திங்கள், 31 மே, 2010

இந்தியாவில் 2020ல் 16 லட்சம் பேர் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.


இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்
போர்ச்சுகீசிய நாடுகளிலிருந்து வந்த வணிகர்கள் மூலம் 16 ம் நூற்றாண்டுகளில் புகையிலை இந்தியாவுக்கு அறிமுகம் ஆனது. தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் 2020ல் 16 லட்சம் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.


புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள், நன்மைகள் குறித்து மதுரை மனநல டாக்டர் சி. ராமசுப்பிரமணியன், டாக்டர் ரத்தினவேல், உளவியல் நிபுணர் ரவிச்சந்திரன், பேராசிரியர் கண்ணன் கூறியதாவது :புகையிலையால், நுரையீரல், கண் உட்பட உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கும். புகையிலை தொடர்பான சிகரெட், பீடி போன்றவற்றை வாங்க தினமும் 20 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளதால், பொருளாதார பாதிப்பும் ஏற்படுகிறது. தோலின் தன்மைமாறி, சுருக்கங்கள் ஏற்பட்டு, எண்ணெய் பசை குறைந்து, இளம் வயதிலேயே முதுமை அடைந்தது போல் இருக்கும். எப்போதும் வாய் நாற்றம், இருமல் இருக்கும். பற்கள் மஞ்சளாகவும், கை விரல்கள் கறுப்பாகவும், ரத்தசோகை பிடித்தது போல் இருக்கும்.

புகையை கைவிடுவது எளிது : புகைப்பதை ஏன் விட்டுவிட வேண்டும் என்று பட்டியல் தயார் செய்ய வேண்டும். நன்மைகளை கைப்பட எழுதி வைத்திருக்க வேண்டும். எப்போது, ஏன், யாருடன், எந்த சூழலில் புகைபிடிக்கிறோம் என அட்டவணை தயார் செய்ய வேண்டும். லைட்டர், தீப்பெட்டி, ஆஷ்டிரே, மீதமுள்ள சிகரெட்டை, காலி பாக்ஸ்களை வீட்டிற்கு வெளியே போட்டு விட வேண்டும். வீட்டை நறுமண பினாயில் போட்டு சுத்தமாக கழுவி வைக்க வேண்டும். நெருக்கமான உறவினர்கள், நண்பர்களிடம் எந்த தேதியிலிருந்து புகைபிடிப்பதை விட்டுவிட போகிறீர்கள் என தெரிவிக்க வேண்டும். பின் சொன்னதை செய்ய வேண்டும்.
புகைப்பதை விட்டுவிட்டால் ஏற்படும் நன்மைகள் : ரத்தஅழுத்தம், நாடித்துடிப்பும் சாதாரண நிலைக்கு வரும். கை, காலில் அபரிமிதமான சூடு உஷ்ணம் குறையும். உடலில் தீங்கு விளைவிக்கும் கார்பன் மோனாக்ஸைடு குறையும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். நாக்கில் சரியான ருசி தெரியவரும். மாரடைப்பு வாய்ப்பு குறையும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. இருவாரங்களுக்கு பின், ரத்தம் ஓட்டம் சீராக இருக்கும். நடக்கவே சிரமப்பட்டவர்கள், நுரையீரல் விரிவடைந்து பிராண வாய்வு அதிகமாக சென்றுவிடுவதினால் மிக வேகமாக நடக்கவும், ஓடவும் முடியும். ஒன்பது மாதங்களுக்கு பின், இருமல், மூக்கடைப்பு குறைந்து சளி வருவது நிற்கும். ஓராண்டிற்கு பின், மாரடைப்பு வருவது பாதியாக குறையும். ஐந்து ஆண்டுகளுக்கு பின், பக்கவாதம், மாரடைப்பு, ரத்தஅழுத்தத்தினால் மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவற்றிலிருந்து விடுதலை ஏற்படும்.பத்தாண்டுகளுக்கு பின், புற்றுநோயால் இறப்பது பாதியாக குறையும். பதினைந்து ஆண்டுகளுக்கு பின், புகைப்பதை நிச்சயம் விட்டுவிட முடியும் என்று உறுதியாக நம்பி, மற்றவர்களையும் இதைப்போல நடந்துகொள்ளும் வகையில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

நன்றி: அப்துல் ரசாக் (துபாய்)

ஞாயிறு, 30 மே, 2010

கண்ணாடி வீட்டிலிருந்து கல்...

