செவ்வாய், 29 டிசம்பர், 2009

முஹர்ரம் மாதத்தின் பெயரால் வன்முறை..

இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதமான முஹர்ரம் பிறந்து விட்டால் அதனை புத்தாண்டாக கொண்டாட மறந்து போன இந்த இஸ்லாமிய சமுதாயம் அந்த முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம் நாளை துக்க நாள் என்ற பெயரில் கொண்டாட்டங்கள் நடத்தி இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஷியா பிரிவு முஸ்லிம்களிடையே கொண்டாடப்பட்டு வரும் இந்த துக்க தின கொண்டாட்டங்கள் மெல்ல மெல்ல சன்னி பிரிவு முஸ்லிம்களிடமும் ஊடுருவி சுன்னத் ஜமாஅத் என தங்களை பறைசாற்றிக்கொள்ளும் சில அதி மேதாவி ஆலிம்கள் ஆசிர்வாதம் வழங்க தொடங்குகிறது அந்த கத்திக்குத்து திருவிழா.
நபியவர்களின் பேரன் ஜனநாயக விரோத தீய சக்திகளின் காலித்தனத்திற்கு பலியானது முஸ்லிம்களுக்கு துக்கமான ஓர் செயல் தான்.அந்த ஒரு விஷயத்தை மையப்படுத்திக்கொண்டு இஸ்லாத்தின் பெயரால் விழா எடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஊர்வலமாக செல்வதும் ஊர்வலத்திர்கிடையே கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தங்களின் உடலை கீறிக் கொண்டு ரத்தங்களை மண்ணில் ஓட்டுவதும் நபியவர்கள் கற்றுத்தந்த இஸ்லாமிய நெறிக்கு மிகவும் முரணானதாகும்.
சகிப்புத் தன்மை என்றால் என்ன? என கேள்வி கேட்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஷியா பிரிவினர் மீது தங்களுக்கு இருக்கும் பகையை தீர்த்துக் கொள்ள இந்த முஹர்ரம் ஊர்வலத்தை ஓர் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு அந்த ஊர்வலத்தில் வெடிகுண்டு வீசி அப்பாவிகளின் உயிர்களை காவு வாங்கியுள்ளனர். இது போன்ற அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் ரவுடித்தனத்திற்கு இந்த உலகில் நான் யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன் என மார் தட்டித் திரியும் தீவிரவாதிகளும் அவர்களுக்குத் துணை போகும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் நாளை இறைவனிடம் கட்டாயம் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொண்டால் நல்லது.
இரத்த ஓட்டங்களுக்கு காரணமாக இருக்கும் இந்த முஹர்ரம் ஊர்வலத்தை தடை செய்வது பற்றி முஸ்லிம் ஜமாத்களும் இயக்கங்களும் ஆலோசிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

புதன், 16 டிசம்பர், 2009

மறக்கப்படும் இஸ்லாமிய புத்தாண்டு...

