செவ்வாய், 26 அக்டோபர், 2010

இஸ்லாத்தை தழுவினார்

முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரின் உறவினர்
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரின் மனைவி செர்லி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்திலிருந்து தன்னை விடுவித்து இஸ்லாத்தை தழுவிய தகவல் உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.


அபுதாபியிலிருந்து வெளிவரும் அமீரகத்தின் பிரபல ஆங்கில நாளேடான தி நேசனல் இன்று (26அக்டோபர்2010)வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

45 வயதான லாரன் போத் என்கிற அப்பெண்மணி, ஈரானின் பிரபல ஆங்கில தொலைக்காட்சி சேனலான பிரஸ் டிவி யில் பணியாற்றி வருகிறார்.கடந்த 24ந் தேதி ஞாயிறன்று லண்டன் நகரில் நடைபெற்ற உலகளாவிய அமைதி மாநாட்டில் பலத்த ஆரவாரங்களுக்கிடையே, தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிவித்தார்.

பின்னர் தி மெயில் என்ற இங்கிலாந்தின் ஆங்கில நாளேட்டின் நிருபரிடம் பேசிய போது, தான் ஹிஜாப் அணிவதாகவும் ஐவேளை தொழுது வருவதாகவும் மேலும் மது பானங்கள் அருந்துவதையும் பன்றி இறைச்சி சாப்பிடுவதையும் முற்றிலும் நிறுத்திக் கொண்டதாக தெரிவித்தார். இஸ்லாத்தை தழுவியதிலிருந்து இன்று வரை 45 நாள்கள் ஆகிவிட்டன..தனது வாழ்நாளின் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட இத்தனை நாள்களுக்கு மது அருந்தாமல் இருந்ததில்லை என தெரிவித்துள்ள அவர், இரவாகிவிட்டால் யாராவது தமக்கு மது ஊற்றிக் கொடுத்தே ஆக வேண்டும் என்றிருந்த மனநிலையிலிருந்து தாம் முற்றிலும் விடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.

பாலஸ்தீனில் ஊடகத்திற்காக பணியாற்றிய போது இஸ்லாத்தை படிக்கத் தொடங்கியதாக கூறும் இவர், இராக் போருக்கெதிராகவும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரங்கேற்றி வரும் அக்கிரமத்திற்கெதிராகவும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

டோனி பிளேருக்கு சமீபத்தில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்.. முஸ்லிம்களை நீங்கள் பைத்தியக்காரர்களாகவும், அபாயகரமானவர்களாகவும் நீங்கள் பார்க்கிறீர் என விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் வேறொரு மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்ட டோனி பிளேர் தனது உறவினர் ஒருவரின் இஸ்லாமிய பிரவேசம் குறித்து; கருத்து தெரிவிக்கவில்லை.

லாரன் போத்தின் இஸ்லாமிய பிரவேசத்தை பெரும்பாலான முஸ்லிம்கள் வரவேற்றுள்ளனர். நேற்றைய தினம் இணையதளத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் போர்க் குற்றவாளியான டோனி பிளேருக்கு இப்போது நல்லதோர் உறவினர் கிடைத்துள்ளார் என பதிவு செய்துள்ளனர்.

தமிழில் : கொள்ளுமேடு ரிஃபாயி.

சனி, 16 அக்டோபர், 2010

புறக்கணிக்கப்பட்ட சலாம்

இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (சலாம்) கூறுதல் ஆகும்.

