செவ்வாய், 29 டிசம்பர், 2009

முஹர்ரம் மாதத்தின் பெயரால் வன்முறை..

இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதமான முஹர்ரம் பிறந்து விட்டால் அதனை புத்தாண்டாக கொண்டாட மறந்து போன இந்த இஸ்லாமிய சமுதாயம் அந்த முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம் நாளை துக்க நாள் என்ற பெயரில் கொண்டாட்டங்கள் நடத்தி இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஷியா பிரிவு முஸ்லிம்களிடையே கொண்டாடப்பட்டு வரும் இந்த துக்க தின கொண்டாட்டங்கள் மெல்ல மெல்ல சன்னி பிரிவு முஸ்லிம்களிடமும் ஊடுருவி சுன்னத் ஜமாஅத் என தங்களை பறைசாற்றிக்கொள்ளும் சில அதி மேதாவி ஆலிம்கள் ஆசிர்வாதம் வழங்க தொடங்குகிறது அந்த கத்திக்குத்து திருவிழா.
நபியவர்களின் பேரன் ஜனநாயக விரோத தீய சக்திகளின் காலித்தனத்திற்கு பலியானது முஸ்லிம்களுக்கு துக்கமான ஓர் செயல் தான்.அந்த ஒரு விஷயத்தை மையப்படுத்திக்கொண்டு இஸ்லாத்தின் பெயரால் விழா எடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஊர்வலமாக செல்வதும் ஊர்வலத்திர்கிடையே கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தங்களின் உடலை கீறிக் கொண்டு ரத்தங்களை மண்ணில் ஓட்டுவதும் நபியவர்கள் கற்றுத்தந்த இஸ்லாமிய நெறிக்கு மிகவும் முரணானதாகும்.
சகிப்புத் தன்மை என்றால் என்ன? என கேள்வி கேட்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஷியா பிரிவினர் மீது தங்களுக்கு இருக்கும் பகையை தீர்த்துக் கொள்ள இந்த முஹர்ரம் ஊர்வலத்தை ஓர் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு அந்த ஊர்வலத்தில் வெடிகுண்டு வீசி அப்பாவிகளின் உயிர்களை காவு வாங்கியுள்ளனர். இது போன்ற அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் ரவுடித்தனத்திற்கு இந்த உலகில் நான் யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன் என மார் தட்டித் திரியும் தீவிரவாதிகளும் அவர்களுக்குத் துணை போகும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் நாளை இறைவனிடம் கட்டாயம் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொண்டால் நல்லது.
இரத்த ஓட்டங்களுக்கு காரணமாக இருக்கும் இந்த முஹர்ரம் ஊர்வலத்தை தடை செய்வது பற்றி முஸ்லிம் ஜமாத்களும் இயக்கங்களும் ஆலோசிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

புதன், 16 டிசம்பர், 2009

மறக்கப்படும் இஸ்லாமிய புத்தாண்டு...

இஸ்லாமிய மாதங்களில் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த பந்தங்களையும் சொத்து சுகங்களையும் அல்லாஹ்விற்காக துறந்து சொந்த மண்ணை விட்டு பிரிந்து மதீனா நகருக்குப் பிரவேசித்த அந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமிய புத்தாண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.
நபியவர்கள் அனைத்தையும் துறந்து மற்றொரு மண்ணில் தஞ்சம் புக வேண்டிய அவசியம் ஏன் உருவானது? என்பது குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்து கொள்ள கடமைப்பட்டிருக்கின்றனர்.
மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை ஆகிய இம்மூன்று தீய குணங்களை தன்னகத்தே குடிகொண்டிருந்த ஒரு காட்டரபி சமூகத்தில் பிறந்து அம்மக்களிடையே மண்டிக்கிடந்த இனவெறி குலவெறி என மனித சமூகத்திற்கு ஒவ்வாத கொள்கைகளை எதிர்த்து ஓரிறை கோட்பாட்டை பரப்புரை செய்ததால் சினங்கொண்ட அம் மக்கா நகரத்து காட்டுமிராண்டிகள் அவரை கொலை செய்யத் துணிந்தனர்.
சத்திய மார்கத்தை இப் புவியெங்கும் பரப்பிட சபதம் கொண்ட அம்மாமனிதர் தமது இலட்சியத்தைக் காக்க நாடு துறந்தார் அம்மாபெரும் தியாகத்தை நினைவு கூறுவது இப்புத்தாண்டு தினத்தின் முக்கிய அம்சமாகும்.
ஆனால் இன்றைய சமூகம் அந்த தினத்தை நபிகளார் செய்த தியாகத்தை மறக்கத்துனிந்து விட்டதோ என அஞ்சக்கூடிய அளவிற்கு இந்த நாளை தெரியாமல் இருந்து வருகின்றனர்.
இந்த அவல நிலையைக் களைந்து முஸ்லிம்களின் தேசிய அடையாளங்களில் ஒன்றான இந்த இஸ்லாமிய புத்தாண்டை நினைவில் கொண்டு நபியவர்களைப் போல நாடு துறக்கும் தியாகம் செய்ய நம்மால் முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் இஸ்லாம் தடுத்திருக்கும் பாவமான காரியங்களிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்வேன் என இந்நாளில் நாமனைவரும் சபதம் கொள்வோமாக.
வாசகர்கள் அனைவருக்கும் இனிய இஸ்லாமிய நல்வாழ்த்துக்கள்.


