ஞாயிறு, 13 ஜூன், 2010

தொடரும் அல்-அய்ன் முமுக வின் கடனுதவித் திட்டம்....!

தமிழகத்திற்கு வெளியே வளைகுடாப் போன்ற நாடுகளிலும் தடம் பதித்த தமுமுக, அந்த நாடுகளிலும் தமது சேவைக் கரங்களை அகல விரித்து வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக சிறப்பான முறையில் செயல்பட்டு சமூகத்தில் பல்வேறு தரப்பினரிடதிலும் பெருத்த ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்ற அல்-அய்ன் மண்டல முமுக வின் வட்டியில்லாக் கடனுதவித் திட்டம், தற்போது ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

இத் திட்டம், துப்புரவு நிறுவனங்களிலும், கட்டுமான நிறுவனங்களிலும், உணவு உற்பத்தி நிறுவனம் போன்றவற்றில் குறைந்த சம்பளத்திற்கு வேலை
செய்பவர்கள் மத்தியில் இத் திட்டம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
குழந்தைகளின் கல்வி,பெண் திருமணம், போன்ற அத்தியாவசிய செலவுகளுக்காக கடன் பெற்றவர்கள் இத் திட்டத்தை நெகிழ்ச்சியுடன் பாராட்டுகின்றனர். இத் திட்டத்தில் தனது வருமானத்தில் ஒரு சிறு பகுதியை சிறு சேமிப்பாக சேமிதவர்கள், ஆண்டு முடிவில் அதனை ஒரு பெரிய தொகையாக திரும்பப் பெரும் போது, மகிழ்ச்சிப் பெருக்கில் நன்றி தெரிவிக்கின்றதை நம்மால் நேரில்காண முடிந்தது.


கடந்த ஆண்டைப் போலவே இத்திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக
மீண்டும் கீழை முஹம்மது இபுனு அவர்களே முமுக நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.அலுவல் குழு உறுப்பினர்களாக தோப்புத்துறை
ஷேக் தாவுத், அப்துல் மாலிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்து இத் திட்டத்தை விரிவாக நடத்த வேண்டுமென சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இத் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
-கொள்ளுமேடு பை.மு.ரிபாயி,
அல் அய்னிலிருந்து.
நன்றி: மக்கள் உரிமை

ஞாயிறு, 6 ஜூன், 2010

வீணாகும் வரிப்பணம்...

கடந்த 63 ஆண்டுகளாக, ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அளிக்கப்படுகின்றன. அவை மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செலவிடப்படுகின்றன. மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடுகள் வேறு. இவ்வளவெல்லாம் செய்தும் இந்தியாவின் வளர்ச்சி எதிர்பார்த்த இலக்கை எட்டாதது ஏன் என்கிற கேள்விக்கு இன்னும் பதில் கிடைத்தபாடில்லை.

1947-ல் சுதந்திர இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கையை, அன்றைய நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தபோது, நமது மொத்த வருமானம் எவ்வளவு தெரியுமா? வெறும் 171.15 கோடி ரூபாய். மொத்தப் பற்றாக்குறை 26.24 கோடி ரூபாய். அரசின் மொத்தச் செலவினங்களின் வகையில் உள்ள 197.39 கோடி ரூபாயில், ராணுவத்துக்கான செலவு மட்டுமே 92.74 கோடி ரூபாய்.
2010-ல் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின்படி நமது மொத்த வருமானம் 10,20,838 கோடி ரூபாய். இதில் மானியங்களுக்கான ஒதுக்கீடு மட்டும் 1,11,276 கோடி ரூபாய். இந்த அளவுக்கு வருவாய் அதிகரித்திருப்பது மட்டுமல்ல, வளர்ச்சித் திட்டங்களுக்கும், பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்கும், நலிந்த பிரிவினருக்கான உதவிகளுக்குத் தரப்படும் மானியங்களும் பெருமளவில் நமது செலவினங்களில் பங்கு பெறுகின்றன.