மனித உரிமை மீறல் என்பது சர்வதேச அளவில் தடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. நாகரிக சமுதாயத்தின் மீதுள்ள மிகப்பெரிய கறை இதுவாகத்தான் இருக்கும். ஒரு மனிதன் தன்மானத்துடன் செயல்படவும் அவனது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படாமல் வாழவும் வழிவகுப்பதுதான் மனித உரிமைக்கான அடிப்படை இலக்கணம். இது காவல்துறையாலோ ராணுவத்தாலோ அரசாலோ மறுக்கப்படுவது என்பது தடுக்கப்பட்டே தீர வேண்டும்.
உலகமயமாக்கலில் விளையும் நன்மை என்று குறிப்பிட முடியுமானால் அது உலகளாவிய அளவில் மனித உரிமை மீறலுக்கு எதிரான சிந்தனை உருவாகியிருப்பதுதான். சில நாடுகளில் மனித உரிமை மீறல்கள் பொருள்படுத்தப்படாமல் அங்கீகரிக்கப்படும்போது உலகிலுள்ள ஏனைய நாடுகளில் அந்த நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது என்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அவமானமல்ல, தண்டனை!
சட்டத்தின் மேலாண்மையை மதிக்கும் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு நபரும் அவர் எத்தனை பெரிய பதவியை வகித்தாலும் மனித உரிமை மீறல் குற்றத்திலிருந்து மன்னிக்கப்படலாகாது. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், சித்திரவதை போன்ற குற்றங்கள் மனித நாகரிகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மன்னிக்கப்படக்கூடாத குற்றங்கள். இவை எந்த நாட்டில் செய்யப்பட்டாலும், நடைபெற்றாலும், உலகின் எந்த ஒரு மூலையில் நிகழ்ந்தாலும், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உலகின் எந்த நாட்டிலும் இடமளிக்கலாகாது. மன்னிப்பும் கிடையாது.
பிற உலக நாடுகளின் நீதிமன்றங்களில், இன்னொரு நாட்டின் மனித உரிமை மீறல் குற்றவாளிக்குத் தண்டனை வழங்க முடியாதுதான். ஆனால், அந்த நாடுகள் இந்தக் குற்றவாளிகளுக்கு அனுமதி மறுப்பதன் மூலம் தண்டனை வழங்க முடியும். ஒரு மனித உரிமைக் குற்றவாளியைச் சிறையில் அடைத்துத் தண்டிக்க முடியாதபோது அவர் சார்ந்த நாடு தண்டிக்காதபோது சர்வதேச அரங்கில் அவருக்கு எதிராக நடத்தப்படும் புறக்கணிப்பு என்பதுதான் சரியான தண்டனையாக இருக்கும்.
தங்களது நாடுகளில் இனப்படுகொலை நடத்தி, மக்களைச் சித்திரவதைக்கு உள்படுத்தும் அதிபர்கள் நமக்குத் தெரிந்தே பலர் இருக்கிறார்கள். இவர்கள் கண்துடைப்புத் தேர்தலை நடத்தி, தங்களைத் தாங்களே மீண்டும் அதிபர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுடன், தங்களது கைப்பாவைகளைப் பிரதமர்களாகவும் அமைச்சர்களாகவும் அமர்த்தி தங்களது இனப்படுகொலையை மக்களாட்சி என்கிற மாயமுலாம் பூசி மறைத்துவிடுகிறார்கள். இவர்களைத் தண்டிப்பதுதான் எப்படி?
உலக அரங்கில் இதுபோன்ற நபர்களின் மனித உரிமை மீறல்களைப் படம்பிடித்துக் காட்டி சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதுதானே ஒரே வழி. பல நாடுகளில் அந்த நாட்டுக் குடியுரிமை மற்றும் குடியேற்றச் சட்டங்கள் திருத்தப்பட்டு, மனித உரிமை மீறல்களில் தொடர்புடையவர்களுக்கு அந்த நாடுகளில் நுழைவு அனுமதி மறுக்கப்படுகிறது.
கனடா நாட்டு நிர்வாகம் 2004-ம் ஆண்டில், நுழைவு அனுமதி வழங்கும் துறையில் நவீன போர்க்குற்றப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியது. இந்தப் பிரிவு அந்த நாட்டுக்குள் குடியேறவோ
சுற்றுப்பயணம் செய்யவோ நுழைவு அனுமதி கேட்கும் விண்ணப்பங்களை ஆய்ந்து மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு அனுமதியை மறுக்கிறது.
இதேபோல உலகில் உள்ள எல்லா நாடுகளும் தங்களது குடியேற்ற மற்றும் நுழைவு அனுமதிச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கு அனுமதி மறுத்து சர்வதேசப் புறக்கணிப்புக்கு ஆட்படுத்த வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையும். இதுவரை எல்லாம் நலமே.
அதேநேரத்தில், கனடா அரசு சமீபகாலமாக இந்திய ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் புலனாய்வுத்துறையில் பணியாற்றும் மற்றும் புலனாய்வுத்துறையில் பணியாற்றியவர்களுக்கு நுழைவு அனுமதி மறுத்திருக்கிறது என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் மேலே குறிப்பிட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள் காஷ்மீரத்திலும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளிலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள் என்று கனடா அரசு கருதுவதாகத் தெரிகிறது. இதைவிட விபரீதமான சிந்தனை எதுவுமே இருக்க முடியாது.
இராக்கில் நடக்காத மனித உரிமை மீறலா? அப்படியானால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் அதிபர்களுக்கே கூட கனடா நுழைவு அனுமதி மறுக்க வேண்டுமே! இலங்கையில் இனப்படுகொலை நடந்ததையும் தொடரும் மனித உரிமை மீறல்களையும் அனுமதிப்பவர்களுக்கு, இந்திய ராணுவம் செய்வதுமட்டும் மனித உரிமை மீறலாகத் தெரிவது ஆச்சரியம். அதுபோகட்டும். சோமாலியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் கனடா நாட்டு ராணுவம் நாடு கடந்து நடத்தும் மனித உரிமை மீறல்களைவிட பெரிய உரிமை மீறல் இந்தியாவில் நடந்துவிட்டதா என்ன?
இப்படி ஓர் அவப்பெயர் இந்தியாவுக்கு வருவதற்குக் காரணம், இந்திய அரசு மனித உரிமை மீறல் பிரச்னையில் முழுமனதுடனான நடவடிக்கைகளை முடுக்கிவிடாமல் இருப்பதுதான். சமீபத்தில் காஷ்மீரத்தில் நடந்த சோபியன் இளம்பெண்கள் விஷயத்தில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகத் துணிவுடன் நடவடிக்கை எடுக்காமல் தவறை மூடி மறைக்கப் பார்த்த சம்பவம் ஓர் உதாரணம்.
காவல்துறையானாலும், ராணுவம் ஆனாலும் மனித உரிமை மீறல் குற்றங்களில் மன்னிப்பு கிடையாது என்பதை மத்திய, மாநில அரசுகள் தெளிவுபடுத்தும் விதத்தில் நடவடிக்கை எடுக்காமல் போவதால், ஒருசில நிகழ்வுகள் சர்வதேச அளவில் ஒட்டுமொத்த இந்திய ராணுவத்துக்கும், எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், ஏன், இந்தியாவுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி விடுகிறது என்பதை நமது ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லை எறிந்திருக்கிறது கனடா என்றாலும், மனித உரிமை மீறல் பிரச்னை சர்வதேச அளவில் விவாதிக்கப்படுகிறதே, அதுவரை மகிழ்ச்சி. நல்லதொரு முடிவு ஏற்படட்டும்!