ஞாயிறு, 13 டிசம்பர், 2009

கடல் மாற்றத்தை கணக்கிடும் 'ஆந்தோசா' : அந்தமான் கடலில் அதிகரிப்பு

ராமநாதபுரம், கடலில் ஏற்படும் மாற்றத்தை கண்டறியும் திறன் கொண்ட "ஆந்தோசா' உயிரினம், மன்னார் வளைகுடாவை விட அந்தமான் கடற்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. எண்ணற்ற புகழ் கொண்ட மன்னார் வளைகுடாவில், பல்வேறு சிறப்புகளை கொண்ட உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில், பலரும் அறியாத உயிரினம் "ஆந்தோசா'. பவளப்பாறை இனத்தை சேர்ந்த இவற்றை, "கடல் தாமரை' என்றும் அழைக்கின்றனர். இது, குடல் இல்லாத உயிரினம். உறிஞ்சி உண்ணும் பழக்கம் கொண்ட இது, மணல் பாங்கான பகுதியில் மட்டுமே இருக்கும். எப்போதும் மணலுக்குள் புதைந்து இருப்பது இதன் இயல்பு. இவற்றுக்கு ஏற்ற சூழல் வரும் போது மட்டும் வெளியில் வந்து, தாமரை போல தன் உடலை விரிந்து நிற்கும். அப்போது தன்னை கடந்து செல்லும் உயிரினங்களை இரையாக உறிஞ்சிவிடும். மிகச் சிறிய உயிரினங்களே இவற்றின் உணவாக இருந்தாலும், அவற்றின் சத்துக்களை மட்டுமே இவை உறிஞ்சும். உண்ட பின் ஓடுகளை துப்பிவிடுகிறது. இவற்றால் வேகமாக மற்றொரு இடத்துக்கு செல்லமுடியாது. இந்தியாவில் அந்தமான் கடற்பகுதியில் 252, மன்னார் வளைகுடாவில் 117 வகையும் உள்ளன. லட்சத்தீவு, கட்ச் வளைகுடாவில் குறைந்த அளவில் தான் உள்ளன. கடலில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ளும் தன்மை இவற்றுக்கு உண்டு. இதை கடலின் கண்காணிப்பாளராக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் இவற்றை உணவாக பயன்படுத்துவதில்லை. அதே நேரத்தில், அலங்கார பொருளுக்காக அறுவடை செய்யப்படுகிறது. பயன்பாடு குறைவு என்பதால், இங்கு இதன் அழிவு குறைவு. தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பேய் கணவாய் மீன்களுக்கு நிகராக, இவற்றின் மாமிசத்தை வறுத்து உண்ணும் வழக்கம் உள்ளது.
Thanks. .dinamalar.com

தங்கம் விலை எகிறக் காரணம் என்ன?