பல்லாயிரம் - தவறு... பல லட்சம் கோடிகள் கடந்த பல ஆண்டுகளாகச் செலவு செய்யப்பட்டும், எத்தனையோ ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டிய பிறகும், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதி என்கிற பெயரில் ஒதுக்கீடுகள் தொடர்ந்தும், அடித்தட்டு மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது கண்கூடு. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், சுகாதார மருத்துவ வசதிகள் போன்றவை குறைந்தது 20 விழுக்காடு இந்திய மக்களுக்கு இன்னும் தலையாய பிரச்னையாகத் தொடர்கிறது என்பதுதான் நிஜம்.

இந்தச் சூழ்நிலையில், மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்றத் துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி ஹைதராபாதில் ஒரு மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசியிருப்பது மேலே சொன்ன பிரச்னைக்கான அடிப்படைக் காரணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைகிறது.
மத்திய அரசின் பல திட்டங்கள் சேர வேண்டியவர்களை முறையாகப் போய்ச் சேர்வதில்லை என்பது இணையமைச்சர் நாராயணசாமியின் கருத்து. மத்திய அரசு அறிவித்திருக்கும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், மாநில அரசின் மூலம்தான் விநியோகிக்கப்படுகின்றன. முறையான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் மத்திய அரசால் இதுபோன்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 60 விழுக்காடு மட்டுமே, பயனாளிகளைச் சென்றடைகிறது என்பதுதான் இணையமைச்சரின் வருத்தம்.

சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம், ஒரு விளையாட்டு அரங்கத்தைச் சமன்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்காக ஒதுக்கப்பட்ட 2 லட்சம் ரூபாய் வேலை செய்தவர்களைச் சென்றடையாமல் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரால் கபளீகரம் செய்யப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இதுபோன்ற ஊழல்கள் ஒருபுறம் இருக்க, பல முறைகேடுகளும் பல்வேறு திட்டங்களில் காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியில் பல முறைகேடுகள் நடப்பதாகப் பத்திரிகைச் செய்திகள் வந்தவண்ணம் இருந்தும், அதை யாரும் பொருள்படுத்துவதாகத் தெரியவில்லை. இப்போது உச்ச நீதிமன்றமே இந்த முறையற்ற திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கும் நிலையில், யாரிடம் போய் முறையிடுவது?

கால் நூற்றாண்டுக்கு முன்னால் மும்பை நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் அன்றைய காங்கிரஸ் கட்சித் தலைவரும் பிரதமருமான ராஜீவ் காந்தி கூறியதை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் வெறும் பத்தே காசுகள்தான் பயனாளிகளைச் சென்றடைவதாகக் கூறினார் அவர். இப்போது, மத்திய இணையமைச்சரின் கூற்றுப்படி 60 விழுக்காடு பயனாளிகளைச் சென்றடைகிறது. அந்தவகையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
இணையமைச்சர் நாராயணசாமி மேலும் கூறுகையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுமையாகப் பயனாளிகளைச் சென்றடையாமல் போவதற்குக் காரணம் மத்திய அரசு இந்தத் திட்டங்களை மாநில அரசுகளின் மூலம் நிறைவேற்றுவதுதான் என்றும் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற திட்டங்களை மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் துணையில்லாமல் மத்திய அரசால் ஒருநாளும் நிறைவேற்ற முடியாது என்பது அமைச்சருக்குத் தெரியாதா என்ன? அவர் கூறுவதுபோல, ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்தால் கூட்டணிக் கட்சிகளே அதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவார்களே! மத்திய அரசால் அதை எதிர்கொள்ள முடியுமா?
பல நிதி ஒதுக்கீடுகள், திசைதிருப்பி விடப்படுவது என்பது இந்திய அரசியலிலும், நிர்வாகத்திலும் சகஜமாகி விட்டிருக்கிறது. முறையான நிதிநிர்வாகம் இல்லாமல் இருப்பதும், பொதுப்பணம் என்பது கேள்வி கேட்பாரற்ற பணம் என்பதுபோன்ற மனப்போக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மக்கள் மத்தியில்கூட ஏற்பட்டிருப்பதுதான் மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று.

