவர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் முற்படுத்தியதற்குரியதை பெற்றுக் கொண்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)



8. பக்கத்து வீட்டுக்காரருக்கு துன்பம் தருதல்

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தராமல் இருக்கட்டும். யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும், இல்லையெனில் மௌனமாக இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)



9. காலத்தைத் திட்டுதல்


காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்திவிடுகிறார்கள், காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும், பகலையும் மாறி வரச் செய்பவனும் நானே என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

இதுவரை நாம் நாவினால் ஏற்படும் தீங்குகளையும் அவற்றைப் பற்றிய திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் எச்சரிக்கைகளையும் கண்டோம்.

சொர்க்கம் செல்வதற்கு நாவு தடையாகிறது என்பதை எச்சரித்த நபி (ஸல்) அவர்கள் நாவை சரியாக பயன் பயன்படுத்துவோருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதையும் கூறுகிறார்கள்.


எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பெற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)



அன்புள்ள சகோதர, சகோதரிகளே!


இதுவரை நாவின் விபரீதத்தைப் பற்றித் தெரிந்தோம். இதே நாவை நல்ல காரியங்களில் பயன்படுத்தினால் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. நாவைக் கொண்டு தஸ்பீஹ் செய்யலாம்;, குர்ஆன் ஓதலாம், நன்மையை ஏவி தீமையைத் தடுக்கலாம். இன்னும் இவைகள் போன்ற எத்தனையோ நல்ல காரியங்களில் ஈடுபடலாம். நாவை நல்ல வழிகளில் பயன்படுத்துவதினால் கிடைக்கும் நன்மைகiளில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

1 . குர்ஆன் ஓதுதல்
    · நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்கு (அதை ஓதியவர்களுக்கு) பரிந்துரை செய்யக்கூடியதாக வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

    குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். ''அலிஃப்,லாம்,மீம் என்பது ஓர் எழுத்து'' என்று நான் சொல்லமாட்டேன். அலிஃப் என்பது ஓர் எழுத்து, லாம் என்பது ஓர் எழுத்து, மீம் என்பது ஓர் எழுத்தாகும் என நபி ஸல்  அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)


2 . தஸ்பீஹ் செய்தல்

    இரு வார்த்தைகள் (சொல்வதற்கு) நாவுக்கு மிக இலகுவானவை, இறைவனின் தராசில் மிக கனமானவை, இறைவனிடம் மிக விருப்பத்திற்குரியவை (அவ்விரு வார்த்தை) சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

3 . நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல்

    (விசுவாசங்கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தவர்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும் நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள். (3:110)

நாவு மனிதனை சுவர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ கொண்டு செல்லக்கூடிய உறுப்பு என்பதைத் தெரிந்தோம். ஆகவே நரகம் செல்லக்கூடிய (சொல்) செயல்களிலிருந்து நம் நாவைப்பாதுகாத்து சுவர்க்கம் செல்லக்கூடிய (சொல்) செயல்களைச் செய்து நாவினால் சுவர்க்கம் செல்ல நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
நன்றி: தமுமுக துபை இணையதளம்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

எகிப்தில் வெற்றி ஊர்வலம்!!!! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு...!

எகிப்து நாட்டினை கடந்த முப்பது ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்கை விரட்டியடித்ததை கொண்டாடும் விதமாக எகிப்தியர்கள் இன்று வெள்ளிக் கிழமை தலைநகர் கெய்ரோவில் ஒன்று திரண்டு வெற்றி ஊர்வலம் நடத்தினர்.
சுமார் பதினெட்டு நாட்கள் நடத்திய அதிபரை வெளியேற கோரி நடத்திய போராட்டத்தின் போது சுமார் 356  பேர்கள்  கொல்லப்பட்டதாகவும்5550 பேர்கள் காயங்கள் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறது.

இந்நிலையில் ஹோஸ்னி முபாரக்கை விரட்டப்பட்டதை கொண்டாடும் விதமாக எகிப்தியர்கள் இன்று கெய்ரோவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வெற்றி ஊர்வலம் நடத்தியுள்ளனர். பின்னர் தஹ்ரீர் சதுக்கத்தில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையினை  பிரபல இஸ்லாமிய அறிஞர் டாக்டர் யூசுப் அல்
 கர்ளாவி நடத்தினார்.  இறுதிவரை பின்வாங்காமல் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற  எகிப்தியர்களை அவர் குத்பா உரையின் போது பாராட்டினார். 
புதிய எகிப்து உருவாகும் வரை போராட்டம் ஓயாது என குத்பா உரையின் போது அறிஞர் அல் கர்ளாவி குறிப்பிட்டார்.
அதிபருக்கெதிராக போராட்டம் நடைபெற்ற வேளையில் கைது செய்யப்பட்டவர்களை ராணுவ அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான முஹம்மது வகீத் கூறியிருக்கிறார் என்று அல் ஜசீரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறது.


