சனி, 1 ஜனவரி, 2011

முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் காவல்துறை செயல்பாடுகள் த.மு.மு.க. கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

அண்மையில் வெளியிட்ட (30.12.2010) அறிக்கையொன்றில் முதல்வர் கலைஞர், முஸ்லிம் சமுதாயத்தின் மீது மிகவும் அக்கறைக் கொண்டவராகத் தன்னைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது வார்த்தைக்கு முற்றிலும் முரணாகவே தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன.


சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் தீவிரவாதிகளைப் பிடிக்கும் பயிற்சி ஒத்திகையை காவல்துறை நடத்தியது. அதில் நடித்த தீவிரவாதிகளுக்கு, ஒட்டுத்தாடிகளை வைத்து முஸ்லிம்களைப் போல் தோற்றம் கொடுத்திருந்தது. அந்தப் படங்கள் பத்திரிகைகளிலும் வெளிவந்தன.

இதற்கு தமுமுக கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளைப் போல சித்தரிப்பது சங்பரிவாரத்தின் செயல்திட்டம் ஆகும். அதைத் தமிழக அரசு தீவிரமாகப் பின்பற்றி வருகிறது போலும்.

மீண்டும் ஈரோட்டில் நடந்த தீவிரவாதிகள் வேட்டை ஒத்திகையிலும் முஸ்லிம்கள்தான் தீவிரவாதிகள் என்பது போல காவல்துறை சித்தரித்துள்ளது.

காவல்துறையைத் தனது நேரடி பொறுப்பில் வைத்துள்ள முதல்வர், இப்போக்கை ஊக்குவிக்கிறார் என இதன்மூலம் தெரிகிறது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையால் முஸ்லிம்கள் மிகுந்த மனவேதனைக்குள்ளாகியுள்ளனர்.

முஸ்-ம்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் பாசிசப் போக்கிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு இனி இத்தகைய தீய சித்தரிப்புகளில் ஈடுபடாமல் இருக்க அரசும் காவல்துறையும் உறுதியளிக்க வேண்டும்.

இல்லையேல், மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டங்களை இந்த அநீதிக்கு எதிராக நடத்த நேரிடும் என தமுமுக எச்சரிக்கிறது.