முறையான திட்டங்கள், கண்காணிப்பான அரசு, நேர்மையான அதிகாரிகள், மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட அரசியல்வாதிகள், விழிப்புடன் செயல்படும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள்... இவையெல்லாம் இருந்தால் ஒரே ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்தியா இமாலயச் சாதனைகளைச் செய்துகாட்ட முடியும். தெரிந்தும் செய்யத் தயாராக இல்லையே, ஏன்? தீர்வு இதிலிருந்து தொடங்க வேண்டும்
நன்றி:துபாய் மைதீன்.

வியாழன், 3 ஜூன், 2010

திருமணம் செய்ய மாட்டோம்'

புகை பிடிப்பவர்களையோ, புகையிலைக்கு அடிமையானவர்களையோ, திருமணம் செய்ய மாட்டோம்' என்று மாணவியரும், "தங்களது மகள்களுக்கு, போதைக்கு அடிமையானவர்களை, திருமணம் செய்து வைக்க மாட்டோம்' என பெற்றோரும் உறுதி எடுத்து கொண்டனர். இதே போல் தமிழக மாணவிகளும், பெற்றோர்களும்உறுதி எடுக்க வேண்டும்.

கேரள மாநிலம் கண்ணூரில், கண்ணூர் மலபார் புற்றுநோய் தடுப்பு மையத்தில், புகையிலை எதிர்ப்பு தினவிழா நடந்தது. இதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த, திரளான மாணவியரும், அவர்களது பெற்றோரும், கலந்து கொண்டனர்.புகை பிடிப்பவர்களையோ, புகையிலைக்கு அடிமையானர்களையோ, திருமணம் செய்து கொள்ள மாட்டோமென மாணவியரும், போதைக்கு அடிமையானவர்களுக்கு, தங்கள் மகள்களை, திருமணம் செய்து கொடுக்க மாட்டோமென, பெற்றோரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.கேரள மாநிலத்தில் தான் சிகரெட், பீடி போன்றவை அதிகளவு விற்பனையாகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் திரளான மாணவிகள் புகைப்பவர்களையோ, புகையிலைக்கு அடிமையானவர்களையோ, திருமணம் செய்ய மாட்டோம் என்று உறுதி எடுத்து கொண்டது போல் தமிழகத்தை சேர்ந்த மாணவிகளும் உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும்
நன்றி: துபாய் மைதீன்

புதன், 2 ஜூன், 2010

நல்லதொரு வாய்ப்பு

மக்கள் கணக்கெடுப்பு-2011 பணியை இந்தியா தொடங்கியுள்ளது. கணக்கெடுப்பின் முதல் நபராக இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. இந்த மிகப் பெரிய பணியில் ஒவ்வோர் இந்தியனும் பங்கேற்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் குடியரசுத் தலைவர்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கருதப்படக் காரணம், முதல் முறையாக தேசிய மக்கள் பதிவேடு உருவாக்கப்படவுள்ளது. இதில் 15 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் விவரங்களும் இருக்கும். கைரேகைப் பதிவும் இருக்கும்.

மக்கள் கணக்கெடுப்பு என்பது வெறும் வாக்காளர் பட்டியலைப் போன்றது அல்ல. இந்தப் படிவங்கள் எந்த அளவுக்கு விரிவாகவும், துல்லியமாகவும், உண்மையாகவும் பூர்த்தி செய்யப்படுகின்றனவோ அந்த அளவுக்கு இந்தியா தன்னைத் தானே கண்ணாடியில் பார்ப்பதைப்போல பார்த்துக் கொள்ளவும் தன்னைத் திருத்தி மேம்படுத்திக் கொள்ளவும் உதவும்.