ஒரு கிராம் தங்கம் விலை 1,600 ரூபாயைத் தாண்டிவிட்டது. மிக விரைவில் கிராம் 2,000 ரூபாயையோ, சவரன் 20 ஆயிரம் ரூபாயையோ எட்டினால் வியப்பதற்கில்லை. அந்த உயரம், வெகு தூரமில்லை என்கின்றனர் நகை வியாபாரிகள். "இப்படி நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலைக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; மொத்தத்தையும் தீர்மானிப்பது, வெறும் 14 பேர் தான்' என்றால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான்.
இதுகுறித்து, ஸ்ரீ குமரன் தங்க மாளிகை மேலாண் இயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது: பிரிட்டன் தலைநகர் லண்டனில், புல்லியன் எக்சேஞ்ச் ஒன்று இருக்கிறது. நம்மூர் பங்குச் சந்தைகள் மாதிரி, தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை இது தான். இதில் 14 வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன. இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவுக்கேற்ப மார்க்கெட் விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான். இதில், அங்கத்தினர்களான வங்கிகள் கூடி, "இன்று இதுதான் விலை' என்று அறிவித்தால், உலகம் முழுவதும் அன்றைய விலையாக, அதுவே தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும், அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. கையோடு, அன்றைய மார்க்கெட் விலையை, லண்டன் புல்லியன் அதிகரித்துவிடுகிறது.
தங்கம் விலை நிர்ணயத்தின் முக்கிய காரணியாக, ஆன்-லைன் வர்த்தகம் தான் செயல்படுகிறது. ஆன்-லைனில், எந்த நேரடி பணப் புழக்கமும் இல்லாமல், வெறுமனே, "இன்றைக்கு எனக்கு இத்தனை கிலோ தங்கம் ஒதுக்கிவையுங்கள்' என பதிவு செய்துவிட்டால், உங்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும். ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் தனி மனிதத் தேவைக்குப் பயன்படும் தங்கத்தை, அமெரிக்காவில் இருக்கும் ஒரே ஒரு வர்த்தகரே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துவிடுகிறார். இப்படித்தான், செயற்கை முறையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் வாங்குவோரில், 80 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான். 20 சதவீதம் வாடிக்கையாளர்கள் தான் செல்வந்தர்கள். விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது, நடுத்தர வர்த்தக மக்கள் தான். இந்த அதிரடி விலை உயர்வால், தங்கள் அவசியத் தேவைக்கு கூட தங்கம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வகையில், தங்கம் விலையை 90 சதவீதம் ஆன்-லைன் வர்த்தகமும், 10 சதவீதம் மட்டுமே தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கிறது. இவ்வாறு ஆறுமுகம் கூறினார்.
தங்கத்தின் கதை: உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான மெசபடோமியாவின் சுமேரிய நாகரிகத்தில் தான் (இப்போதைய ஈரான், ஈராக்) முதல் முதலில் தங்கம் ஓர் புனிதமான, ஆடம்பரமான, அலங்காரத்துக்கான நகையாக பயன்படுத்தப் பட்டது. கிட்டத்தட்ட அதே காலத்தில், தங்கம் உற்பத்தியில், முன்னணியில் இருந்த எகிப்தியர்களும், தங்கத்தை சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர். அவர்களும் தங்கத்தை சொந்த உபயோகத்துக்குத் தான் பயன்படுத்தினர். நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில மன்னர்கள், தங்கத்தில் நாணயம் வெளியிட்டனர். முதன் முதலில், பெரிய அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் கி.மு., 560 - கி.மு., 546ல் ஆண்ட லிடியா (இப்போதைய மேற்கு டர்க்கி) மன்னர் கிரீசஸ் தான். அதில், சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட ராஜ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயங்கள் தான் , உலகத்திலேயே முதல் முறையாக வர்த்தகப் பயன் பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.
மொத்தத் தங்கம்: தங்க வயல் சுரங்க சேவைகள் என்ற நிறுவனம் 2003ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, உலகத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 டன் புழக்கத்தில் உள்ளது (இதில் உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது?). இதில் 61 சதவீதம், 1950ம் ஆண்டுக்குப் பிறகு பூமியிலிருந்து சுரண்டப்பட்டவை. மொத்த தங்கத்தையும் ஒரு கட்டியாகச் செய்தால், நான்கு புறமும் 19 மீட்டர் கொண்ட கனசதுரம் கிடைக்கும். அவ்வளவு தான்.
சொக்கத்தங்கம்: பொதுவாக, தங்கத்தின் மதிப்பு காரட் அடிப்படையில் அளவிடப்படுகிறது. காரட் என்ற வார்த்தை காரப் என்ற விதையில் இருந்து வந்தது. இந்த விதை, கீழ்திசை நாடுகளில், எடைக்கற்களாகப் பயன்படுத்தப்பட்டது. சொக்கத் தங்கம் என்றழைக்கப்படும் சுத்தமான தங்கம், 24 காரட் மதிப்புடையது. நேர்த்தியான நிலையில், 100 சதவீதம் சுத்தமான இத்தங்கம், நகை செய்ய உகந்தது அல்ல. நகைக்கு பயன்படுத்தப்படும் தங்கம் 22 காரட் உடையது என பரவலாக சொல்லப்படுகிறது. இது 91.67 சதவீதம் சுத்தமான தங்கம். ஆனால், 75 சதவீதம் சுத்தத் தங்கமான 18 காரட்டைப் பயன்படுத்தினாலே பெரிய விஷயம் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
Thanks. .dinamalar.com