திங்கள், 10 மே, 2010

துபையில் முனைவர் அப்துல்லாஹ்வை வரவேற்க ஒன்று திரண்ட சமுதாயம் !!!(ஒற்றுமைக்கு ஓர் முன்னோடி)

வல்ல ரஹ்மானின் வற்றாத பெருங் கருணையால் நேற்று (08 -05 -2010) சனிக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு துபையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஓரணியில் ஒன்று திரண்டு முனைவர் அப்துல்லாஹ்வை வரவேற்கும் மாபெரும் இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றை மிகச் சிறப்புடன் நடத்தியது.

இந்த இனிய நிகழ்ச்சி தமுமுக துபை மண்டலத் தலைவர் மதுக்கூர் அப்துல் காதர் தலைமையில் துவங்கியது. சகோதரர் பிலால் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி துவக்கி வைத்தார். சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பாக கீழை மஃரூஃப் நிகழ்ச்சியின் அவசியம் குறித்து விளக்கினார். அதனைத் தொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமீரக ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் முஹம்மது, முனைவர் அப்துல்லாஹ் அவர்கள் குறித்த அறிமுக உரையை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) கலந்து கொண்டு எழுச்சி மிகு உரை ஒன்றை ஆற்றினார். இந்நிகழ்ச்சியினை காண வரலாறு காணாத மக்கள் கூட்டம் அலைமோதியது.