இஸ்லாமிய மாதங்களில் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த பந்தங்களையும் சொத்து சுகங்களையும் அல்லாஹ்விற்காக துறந்து சொந்த மண்ணை விட்டு பிரிந்து மதீனா நகருக்குப் பிரவேசித்த அந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமிய புத்தாண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.
நபியவர்கள் அனைத்தையும் துறந்து மற்றொரு மண்ணில் தஞ்சம் புக வேண்டிய அவசியம் ஏன் உருவானது? என்பது குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்து கொள்ள கடமைப்பட்டிருக்கின்றனர்.
மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை ஆகிய இம்மூன்று தீய குணங்களை தன்னகத்தே குடிகொண்டிருந்த ஒரு காட்டரபி சமூகத்தில் பிறந்து அம்மக்களிடையே மண்டிக்கிடந்த இனவெறி குலவெறி என மனித சமூகத்திற்கு ஒவ்வாத கொள்கைகளை எதிர்த்து ஓரிறை கோட்பாட்டை பரப்புரை செய்ததால் சினங்கொண்ட அம் மக்கா நகரத்து காட்டுமிராண்டிகள் அவரை கொலை செய்யத் துணிந்தனர்.
சத்திய மார்கத்தை இப் புவியெங்கும் பரப்பிட சபதம் கொண்ட அம்மாமனிதர் தமது இலட்சியத்தைக் காக்க நாடு துறந்தார் அம்மாபெரும் தியாகத்தை நினைவு கூறுவது இப்புத்தாண்டு தினத்தின் முக்கிய அம்சமாகும்.
ஆனால் இன்றைய சமூகம் அந்த தினத்தை நபிகளார் செய்த தியாகத்தை மறக்கத்துனிந்து விட்டதோ என அஞ்சக்கூடிய அளவிற்கு இந்த நாளை தெரியாமல் இருந்து வருகின்றனர்.
இந்த அவல நிலையைக் களைந்து முஸ்லிம்களின் தேசிய அடையாளங்களில் ஒன்றான இந்த இஸ்லாமிய புத்தாண்டை நினைவில் கொண்டு நபியவர்களைப் போல நாடு துறக்கும் தியாகம் செய்ய நம்மால் முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் இஸ்லாம் தடுத்திருக்கும் பாவமான காரியங்களிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்வேன் என இந்நாளில் நாமனைவரும் சபதம் கொள்வோமாக.
வாசகர்கள் அனைவருக்கும் இனிய இஸ்லாமிய நல்வாழ்த்துக்கள்.


ஞாயிறு, 13 டிசம்பர், 2009

கடல் மாற்றத்தை கணக்கிடும் 'ஆந்தோசா' : அந்தமான் கடலில் அதிகரிப்பு

ராமநாதபுரம், கடலில் ஏற்படும் மாற்றத்தை கண்டறியும் திறன் கொண்ட "ஆந்தோசா' உயிரினம், மன்னார் வளைகுடாவை விட அந்தமான் கடற்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. எண்ணற்ற புகழ் கொண்ட மன்னார் வளைகுடாவில், பல்வேறு சிறப்புகளை கொண்ட உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில், பலரும் அறியாத உயிரினம் "ஆந்தோசா'. பவளப்பாறை இனத்தை சேர்ந்த இவற்றை, "கடல் தாமரை' என்றும் அழைக்கின்றனர். இது, குடல் இல்லாத உயிரினம். உறிஞ்சி உண்ணும் பழக்கம் கொண்ட இது, மணல் பாங்கான பகுதியில் மட்டுமே இருக்கும். எப்போதும் மணலுக்குள் புதைந்து இருப்பது இதன் இயல்பு. இவற்றுக்கு ஏற்ற சூழல் வரும் போது மட்டும் வெளியில் வந்து, தாமரை போல தன் உடலை விரிந்து நிற்கும். அப்போது தன்னை கடந்து செல்லும் உயிரினங்களை இரையாக உறிஞ்சிவிடும். மிகச் சிறிய உயிரினங்களே இவற்றின் உணவாக இருந்தாலும், அவற்றின் சத்துக்களை மட்டுமே இவை உறிஞ்சும். உண்ட பின் ஓடுகளை துப்பிவிடுகிறது. இவற்றால் வேகமாக மற்றொரு இடத்துக்கு செல்லமுடியாது. இந்தியாவில் அந்தமான் கடற்பகுதியில் 252, மன்னார் வளைகுடாவில் 117 வகையும் உள்ளன. லட்சத்தீவு, கட்ச் வளைகுடாவில் குறைந்த அளவில் தான் உள்ளன. கடலில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ளும் தன்மை இவற்றுக்கு உண்டு. இதை கடலின் கண்காணிப்பாளராக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் இவற்றை உணவாக பயன்படுத்துவதில்லை. அதே நேரத்தில், அலங்கார பொருளுக்காக அறுவடை செய்யப்படுகிறது. பயன்பாடு குறைவு என்பதால், இங்கு இதன் அழிவு குறைவு. தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பேய் கணவாய் மீன்களுக்கு நிகராக, இவற்றின் மாமிசத்தை வறுத்து உண்ணும் வழக்கம் உள்ளது.
Thanks. .dinamalar.com