தமுமுக முயற்சியால்; I.N.T.J-வினர் விடுதலை

தமுமுக முயற்சியால்; I.N.T.J-வினர் விடுதலை

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட 17 வது ஆண்டு தினமான டிசம்பர் 6 அன்று சென்னையில் உள்ள உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.எம். பாக்கர் தலைமையிலான இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் காலையில் கைதுச் செய்யப்பட்டனர். கைதுச் செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவர். வழக்கம் போல் இவர்கள் அனைவரும் மாலையில் விடுதலைச் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் இவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முடிவுச் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை மாலை 6 மணியளவில் காவல்துறை செய்வதற்கு தொடங்கியது. இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளை வீட்டிற்குச் செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்தினர். ஆனால் பெண்கள் மறுத்துவிட்டு உறுதியாக இருந்தனர்.இதனை தொடர்ந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடமும் பொதுச் செயலாளர் ஹைதர் அலியிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயர்காவல்துறை அதிகாரிகளை தொடர்புக் கொண்ட தமுமுக தலைவர் அடையாளபூர்வமாக முற்றுகைப் போராட்டத்தை நடத்தியவர்களை சிறையில் அடைத்தால் அது பெரும் அநீதியாகும் என்று குறிப்பிட்டார். உள்துறை அமைச்சரின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதால் நாங்கள் அவர்களை சிறையில் அடைக்கின்றோம். நாளை அவர்கள் பிணையில் வெளியில் வந்து விடலாம் என்று காவல் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே வள்ளுவர் கோட்டம் அருகில் ஐ.என்.டி.ஜே.வினர் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி பள்ளிக்கு அருகில்; தென்சென்னை மாவட்டத் தலைவர் சீpனி முஹம்மது தலைமையில் தமுமுவினர் பெருமளவில் கூடினர். தொடர்ந்து தமுமுக தலைவர் உயர் காவல் அதிகாரிகளிடம் கைதுச் செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். இச்சூழலில் இரவு 8.15 மணியளவில் கைதுச் செய்யப்பட்ட பாக்கர் தலைமையிலான அனைவரும் விடுதலைச் செய்யப்படுவதாக தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடம் உயர் காவல் அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர். அதன் பிறகு அனைவரும் விடுதலைச் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை தொடர்புக் கொண்ட எஸ்.எம். பாக்கர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சமுதாய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி இது என்று குறிப்பிட்டார். கைதான பெண்களும் சிறைக்குச் செல்ல உறுதியாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கோவையில் மவ்லவி. அப்துற் ரஹிம் மருத்துவமனை

கோவையில் மவ்லவி. அப்துற் ரஹிம் மருத்துவமனை
த மு மு க வின் மாநில செயலாளர் ஒருவரான (காலம் சென்ற ) மவ்லவி.அப்துல் ரஹீம் அவர்கள் 2005ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக சேலம் வந்தார். பிறகு பிரசசாரத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் போது. சேலம் ஆம்பூர் ரோடு அருகில் விபத்தில் வபாத்தானர் (இன்னாலில்லாஹி)
அப்துல் ரஹீம் அவர்கள் பெயரில் நாகூர்யில் சுனாமி பேரிடர் பாதுகாப்பு மையம் நிறுவப் பட்டது. அதை அடுத்து கோவையில் த மு மு க சார்பில் நினைவு மருத்துவ மனை துவக்கப்பட்டு 04 -12 -09 அன்று அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த மருத்துவமனை அர்பணித்து தமுமுக பொதுச்செயலாளர் S.ஹைதர் அலி திறந்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் தமுமுக மாநில செயலாளர் கோவை உமர், மாநில துனைச்செயலாளர் கோவை செய்யது மற்றும் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் குமரன், அரசு மருத்துவமனை R M O டாக்டர் சிவப்பிரகாசம். தமுமுக மாவட்ட நிர்வாகிகள் அப்துல் பஷிர், ரபிக், அகமது கபீர் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சுல்தான் அமீர், ஷாஜகான், டி எம் எஸ். அப்பாஸ் ,அப்பாஸ், ஜபார், கவிஞர் ஹக், பாரக்துல்லாஹ். ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் குனிசை அப்துல் ரஹ்மான், இப்ராஹிம், பாருக், பஷிர் செய்துயிருந்தார்கள்.

Thanks .tmmk.info

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

டிசம்பர்-06 ஸ்தம்பித்தது சென்னை அண்ணாசாலை

டிசம்பர்-06 ஸ்தம்பித்தது சென்னை அண்ணாசாலை

சென்னை அண்ணாசாலையிலுள்ள அண்ணாசிலை எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி கண்டன சிறப்புரை ஆற்றினார். இதில் ஆயிரக்கணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.