வெள்ளி, 17 டிசம்பர், 2010

அல்-அய்னில் நடைபெற்ற இரத்த தான முகாம்

அல்- அய்ன் மண்டல தமுமுக சார்பில் இந்த ஆண்டின் இரண்டாவது இரத்த தான முகாம் 17/12/2010 வெள்ளியன்று மாலை  அல்- அய்ன் டவுன் சென்டரில் அமீரக தமுமுக செயலாளர் சகோதரர் யாஸீன் நூருல்லாஹ் அமீரக தமுமுக துணை செயலாளர் சகோதரர் டாக்டர் அப்துல் காதர் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றது.
அல்- அய்ன் மண்டல தமுமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்த இந்நிகழ்வில் அல்- அய்ன் மண்டல இரத்த வங்கிக்காக நடமாடும் இரத்த சேகரிப்பு பேருந்து (mobile blood bank) கொண்டு வரப்பட்டு இரத்தம் சேகரிக்கப் பட்டது.
அதிக  அளவில் இரத்த தானம் செய்ய சகோதரர்கள் பெருமளவில் ஆர்வத்துடன் குழுமினர். மருத்துவரின் பரிசோதனையின் பேரில் 60 நபர்கள் மாத்திரமே தானம் வழங்க முடிந்தது.
இம்முகாமுக்காக என்.சி.இ.கேம்ப்,கத்தாரா,ஜிம்மி,கிளின்கோ மற்றும் மஸியாத் கிளைகளிலிருந்தும் அல்- அய்னின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சகோதரர்கள் திரண்டு வந்தனர்.
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே..

வெள்ளி, 10 டிசம்பர், 2010

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு – தமுமுக கடும் கண்டனம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:

தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக நேற்று (09.12.10) போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதிகளைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது.

போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்திரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.

சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர்களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பதுபோல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்க செய்து பத்திரிகைகளில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.

உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?

தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள்ளதற்கு தமுமுக வன்மையானக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

மாபெரும் இரத்த தான முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷா அல்லா எதிர் வரும் 17 /12 /2010 வெள்ளிக் கிழமை மாலை 4  மணிக்கு அல்-அய்ன் பங்காளி மார்க்கெட்டில் அல்-அய்ன் மண்டல தமுமுக சார்பில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது. அதில் கழக சகோதரர்கள் பங்கெடுப்பதுடன் இந்த முகாம் வெற்றி பெற துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முகாம் குறித்த தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள். 050- 1386785/050-1131541/050-5752436

கொள்ளுமேடு F . முஹம்மது ரிபாயி
தலைவர்
அல்-அய்ன் மண்டல தமுமுக

திங்கள், 6 டிசம்பர், 2010

டிசம்பர் 6 திணறியது மண்ணை அலைகடலென திரண்டனர் மக்கள் !

லால்பேட்டை/ :டிசம்பர் 6 இந்திய ஜனநாய படுகொலை செய்த கருப்பு நாளாகும், இந்திய உலகளவில் வெட்கி தலைகுனிந்த நாளாகும், அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தை சங்பரிவார் கும்பல்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இந்த நாளை இந்தியா முழுவதும் ஜனநாயக படுகொலை தினமாகவும் கருப்பு தினமாகவும் போராட்டங்கள் எதிர்ப்பு ஊர்வலங்களும் நடத்தி வருகின்றார்கள்.
இந்த டிசம்பர் 6ஐ நமது பகுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக காட்டுமன்னர்கோயில் இல் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது, இப்போராட்டத்திற்கு பல ஊர்களில் இருந்து வாகனங்கள் மூலம் அணி அணியாக மன்னையை நோக்கி அல்லாஹ் அக்பர் என்ற முழக்கத்துடன் காலை 9மணி முதல் சென்றுகொண்டிருந்தார்கள்.
லால்பேட்டையில் இருந்தும் இருசக்கர வாகனங்களிலும் கார் மற்றும் வேன்களில் பெண்கள் உட்பட்ட சிறியவர் முதல் பெரியவர் வரை ஆர்வமுடன் அணிவகுத்து சென்றனர்.
இத்தொடர் முழக்க ஆர்பாட்டத்திற்கு 4 ஆயிரத்திற்கு மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் சமுதாய பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஆர்வமாக எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள்.
இப்போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியும் இதர சமுதாய மற்றும் நமது சமுதாய தோழமை கட்சியை சேர்ந்தவர்கள் பெரும்திரலாக கலந்துகொண்டார்கள்,
இப்போராட்டத்திற்கு H.மெஹராஜ்தீன் தலைமை வகித்தார், வரவேற்பு மற்றும் கண்டன உரையை அப்துல் சமத் வாசித்தார், 3வது வார்டு உறுப்பினர் யாசிர் அரபாத், பேருராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள்  ம ம க நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
தமீமுன் அன்சாரி பேச்சு :
இக்கண்டன ஆர்பாட்டத்திற்கு வந்திருந்த ம ம கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எம். தமீமுன் அன்சாரி பேசுகையில் அறுபது ஆண்டுகளுக்கு மேல் நீதிக்காக காத்திருந்த முஸ்லீம் சமுதாயத்திற்கு அலஹாபாத் உயர்நிதிமன்றம் ஒருதலைபட்சமாக தனது தீர்ப்பை வழங்கியதாகவும், இது கிராமங்களில் நடக்கும் சில கட்டபஞ்சாயத்து தீர்ப்பு போல வழங்கியதாகவும், மேலும் முஸ்லீம்கள் பாபரி மஸ்ஜித் காவி கூட்டங்களால் இடிக்கப்பட்டபோது எந்த அளவுக்கு மனம் உடைந்தார்களோ அதை விட மிகவும் வேதனை அடைந்தார்கள் இந்த தீர்ப்பினால் என்றார், இன்னும் முஸ்லிம்களுக்கு இந்தியா நிதித்துறை மீது நம்பிக்கை உள்ளது அதனால்தான் நாங்கள் உச்சநிதிமன்றத்தை நாடியிருக்கிறோம்,