புகைப்பிடிப்பது தொடர்பாக புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரரின் கேள்விக்கு பதிலளிக்கிறார் டாக்டர் ஜாகிர் நாயக்....!

திங்கள், 14 பிப்ரவரி, 2011

பள்ளி சீருடையும், பாலியியல் குற்றங்களும்


வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.


உணவு, உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மட்டுமே, கிடைத்தது பெண் கல்வி; ஒழிந்தது ஆணாதிக்கம் என்று சந்தோசப்படும் சூழல் வாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. பள்ளிகளில் குழந்தைகள் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீருடை அணிவது நடைமுறையில் உள்ளது. ஆனால், சீருடையின் அமைப்பு பாதுகாப்பானதா என்பது விவாதித்துக்கு உள்ளாகி இருக்கிறது.அரசு பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்வரை, தாவணி சீருடையாக இருந்தது. பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, பாதுகாப்பு, சவுகரியங்களோடு ஒப்பிடுகையில் மேம்பட்டு இருந்த சுடிதார் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தனியார் பள்ளிகள், தனித்தன்மை என்ற பெயரில் விதவிதமான சீருடைகளை நடைமுறைப்படுத்தின. "பளிச்'சிடும் தோற்றம், "கான்வென்ட்' தோரணை என பெற்றோர்களும் அந்த சீருடைகளுக்கு வரவேற்பளிக்கத்தான் செய்தனர். ஆனால், சமீபகாலத்திய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வேறு எங்கோ தப்பு நடக்கிறது என்ற கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கின்றன.

பாடப்புத்தகம் தவிர, மென்திறன், தொடர்பியல் திறன் என்று தனிமனித மேம்பாடு பற்றிச் சிந்திக்கும் பள்ளிகள், சீருடை விஷயத்தில் அதன் நிறத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. வளர்இளம்பருவ மாணவிகள் அணியும் சீருடை, நிச்சயம் பாதுகாப்பானதாக இல்லை; மற்றவர்களின் கவனத்தை உறுத்தும் வகையில் இருக்கிறது. கோவையில் பள்ளிச்சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு; சிறுமியும், அவரது சகோதரனும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, தாமதமாக விழித்துக் கொண்ட பெற்றோரும், கல்வியாளர்களும், சீருடையின் அளவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு, தூண்டுதலாக அமைகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். வளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் சீருடை இல்லை. முழங்கால் வரையிலும், சில சமயங்களில் முழங்காலுக்கு மேலேயும் என்ற அளவில்தான் பாவாடைகள் இருக்கின்றன.புத்தகச் சுமையை, முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லும் பெண் குழந்தைகளின் பாடு சொல்லவே வேண்டாம். புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை. மாறாக, வீட்டுப்பாடம், தேர்வு, பள்ளி செல்லும் அவசரம், வீடு திரும்பும் அவசரம் என்பதில்தான் கவனம் இருக்கும்.


முன்னங்காலுக்கு மேலேயும், முற்புறத்தில் பலர் கண்களை உறுத்தும் வகையிலும் அணியும் "பினோபார்', பாவாடை சட்டை போன்ற சீருடை வகைகளும் கண்களை உறுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


சில சமூகவிரோதச் செயல்களுக்கு, இவ்வகையிலான தூண்டுதல்களே காரணம் என்ற புகாரும் உள்ளது.சீருடை அவசியம் என்ற போதும், அவற்றின் அளவும், அமைப்பும் சரியாக இருக்கிறதா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பள்ளிச்சிறுமி படுகொலை செய்யப்பட்டபோது, சூட்டோடு சூடாக விவாதிக்கப்பட்ட சீருடை விஷயம், வழக்கம் போல் மறக்கப்பட்டு விட்டது.அடுத்த கல்வியாண்டு விரைவில் துவங்க உள்ள நிலையில், இதுகுறித்த முடிவு எட்டப்பட வேண்டும். சீருடை தொடர்பாக சிலரிடம் பேசினோம்.

அதிலிருந்து...