இன்றைய காலக்கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து சலாம் கூறி வருகிறோம். நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் சலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6236
முழுமையாக ஸலாம் கூறுவதன் சிறப்பு: -
சிலர் சலாம் கூறும் போது புரியும் படியாகவோ அல்லது முழுமையாகவோ கூறுவதில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் சகாபாக்களிடம் அமர்ந்திருக்கும் போது ஒரு சஹாபி வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் என்றார். நபி (ஸல்) அவர்கள் பத்து என்று கூறினார்கள். சிறிது நேரம் சென்ற பிறகு மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைலக்கும் வரஹ்மத்துல்லாஹி என்று கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் இருபது என்றார்கள். மற்றொரு சஹாபி வந்து அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு என்று கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் முப்பது என்று கூறினார்கள். சஹாபாக்கள் ஆர்வமிகுதியால் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்ட போது, முதலில் சலாம் கூறியவருக்கு பத்து நன்மைகள், இரண்டாவது சலாம் கூறியவருக்கு இருபது நன்மைகள், முன்றாவது சலாம் கூறியவருக்கு முப்பது நன்மைகள் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
‘சலாம்’ எனும் முகமனைப் பரப்ப வேண்டும்:
 நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வருகிறது: -
உங்களிடையே ஸலாத்தைக் கொண்டு பரப்புங்கள். சலாம் சொல்வதால் இரு உள்ளங்களுக்கு இடையே இணக்கம் ஏற்படுகிறது.
நோயாளியிடம் நலம் விசாரிக்கும்படியும், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் -உங்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக என) பதில் சொல்லும்படியும், (உன்னை நம்பிச்) சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படியும், அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், ‘சலாம்’ எனும் முகமனைப் பரப்பும்படியும், விருந்து அழைப்பை ஏற்கும்படியும் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி) , ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 5, அத்தியாயம் 67, எண் 5175)
வீடுகளில் நுழையும் முன் சலாம் கூறுவதன் அவசியம்: -
நம்முடைய வீட்டிலோ அல்லது பிறருடைய வீட்டிலோ நுழையும்போது நம்மில் எத்தனை பேர் சலாம் சொல்லி நுழையக் கூடியவர்களாக இருக்கிறோம்?. பிறருடைய வீட்டில் நுழையும் போது சமையல் வாசனை முக்கைத் துளைத்தவுடன் இன்று என்ன பிரியானி சமையலா? என்று கேட்வாறு உள்ளே நுழைகிறோம். ஆனால் இஸலாம் வலியுறுத்திக் கூறும் சலாம் சொல்வதில்லை அல்லது மறந்து விடுகிறோம்.
அத்தியாயம் 24, ஸூரத்துந் நூர் (பேரொளி), வசனம் 27 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
நபி(ஸல்) அவர்கள் (சபையோருக்கு அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6244
கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறுதல்: -
கணவன் மனைவிக்கும், பெரியவர் சிறியவருக்கும் சலாம் கூறக் கூடாது என்ற தவறான எண்ணம் நம்மிடையே காணப்படுகிறது. இது தவறானதாகும். நபி (ஸல்) அவர்கள் வீட்டிலே நுழையுமுன் மனைவிகளுக்கும், சிறியவர்களுக்கும் முந்திக்கொண்டு சலாம் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங் குழுவினருக்கும் (முதலில்) சலாம் (முகமன்) சொல்லட்டும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6231
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறுதல்:
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாம் கூறலாமா அல்லது அவர்களுடைய சலாத்திற்கு பதில் கூறலாமா? என்பதில் ஒரு சில அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரும்பாலான அறிஞர்கள் மாற்றுமத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதை ஆதரிக்கின்றார்கள்.
அத்தியாயம் 4, ஸூரத்துன்னிஸாவு (பெண்கள், வசனம் 86 ல் அல்லாஹ் கூறுகிறான்: -
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு மட்டும் என்று அல்லாஹ் குறிப்பிடவில்லை. மேலும் மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கும் சலாம் கூறுவதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் பால் நல்லெண்ணம் கொண்டவர்களாக ஆகுவதற்குரிய சந்தர்ப்பமும் சகோதரத்துவமும் அதிகரிக்கும்.
மற்ற முகமன் கூறுவதிலுள்ள சிக்கல்கள்: -
இன்றைய காலக்கட்டத்தில் வழக்கத்தில் வணக்கம், நல்ல காலை பொழுது அல்லது நல்ல மாலைப் பொழுது, காலை, மாலை வணக்கம் போன்ற பலவிதமான முகமன்கள் இருக்கின்றன. அவைகளை எல்லா நேரங்களிலும் அல்லது எல்லா சூழ் நிலைகளிலும் பொருந்தக் கூடியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஒருவருடைய மனைவியோ அல்லது வேறு உறவினரோ இறந்து அவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்ற வேளையில் அவரிடம் சென்று Good Morning அல்லது Good Evenining என்று கூறினால் அது எப்படி அவரை கேலிக்குரியதாக்கும் என நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு மனிதர்களால் உருவாக்கப்பட்ட முகமன்கள் அனைத்தும் குறையுடைதாகவே இருக்கிறது.
ஆனால் அனைத்தும் அறிந்தவனான அல்லாஹ் நமக்கு கற்றுத்தந்த இந்த அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) என்ற இந்த முகமன் காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரத்திலும், துக்கம், இன்பம் போன்ற எல்லா சூழ்நிலைகளிலும் ஒருவருக்கு கூறுவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.
எனவே சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வால் அருளப்பட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட சலாத்தை நாம் ஒவ்வொருவரும் மற்றவரிடம் பரப்பி நம்முடைய உள்ளங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வல்ல அல்லாஹ் அருள்புரிவானாகவும்.

நன்றி- சுவனத் தென்றல்.காம்,

வியாழன், 14 அக்டோபர், 2010

இஸ்லாமிய ஒளியில் தலைமைத்துவம்.