அவர் தனது உரையில் சிலைகளை வழிபடும் ஆத்திகராய் பிறந்து, அறியாத வாலிப பருவத்தில் பெரியாருக்கு கவிதை எழுதிய பொழுது ஒரு ஆர்வ கோளாறில் சேசாஷம் என்ற பெயரை பெரியார்தாசன் என மாற்றிய பிறகு நாத்திகராய் மாறினேன். 2000-இல் தன் நண்பர் ஸிராஜுதீன் மூலம் கிடைத்த சிந்தனைக் கிளர்ச்சி என்னை உண்மையான இறைவனை தேடத் தூண்டியது. அதன் பிறகு 2007க்கு பிறகு ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் நான் உண்மையான ஏக இறைவனை தெரிந்து கொண்டேன் என்றார். மெய்யானத்தையும், விஞ்ஞானத்தையும் ஒருங்கே பெறும் மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது என தனது உரையில் தனக்கே உரிய நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

எதையும் இறைவனிடம் மட்டுமே கேட்க வேண்டும், இறைவனுக்கு ஒருபோதும் இணை வைத்து விடக்கூடாது என்ற உன்னதமான தவ்ஹீதை எடுத்துச் சொல்லி, ஒற்றுமையுடன் அனைவரும் திகழ வேண்டும். நாளைய மறுமையில் அனைத்து முஸ்லிம்களும் சுவனம் செல்ல வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உரையாற்றிய விதம் அனைவரையும் பரவசப்படுத்தியது. அவருடைய உணர்வுபூர்வமான உரைக்கு கிடையில் மக்கள் அல்லாஹ் அக்பர் என உற்சாகத்துடன் எழுப்பிய பதிலுரைகள் அறிஞர் அப்துல்லா{ஹக்கு நல்ல வரவேற்பாக திகழ்ந்தது. சுமார் 1500க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பயன் அடைந்தார்கள்.
இறுதியில் இஸ்லாமிய அழைப்பாளர் எஸ்.எம்.புஹாரி, நிறைவுரையாற்றினார். பன்னாட்டு இஸ்லாமிய கழத்தின் சார்பில் வருகை தந்த முனைவர் அப்துல்லாஹ் அவர்களை நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க நிகழ்ச்சியில் பங்கேற்க உதவி பன்னாட்டு இஸ்லாமிய கழகத்தின் தலைவர் அப்துல் கதீம், துணைத் தலைவர் குத்தாலம் அஷ்ரஃப் மற்றும் லியாகத்அலி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தமுமுக துபை மண்டல நிர்வாகிகள் மொஹிதீன், கலீல், ஷா{ஹல் உள்ளிட்டவர் தலைமையிலான அணியும், இதஜ சார்பில் .எஸ் இபுராஹீம், ஷாஜித் உள்ளிட்டவர்களான அணியும், தவ்ஹீத் இல்லம் சார்பில் அதிரை ஜமால், ஷா{ஹல் உள்ளிட்டவர்கள் தலைமையிலான அணியும், ஜாக் சார்பாக மதுக்கூர் உமர், மற்றும் குலாம், ஜலால் ஆகியோரின் சிறந்த ஏற்பாட்டில் நிகழ்ச்சி இறையருளால் மிகச் சிறப்புடன் நடைபெற்றது. (அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே)

நன்றி : அபூஉமைமா, இப்னு ஹனீஃபா
(செய்தி மற்றும் படங்களை தொகுத்தவர்கள்)

ஞாயிறு, 2 மே, 2010

துபாயில் மாபெரும் இரத்ததான முகாம்
துபாயில் மாபெரும் இரத்ததான முகாம்தமிழகம் மட்டுமல்லாது கடல் கடந்தும் சேவைகளை செய்யும் தமுமுக வின்கிளையான முஸ்லிம் முன்னேற்ற கழகம் துபாய் மண்டலம் சார்பில் 30 -04 -2010அன்று 5 வது மாபெரும் இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யபட்டது .


துபாய்அல்வாசல் மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 50 நபர்களுக்குஅனுமதி பெறப்பட்டு இறுதியில் 65 நபர்கள் இரத்ததானம்செய்தனர்.இந்நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமயசகோதரர்களும் கலந்து கொண்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாகஅமைத்தது .


மண்டலதலைவர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் தலைமை ஏற்க்கசெயலாளர் அதிரை SMA சாகுல் ஹமீது அவர்கள் இறைவசனம் ஓத நிகழ்ச்சி இனிதேதொடங்கியது .நிகழ்ச்சியை சகோதரர் அப்துல் ரவூப் ஒருங்கிணைத்தார் .வாகனஏற்பாடுகளை சகோதரர் மேலப்பாளையம் மதினா ,மேலப்பாளையம் கரீம்.வி.களத்தூர் உமர் பாரூக் அவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் டேய்ரா .அல்கூஸ் ,சோனாப்பூர் கிளை சகோதரர்களும்கலந்து கொண்டனர் அல்ஹம்துல்லிலாஹ் (புகழ் அனைத்தும் இறைவனுக்கே !)