ஞாயிறு, 16 ஜனவரி, 2011

பாராட்டு சான்றிதழ்

அல்-அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் கடந்த 2010 ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் நடத்தப்பட்ட இரத்த தான முகாம் சேவையை பாராட்டி அல்-அய்ன் மண்டல இரத்த வங்கி சார்பில் பாராட்டு சான்றிதழ் கடந்த வியாழனன்று (13 /01 /2011 ) அல்-அய்ன் மண்டல இரத்த வங்கியில் வழங்கப்பட்டது. இச்சான்றிதழை அமீரக  தமுமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் மற்றும் அல்-அய்ன் மண்டல தமுமுக செயலாளர் சகோ  மண்ணை ஹாஜா மைதீன் ஆகியோர் நேரில் சென்று பெற்றுக் கொண்டனர்

வெள்ளி, 14 ஜனவரி, 2011

தாய், தந்தையர்

ஒருவர் நபி அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று கேட்டார். அதற்கு நபி “அவ்விருவரும்தான் உமக்கு சுவர்க்கமும் நரகமும் ஆவார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: இப்னு மாஜ்ஜா

தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தமும் தந்தையின் வெறுப்பில் அல்லாஹ்வின் வெறுப்பும் உள்ளது என்று நபி கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) நூல்: திர்மிதி

ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள்.

அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் அவர்கள் உம்முடையதாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” அல்குர்ஆன் 31:14

பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! அல்குர்ஆன் 17:23

இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! அல்குர்ஆன் 17:244

பெண்கள்

எவருக்கு ஒரு மகள் பிறந்து அதை அவமானப்படுத்தாமல் அதைவிட ஆண் மகனுக்கு அதிகச் சலுகை காட்டாமல் வளர்க்கிறாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழைவிப்பான். நூல: முஸ்னது அஹமது ஹதீஸ் எண் 1957


அவர்களில் (1400 ஆண்டுகளுக்குமுன் மக்காவாசிகளின்) ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாறாயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது; அவன் கோபமடைகிறான்.
  அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான்.
   எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோஇ (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்) அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? அல்குர்ஆன் 16:58,59

எவருக்கு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்து அவர்களை நன்முறையில் வளர்ப்பாரோ, அவரை அவர்கள் நரகிலிருந்து காப்பற்றுவார்கள். நூல்: முஸ்லிம்
   நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். அல்குர்ஆன் 17:31
அன்று பெண் குழந்தை பிறந்தவுடன் உயிரோடு புதைத்தார்கள். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பிறப்பதற்கு முன்பே ஆணா, பெண்ணா என்றறிந்து பெண்ணாயிருந்தால் கருவிலேயே அழித்து விடுகிறார்கள். உண்மையில் இதுவும் ஒரு கொலைதான்.
   அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! மக்கள் வினவினார்கள் “அல்லாஹ்வின் தூதரே (இழிவடையட்டும் என்றீர்களே) யார்?” முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்” என்று பதலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.

பெற்றோரை கொடுமைப்படுத்துவோர் இவ்வுலகிலேயே தண்டனையை அடைவர்!
   பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ


பெற்றோரின் திருப்தி

பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை அல்லாஹ் திருப்தியடைய மாட்டான் என்று நபி கூறியதும் அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா? என்று கேட்கப்பட்டதற்கு, ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான் என்று நபி பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), முப்ரத் அல் புகாரி

பெற்றோரை பேணுதலும் ஜிஹாத்
ஜாஹிமா(ரழி) அவர்கள் நபி அவர்களிடம் வந்து இறைத்தூதர் அவர்களே! நான் போரில் கலந்து கொள்ள நாடுகிறேன் என்று கூறினார். உனக்கு தாய் உண்டா? என்று கேட்டதும் ஆம் என்றார். அவளை (கவனிப்பதை) தேர்ந்தெடுத்துக்கொள். அவளின் இரு கால்களின் அடியில் தான் சொர்க்கம் உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஆவியா இப்னு ஜாஹிமா(ரழி) அஹ்மத், நஸயீ, ஹாகிம், தப்ரானீ)

அல்லாஹ்வின் தூதர் நமக்கு கூறிச்சென்ற அறிவுரைகளை மனதில் நிறுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெருவோமாக!

நன்றி-  ரீட் இஸ்லாம் .நெட்

சனி, 1 ஜனவரி, 2011

முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் காவல்துறை செயல்பாடுகள் த.மு.மு.க. கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

அண்மையில் வெளியிட்ட (30.12.2010) அறிக்கையொன்றில் முதல்வர் கலைஞர், முஸ்லிம் சமுதாயத்தின் மீது மிகவும் அக்கறைக் கொண்டவராகத் தன்னைக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது வார்த்தைக்கு முற்றிலும் முரணாகவே தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன.


சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் தீவிரவாதிகளைப் பிடிக்கும் பயிற்சி ஒத்திகையை காவல்துறை நடத்தியது. அதில் நடித்த தீவிரவாதிகளுக்கு, ஒட்டுத்தாடிகளை வைத்து முஸ்லிம்களைப் போல் தோற்றம் கொடுத்திருந்தது. அந்தப் படங்கள் பத்திரிகைகளிலும் வெளிவந்தன.

இதற்கு தமுமுக கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளைப் போல சித்தரிப்பது சங்பரிவாரத்தின் செயல்திட்டம் ஆகும். அதைத் தமிழக அரசு தீவிரமாகப் பின்பற்றி வருகிறது போலும்.

மீண்டும் ஈரோட்டில் நடந்த தீவிரவாதிகள் வேட்டை ஒத்திகையிலும் முஸ்லிம்கள்தான் தீவிரவாதிகள் என்பது போல காவல்துறை சித்தரித்துள்ளது.

காவல்துறையைத் தனது நேரடி பொறுப்பில் வைத்துள்ள முதல்வர், இப்போக்கை ஊக்குவிக்கிறார் என இதன்மூலம் தெரிகிறது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையால் முஸ்லிம்கள் மிகுந்த மனவேதனைக்குள்ளாகியுள்ளனர்.

முஸ்-ம்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் பாசிசப் போக்கிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு இனி இத்தகைய தீய சித்தரிப்புகளில் ஈடுபடாமல் இருக்க அரசும் காவல்துறையும் உறுதியளிக்க வேண்டும்.

இல்லையேல், மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டங்களை இந்த அநீதிக்கு எதிராக நடத்த நேரிடும் என தமுமுக எச்சரிக்கிறது.