'முஸ்லிம்களின் கூட்டமைப்பையும் அவர்களது தலைவரையும் நீங்கள் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள்.' (புகாரி)


'மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்' (புகாரி, முஸ்லிம்)

மேலும் இஸ்லாமிய உம்மத்தின் அடித்தளமே அதன் தலைமைத்துவத்தின் மீதே கட்டியெழுப்பட்டுள்ளது என்பதைத்தான் உமர் (ரலி) இப்படி இயம்பினாhர்;கள் 'நிச்சயமாக கூட்டமைப்பு இன்றி இஸ்லாம் இல்லை தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பு இல்லை.' (ஸுனன் அத்தாரமி)
தலைமைக்கு வேறெந்த மதமும் கொடுக்காத முக்கியத்துவத்தை கொடுக்கும் அதே வேளை அத்தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகளை பற்றி குர்ஆனும் அதன் நடைமுறை விளக்கமான பெருமானார் (ஸல்) வாழ்வும் நமக்கு வழி காட்டுகின்றன.

அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல் அஹ்ஜாப் -21)


தலைமைக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகள்
1. தக்வா - தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பாக இஸ்லாம் தக்வாவை தான் கருதுகிறது. 'மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்' (புகாரி முஸ்லிம்) எனும் நபி மொழிக்கு ஏற்ப இறைவனிடம் தன் பொறுப்பு குறித்து பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சம் உள்ளவராகவும் தன் செயல்களுக்குரிய கூலியை மக்களிடமிருந்து எதிர்பார்காமல் அல்லஹ்விடம் மட்டுமே எதிர்பார்க்க கூடிய தலைவர்களையே இஸ்லாம் எதிர்பார்கின்றது.
2. அறிவு - வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் இஸ்லாம் வழி எனும் அளவில் இஸ்லாத்தை பற்றிய முழுமையான ஞானமும், மாறி வரும் காலச்சூழலுக்கேற்ப இஸ்லாம் எதிர்கொள்ளும் நவீன பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வு சொல்ல வேண்டியவராய் இருத்தல் அவசியம். மேலும் இஸ்லாம் தவிர்த்த பிற ஜாஹிலிய்ய கொள்கைகளை பற்றியும் விரிவான அறிவு கொண்டவராய் இருத்தலின் அவசியத்தை பற்றி உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுகையில் இஸ்லாமிய அறிவை மட்டுமே பெற்றிருந்து, ஜாஹிலிய்யாவை அறியாத ஒருவன் இஸ்லாத்தையே அழித்து விடுவானோ என அஞ்சுகிறேன் என்று குறிப்பிட்டார்கள்.

3. உறுதி கொண்ட நெஞ்சம் - 'அல்லாஹ்விற்கு மிக உவப்பான செயல்கள் யாதெனில் அதனை செய்பவர் தொடர்சியாக செய்வதே' (புகாரி, முஸ்லிம்) எனும் நபிமொழிக்கேற்ப எடுத்துக் கொண்ட காரியம் அல்லாஹ்வுக்கு உவப்பான ஒன்று எனில் அதை எத்துணை எதிர்ப்புகள் வந்தாலும் அதை முடிக்கக் கூடிய திறன் உடையவராக தலைமை இருத்தல் அவசியம். எத்தனை எதிர்ப்புகள் வந்த போதிலும் மனங்குன்றி விடாமல் நெஞ்சுரம் மிக்க தலைமை இஸ்லாமிய பார்வையில் மிக தேவையான ஒன்றாகும்.
4. நிலைமையை கணிக்கும் திறன் - தனது பலம், பலவீனத்தை பற்றி இஸ்லாமிய தலைமை தெரிந்து வைத்திருப்பதுடன் எதிரிகளை எடைபோடும் ஆற்றல் கொண்டவராய் இருக்க வேண்டும். பார்ப்பதற்கு வெளிப்படையாக சாதகமான சூழல் போன்று தெரியாவிட்டாலும் தொலைநோக்கு பார்வையுடன் நீண்ட கால இலட்சியத்தை கொண்டு செயல்பட வேண்டும். ஹீதைபியா உடன்படிக்கையின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறை மிகச்சிறந்த உதாரணம்.