2001 கணக்கெடுப்பின்போது இந்தியா இருந்த காலகட்டம் வேறானது. அப்போதுதான் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அனைத்து நகரங்களுக்கும் சென்றடைந்தது. அந்த நேரத்தில்தான் கைபேசிகள் வரத்து தொடங்கியது. கணினிகள் பயன்பாடு அதிகரித்தது. ஆனால், இந்த கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா கண்டுள்ள மாற்றங்கள் அளவிட முடியாதவை. நகர்ப்புறங்களில் கைபேசி இல்லாதவர்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தையும் பதிவு செய்யும் வகையில்தான் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்போதைய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஒவ்வொரு மனிதனின் வாழ்விடம், தொழில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை வசதி, வீட்டில் உள்ளவர்கள் வைத்திருக்கும் செல்பேசிகள், சமையல் எரிவாயு, டி.வி., ஃபிரிட்ஜ், கணினிகள், வாகனங்கள், இன்டர்நெட் வசதி, சொந்த வீடா அல்லது வாடகையா என எல்லாத் தகவல்களையும் பதிவு செய்தாக வேண்டும். இதன் கேள்விகள் பலவாகவும் தனிப்பட்ட விவரங்களைக் கோருவதாகவும் இருந்தாலும்கூட, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் இதை வெளிப்படையாகத் தெரிவித்தால்தான், இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு உதவியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும், சுமார் ரூ. 5,000 கோடி செலவில் நடைபெறும் இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் 22 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். 24 கோடி இல்லங்களுக்கு இவர்கள் நேரில் சென்று கணக்கெடுப்பு நடத்தப்போகிறார்கள். இந்தப் படிவங்களைப் பூர்த்தி செய்யவும் கேள்விகளைக் கேட்டு, பதில்களைப் பதிவு செய்யவும் மிகமிக அதிகமான பொறுமை தேவை. தமிழகத்தைப் பொருத்தவரை இத்தகைய அலுவலர்களைப் பணியமர்த்தப் போவது தமிழக அரசுதான். ஆகவே, மக்கள் கணக்கெடுப்பில் ஈடுபட உண்மையான ஆர்வமும், பொறுமையும் உள்ளவர்களை மட்டுமே இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாறாக, வெறுமனே ஒரு வீட்டைக் கணக்கெடுத்தால் ரூ.50 கிடைக்கும் என்று பணத்துக்காக மட்டுமே பணியாற்ற வருபவர்கள் இத்தகைய படிவங்களை அவசர அவசரமாகப் பதிவு செய்து, பல கேள்விகளை வெற்றிடங்களாகவே விட்டுவிடுவார்கள். இத்தகைய நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பொறுப்பான, பொறுமையானவர்களை பணியமர்த்துவதோடு, மாநில அரசின் நலத்திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளன என்பதையும் சேர்த்தே கணக்கெடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இது மாநில அரசு தன்னைத் தானே மதிப்பீடு செய்துகொள்ள உதவும். உதாரணமாக, தமிழக அரசின் இலவச கலர் டிவி, எரிவாயு இணைப்புகள், முதியோர் ஓய்வூதியம் பெறுவோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரைப் பற்றியும் தனிப்படிவம் மூலம் கண்டறிவது மிகவும் எளிது.
15-வது மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கிடையாது என்பதை தெளிவாகத் தெரிவித்துள்ள அரசு, ஆண், பெண் இரு பாலினம் மட்டுமன்றி மூன்றாம் பாலாக திருநங்கை என்கிற கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவில்லை. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, படிவத்தில் மூன்றாம் பாலினரையும் சேர்த்தால் தவறில்லை.
குடிசைகளில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வோரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இடம்பெற்று விடுகிறார்கள். ஆனால், நகரத்தின் சாலையோரங்களில் வானமே கூரையாகக் கொண்டு வாழும் நடைபாதைவாசிகளும் பஞ்சைப் பராரிகளும் இத்தகைய கணக்கெடுப்பில் இடம்பெறாமலேயே போய்விடுகிறார்கள். இவர்கள் அரசின் பார்வையிலும் சமுதாயத்தின் பார்வையிலும் விடுபட்டுப் போவது ஒரு முறையான ஆட்சியின் லட்சணமாக இருக்காது. நடைபாதைவாழ் மக்களும் கணக்கெடுக்கப்பட்டால்தான் இந்த 15-வது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சிறப்புடையதாக அமையும்
நன்றி: துபாய் மைதீன்.