மனோத்தத்துவ நிபுணர் பொன்னி கூறியதாவது:  தற்போதைய பெரிய பிரச்னைகளில் ஒன்று குழந்தைகளின் பாதுகாப்பு. குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்படுதல், பாலியல் கொடுமைகள் என, பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒழுக்கம் என்பது குழந்தைகள் மீதான பெற்றோர்களின் வளர்ப்பு முறையைத்தான் குறிக்கிறது. பெற்றோர்களே மாடர்ன் கலாசாரத்துக்கு மாறி வருகின்றனர். மாடர்ன் ஆடைகளை அணிவதும், உணவு பழக்கங்களை மாற்றுவதுமாக கலாசாரம் மாறி வருகிறது. இதன் அடிப்படை எங்கே என்று தேடினால், மற்ற நாடுகளிலிருந்து நாம் கற்றுக் கொண்டது தான். கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் பல இருப்பினும், நமக்கு ஒத்துவராத விஷயங்களை மட்டும் காரணமே இல்லாமல் கற்றுக் கொள்கிறோம். நல்ல பழக்கங்கள் என்பது பெற்றோர்களிடம் இருந்து கற்க வேண்டியது. பெற்றோர்கள் முதலில் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒழுக்கங்களை நாம் கற்று கொள்ளும் மற்றொரு இடம் பள்ளி. அடிப்படை கலாசாரங்களும், பண்பாடுகளும் கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகளில் கூட ஒழுக்க விதிமுறைகள், தனிமனித பண்புகள், வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிக் கற்று கொடுக்க நேரம் இல்லை என்பது, இன்னும் பரிதாபமான விஷயம்.குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. "டிவி' மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தமும், தேவை இல்லாத ஊடுருவலும் அதிகம். அவற்றில் வரும் காட்சிகளும், முரண்பாடான கருத்துகளும் குழந்தைகளின் மனதில் அவர்களை அறியாமலே பதிவாகிறது. அவற்றைத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, பொன்னி கூறினார்.


சர்வஜன பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ""இன்டர்நெட், சினிமா, "டிவி' நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகம், குழந்தைகளின் மீது தவறாகத் திணிக்கிறது. இன்னும் சொல்வதானால், பல பெற்றோர்கள் அத்தகைய சீருடைகளை விரும்புகின்றனர். தாய்மார்கள், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள், நடத்தை முறைகளைக் கற்றுத்தர வேண்டும்,'' என்றார்.


அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சுகுணா கூறியதாவது:பெற்றோர் சம்மதத்தோடு தான் சீருடைகளை குழந்தைகள் அணிகின்றனர். இதற்கு காரணம் பள்ளி நிர்வாகமானாலும், இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. தங்களது குழந்தைகள் தவறாக சித்தரிக்கப்படுவதை, கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். அரசால், மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை அறிந்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சர்வதேச பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் சேர்க்கின்றனர்; அது தவறான கருத்தாகும். அரசு பள்ளிகளில் மட்டும் சீருடையாக சுடிதார்கள் இருப்பதை தவிர்த்து, அனைத்து பள்ளிகளிலும் இதனை கொண்டு வர வேண்டும். "பின்னோபார்' சீருடைகளோடு மட்டும் நின்றுவிடாமல், "மினிபார்' சீருடைகளும் வந்துவிட்டன. அது இன்னுமொரு கொடுமையான விஷயம். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தான் பாதுகாப்பு அதிகம். அரசு பள்ளிகள் அதனை விளம்பரப்படுத்துவது இல்லை; ஆனால் தனியார் பள்ளிகள் செய்கின்றன. இத்தனை பிரச்னைக்கும் காரணம் பள்ளி நிர்வாகிகள் மட்டும்தான் என்று குறை கூற முடியாது. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் அரசு, இதில் கவனம் செலுத்தி சீருடைகளை மாற்றி அமைக்க முடிவெடுக்கலாம். நம்முடைய கலாசார உடைகள், சீருடைகளாக வரலாம். அனைவரும் சுடிதார் மற்றும் பல விதமான நாகரீகமான உடை அணிவதன் மூலம், பல பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம்.இவ்வாறு, சுகுணா கூறினார்.

பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி முதல்வர் க்ரிஷ் கூறுகையில், ""ஆசிரியப்பணி சேவையாக இல்லாமல், தொழிலாக மாறிவிட்டது. வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்றுத்தருவதில்லை. "டிவி', இன்டர்நெட் போன்ற ஊடகங்களின் தாக்கத்தை, குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கின்றனர். ஆண், பெண் இருபாலினத்துக்கும், சகபாலினத்தின் மீது பரஸ்பர மரியாதை இல்லை. வெளிநாட்டு கலாச்சார மோகம், பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான நல்லவை இருக்கின்றன. ஆனால், நமது சூழலுக்கு ஒத்துவராத உடை உள்ளிட்ட தேவையற்றவைகளை மட்டுமே பின்பற்றுகிறோம்,'' என்றார்.


ஸ்டேன்ஸ் பள்ளி உதவித் தலைமையாசிரியர் கிருஷ்ணன் கூறுகையில், ""பள்ளிச் சீருடைகளை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. அதற்கேற்ற உள்ளாடைகளை அணிய, உடற்பயிற்சி ஆசிரியர்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்பர். சீருடைகள் மட்டுமே குற்றச்சம்பவங்களுக்கு காரணம் என சொல்ல முடியாது. இருப்பினும், பள்ளிச் சீருடை முறை மாற்றுவது குறித்து, நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும்,'' என்றார்.
ஜி.டி., பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், "சீருடைகளை இறுக்கமாக அணியாமல் இருக்க வேண்டும். குழந்தைகள் எப்போதும் விளையாட்டுத் தனமாகத்தான் இருக்கும்; அவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. சீருடைகளை மாற்றுவதை விட மக்களின் மனதை மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் இல்லாத குற்றச்சம்பவங்கள் தற்போது பெருகியதற்குக் காரணம், மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம்தான்,' என்றனர்.

சினிமாக்களில் சித்திரிக்கும் கெட்ட விஷயங்கள் தடுக்கப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்களின் மனப்பாங்கு; தவறாக வழிகாட்டும், "டிவி', சினிமா துறைகள் பற்றி பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள், குற்றம் சாட்டின. துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவனும் மொபைல்போன் வைத்திருப்பது, அந்தரங்க விஷயங்கள் இன்டர்நெட்டில் மிக எளிதாக கிடைக்கும் அவலம் போன்ற பெற்றோரின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்கும் விஷயங்களையும் அவர்கள் தெரிவித்தனர். பாடப்புத்தகங்களைச் சொல்லித்தருவது மட்டுமே கடமை என்றில்லாமல், பண்பாட்டுடன் குழந்தைகள் வளர்வதற்கும் கல்வி நிறுவனங்களே பொறுப்பு. கவனச்சிதறல் ஏற்படுத்தாத கட்டுப்பாடான உடைகள் வேண்டும் என்பதால் தா­ன், கல்வி நிறுவனங்கள் உடை விஷயத்தைத் தீர்மானிக்கின்றன. இது வரவேற்கத்தக்க ஒன்று; எனினும், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சீருடைகளின் அளவுகளை கல்வி நிறுவனங்கள் ஒருமுறை பரிசீலிக்கத்தான் வேண்டும்.

பெற்றோரே முன்னுதாரணம்! பேஷன் என்ற பெயரில் உடைகள் இன்று பெற்றுள்ள வடிவங்கள் பல. அதிலும், இன்றைய இளம் தலைமுறையினர் இதில் கலாச்சாரப் புரட்சியையே நடத்தி வருகின்றனர். இறுக்கிப் பிடிக்கும் மேற்கத்திய கலாசாரத்துடனான சில மாடர்ன் உடைகள் பலரது கண்களையும் உறுத்தவே செய்கின்றன. அதுவும், நமது உணவு மற்றும் புற சூழல்களால் இன்றைய குழந்தைகள் உடலளவில் அதீத வளர்ச்சியுடன் திகழ்கையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் உடை விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதிலும், இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளே இன்று அதிகம் உள்ள நிலையில் பள்ளிச் சீருடைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இன்டர்நேஷனல், சி.பி.எஸ்.சி., ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், அரசு பள்ளிகள் என பல நிர்வாகங்கள் இருந்தாலும் அரசு பள்ளிகள் தவிர மற்றவற்றில் நவநாகரிமான மேற்கத்திய பாணியிலான யூனிபார்ம்கள் (குட்டி ஸ்கர்ட்டுகள், பெல்ட், டை, ஷு) போன்றவற்றில்தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

நாளை நம் குழந்தைகள் வெளிநாடுகளில் பணியாற்ற படிப்பை விட இவையெல்லாம் தான் தலைமைத் தகுதிகள் என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சுடிதார், தாவணி போன்ற கலாசார வகையிலான யூனிபார்ம்கள் அணிவது பலருக்கும் கட்டுப்பெட்டித்தனமாகவே படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, பள்ளிகளை மட்டுமே குறை கூறுவதைத் தவிர்த்து பெற்றோர்களும் சற்று விழிப்புடன் இருக்கலாம். எந்த வகையானாலும் யூனிபார்ம் தைக்கும் போதே இறுக்கிப்பிடிப்பதாய் இல்லாமல் சற்று தளர்வாய், குழந்தைகளின் உடல்வாகுக்கேற்ப தைப்பது நலம்.