5. நீதி செலுத்துதல் - தலைவராக இருக்க கூடியவர்கள் எந்த சொந்தங்கள், இரத்த பந்தங்கள், செல்வாக்கு, அதிகாரத்துக்கும் பணியாமல் சரியான முறையில் நீதி வழங்க கூடியவர்களாக இருக்க வேண்டும். 'மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும், நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது.' (5:8)
6. திடவுறுதி, பொறுமை, வீரம் - இம்மூன்று பண்புகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இஸ்லாமிய
பாதையானது அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்கக் கூடிய மிகப்பெரும் பனி ஆதலால் பல்வேறு குறுக்கீடுகள் வரும். இடைத்தடங்கல்;களையும், வாய்ப்புகள் நழுவிப் போவதையும் தீரத்துடன் பொறுத்து செயல்படக் கூடியவராகவும், தனக்கு ஏற்படக்கூடிய துன்பங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்ளக் கூடியவராக தலைமை இருத்தல் அவசியம்.
7. இஸ்திகாமத் - சத்தியப் பாதையில் இருந்து தன்னை திருப்பி விட எவ்வளவோ உபாயங்களை மேற்கொண்ட போதும் இன்னல்களை கொடுத்த போதும் நிலைகுலையாமல் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, இம்மனிதர்கள் சூரியனை எனது ஒரு கையிலும் சந்திரனை மறுகையிலும் கொண்டு வந்து வைத்தாலும் கூட நான் இதனை கை விடமாட்டேன், அல்லாஹ் எனக்கு வெற்றியைத் தருவான் அல்லது நான் இதன் வழியில் செத்து மடிவேண்' என்று பெருமானார் (ஸல்) அவர்கள் நிலைகுலையாமல் சூளுரைத்தது போன்ற தன்மை உடையவராக தலைமை இருத்தல் அவசியம்.

8. பொது அறிவு திறன் - இஸ்லாமிய தலைமையானது எப்படி பெருமானார் (ஸல்) அவர்கள் தன் தோழர்களின் பலம், பலவீனத்தை புரிந்து அவரவர் இயல்புக்கேற்ற வகையில் வேலையைக் கொடுத்தார்களோ அது போல் தனக்கு கீழ் உள்ள தொண்டர்களை புரிந்து கொண்டு, வேலையை பகிர்ந்து கொடுக்க வேண்டும். தமது எண்ணங்களையம், திட்;டங்களையும், கொள்கைகளையும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு 'சொல்வதை தெளிவாக நேரடியாக சொல்லுங்கள்' எனும் இறைவாக்கியத்திற்கேற்ப தெளிவாக சொல்லக் கூடியவராய் இருத்தல் வேண்டும்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் பேச்சு தெளிவான வார்த்தைகளாகவே காணப்பட்டது. அதனை கேட்ட அனைவரும் எளிதில் விளங்கிக் கொண்டனர். (அபூதாவூத்)
நான் சுருக்கமாக, ஆனால் அதிக விளக்கமுள்ள வார்த்தைகளை பேசச்கூடியவனாக அனுப்பப்பட்டுள்ளேன்.(புகாரி)
9. சேவை மனப்பான்மை - 'சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்' (அத் தாரமி) எனும் நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல் வேண்டும்.

10. மஷீரா - தன்னிச்சையாக முடிவெடுக்காமல் இறையச்சமும் ஞானமும் நிரம்பிய மார்க்க அறிஞர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க கூடியவராக தலைவர் இருத்தல் வேண்டும். 'இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வோர் காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள்' (ஷீரா 38) சகல காரியங்களிலும் அவர்களிடம் கலந்தாலோசிப்பீராக (ஆல இம்ரான்- 159)
நன்றி: துபை அப்துல் ரசாக்

வெள்ளி, 1 அக்டோபர், 2010

கட்டப் பஞ்சாயத்து - இந்தியாவின் முன்னணி சட்ட நிபுணர்கள் கருத்து

உலகமெங்கும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மஸ்ஜித் வழக்கில் நேற்று மாலை 5 மணி அளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
அந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்றும், அந்த இடத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதியை கோயிலுக்கும், இன்னொரு பகுதியை பள்ளிவாசலுக்கும், மற்றொரு பகுதியை நிர்மோகி அகோரா விற்கும் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இந்த தீர்ப்பை விசுவ ஹிந்து பரிசத் வரவேற்றுள்ளது.

இத்தீர்ப்பு பலருக்கும் திகிலூட்டுவதாக பிரபல சட்ட நிபுணர் ராஜீவ் தவான் என்.டி.டி.வி தொலைக்காட்சி பேட்டிக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு என்றும் வர்ணித்துள்ளார். இதையே மற்றுமொரு சட்ட நிபுணரான பி.பி. ராவும் வழிமொழிந்திருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் இது குறித்து யாருக்கும் வெற்றியும்  இல்லை, தோல்வியும் இல்லை என்று கூறியுள்ளது.

சுதீர் குமார் அகர்வால் மற்றும் தர்ம் வீர் சர்மா ஆகிய நீதிபதிகள் ஒரு மாதிரியாகவும் சிபகத்துல்லா கான் வேறு மாதிரியாகவும் தீர்ப்பினை கொடுத்துள்ளனர்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தலைவர்கள் தீர்ப்பு குறித்து டெல்லியில் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய சூழலில் இத்தீர்ப்பை ஏற்றாலும், விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முஸ்லிம்கள்  தரப்பில் கூறப்படுகின்றது