பெண் பிள்ளைகள் சீக்கிரம் வளர்ந்துவிடும் என்பதைக் குறிக்க, "பெண் பிள்ளைகள் வளர்த்தி பீர்க்கங்காய் வளர்த்தி' என்பார்கள் கிராமப்புறத்தில். எனவே, பெற்றோர்கள் இந்த விஷயத்தில் சிக்கனம் பார்க்காமல் ஆண்டுதோறும் குழந்தைகளின் வளர்ச்சிக்கேற்ப யூனிபார்ம்களை தைப்பது நலம். ஸ்கர்ட் அணிந்தாலும் சில பள்ளிகளில் முட்டிக்கால் வரையிலான ஸ்டாக்கிங்ஸ், லெகின்ஸ் போன்ற தரமான உள்ளாடைகள் அணிய வலியுறுத்துகின்றனர். இம்முறை இல்லாத பள்ளிகளில் பெற்றோர் தாங்களாகவே குழந்தைகளுக்கு இதை அணியப் பழக்கலாம். பின்புறமாக இருதோள்களில் அணியும் பைகளுக்கு பதிலாக ஒருபுறமாக அணியும் பைகளை வாங்கிக் கொடுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, பெற்றோர்கள் தாங்களாகவே ஒரு உதாரணமாகத் திகழ்வது குழந்தைகளையும் கலாசாரம் பிறழாமல் வாழச் செய்யும்...

நன்றி : தினமலர்










புதன், 9 பிப்ரவரி, 2011

லால்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சியின் தொகுதி எழுச்சி பொதுக்கூட்டம்

லால்பேட்டையில் நடந்த மனித நேய மக்கள் கட்சியின்காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி எழுச்சி
பொதுக்கூட்டம் மிகபெரிய எழுச்சியுடன் நடைப்பெற்றது
புகழ் அனைத்தும் இறைவனுக்கே
பொதுக்கூட்டம் புகைப்படங்கள்...

லால்பேட்டை 06/02/2011: லால்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சியின் காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி பொதுக்கூட்டம் முனவ்வர் ஹுசைன் நினைவரங்கம் ஸ்கூல் தெருவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு A.M.முஹம்மது அய்யூப் B.A.,M.Cஅவர்கள்
மாவட்ட பொருளாளர் த.மு.மு.க & ம.ம.க) தலைமை தாங்கினார், A.I.இர்பானுல்லாஹ் BE (நகர பொருளாளர் த.மு.மு.க&ம.ம.க.) கிராஅத் ஓதினார், S.A.முஹம்மது ஹாரிஸ் (நகர தலைவர் த.மு.மு.க &ம.ம.க) வரவேற்புரை நிகழ்த்தினார்.

A.யாசர் அரபாத் .B.B.A.,MC (மாவட்ட செயலாளர் ம.ம.க.)
N.அமானுல்லாஹ் (ஊராட்சி மன்ற தலைவர் &மாவட்ட செயலாளர் த.மு.மு.க ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மௌலவி J.S ரிபாய் அவர்கள், மாநில துணை பொது செயலாளர் த.மு.மு.க.

S.S ஹாருன் ரஷீது அவர்கள், மாநில பொருளாளர் ம.ம.க.

R.M குணங்குடி ஹனிபா அவர்கள், மாநில நிர்வாககுழு உறுப்பினர் த.மு.மு.க.& ம.ம.க.
S.M ஜின்னா அவர்கள் மாநில துணை செயலாளர் த.மு.மு.க.
M.H மெஹராஜுதீன் அவர்கள் மாவட்ட தலைவர் த.மு.மு.க.&ம.ம.க
கலந்து கொண்டு சிறப்பு எழுச்சியுரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக நன்றிவுரை V.M முஹம்மது ஆஷிக் நூர் (நகர செயலாளர் ம.ம.க) அவர்கள் வழங்கினார்.