Powered By Cincopa

மேலும் அவர் பேசுகையில் வரலாறுகளை நினைவு காட்டி இப்ராஹீம் லூடியின் ஆட்சியில் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை ஹிந்துக்கள் கொடுமை படுத்தபடுகிரார்கள் என்றும் இதனால் ஹிந்துக்கள் ஒன்று கூடி ஆப்கானிஸ்தான்னில் ஆட்சி செய்து கொண்டிருந்த பாபர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி நீங்கள் எங்கள் நாட்டை ஆளவேண்டும் எங்களுக்கு நிம்மதியான ஆட்சியை தரவேண்டும். இன்னும் உங்களுடைய ஆட்சியை பற்றி எல்லா தரப்பினரும் நன்றாக கூறி வருகின்றார்கள் என்றதால் பானிபட் போரில் இப்ராஹீம் லூடியை தோற்கடித்து டெல்லியை கைப்பற்றி ஆட்சி செலுத்தினார்,
இக்காலங்களில் பாபரின் தளபதி மிர்பாய் அயோத்திக்கு வரும்போது ஒரு கட்டிடம் அறைகுறையாக இருந்ததை கண்டார், இது யாருடையது என்று கேட்கும்போது, இப்ராஹீம லோடி அவர்களால் பள்ளிவாசல் கட்டப்பட இருந்தது அந்த நேரத்தில் பாபர் அவரை போரில் தோற்கடித்து கொல்லப்பட்டார் இதனால் இந்த முயற்சி பாதியில் நின்றுவிட்டதாக தெரிவித்தனர், உடனே பாபரின் தளபதி மீதமுள்ள கட்டிட வேலைகளை முடித்து பாபர் மஸ்ஜித் உருவாக்கினார் இதுவே பாபரி மஸ்ஜிதின் உண்மை வரலாறாகும்.
அனால் காவி வெறியர்கள் பாபரை ஒரு ஹிந்துக்களுக்கு எதிரி போல சித்தரிக்கிறார்கள், இன்னும் தமீமுன் அன்சாரி கூறுகையில் பாபரை அவரது ஆட்சி காலத்தில் வன்மையாக எதிர்த்து வந்த சீக்கியர் ஒருவர் கூட பாபர் ராமர் கோயிலை இடித்து பள்ளி கட்டியதாக குறிப்பிடவில்லை என்றார்.
தமீமுன் அன்சாரி எச்சரிக்கை :
மேலும் அவர் பேசுகையில் முஸ்லீம்கள் இன்னும் அமைதியாக இருப்பது உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்றுதான், நாங்கள் இந்தியாவில் வாழும் இருபது கோடிக்கு அதிகமான முஸ்லீம்கள் ஒன்று சேர்ந்தால் எப்படி அல்லாஹ் புனித மக்காவை “அபாபில்” பறவைகள் கொண்டு காப்பற்றினனோ அதுபோல நாங்களும் அல்லாஹ்வின் துணையோடு சென்று பள்ளியை கட்டவேண்டி இருக்கும் என்றார்
இறுதியாக தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் முடித்து பெண்கள் இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள், இப்போரட்டத்தினால் காட்டுமன்னர்கோயில் பேருந்து நிலைய சாலை போக்குவரத்து தடைபட்டது, பேருந்துகள் வேறு தடத்தில் மாற்றி விடப்பட்டது. கடைசியாக வந்திருந்தவர்கள் அமைதியாக கலைந்து செல்லும்படியும், பாதுகாப்பு வழங்கிய காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

மறக்கப்படும் இஸ்லாமிய புத்தாண்டு....

இஸ்லாமிய மாதங்களில் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த பந்தங்களையும் சொத்து சுகங்களையும் அல்லாஹ்விற்காக துறந்து சொந்த மண்ணை விட்டு பிரிந்து மதீனா நகருக்குப் பிரவேசித்த அந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமிய புத்தாண்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.
நபியவர்கள் அனைத்தையும் துறந்து மற்றொரு மண்ணில் தஞ்சம் புக வேண்டிய அவசியம் ஏன் உருவானது? என்பது குறித்து ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்து கொள்ள கடமைப்பட்டிருக்கின்றனர்.
மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை ஆகிய இம்மூன்று தீய குணங்களை தன்னகத்தே குடிகொண்டிருந்த ஒரு காட்டரபி சமூகத்தில் பிறந்து அம்மக்களிடையே மண்டிக்கிடந்த இனவெறி குலவெறி என மனித சமூகத்திற்கு ஒவ்வாத கொள்கைகளை எதிர்த்து ஓரிறை கோட்பாட்டை பரப்புரை செய்ததால் சினங்கொண்ட அம் மக்கா நகரத்து காட்டுமிராண்டிகள் அவரை கொலை செய்யத் துணிந்தனர்.
சத்திய மார்கத்தை இப் புவியெங்கும் பரப்பிட சபதம் கொண்ட அம்மாமனிதர் தமது இலட்சியத்தைக் காக்க நாடு துறந்தார் அம்மாபெரும் தியாகத்தை நினைவு கூறுவது இப்புத்தாண்டு தினத்தின் முக்கிய அம்சமாகும்.
ஆனால் இன்றைய சமூகம் அந்த தினத்தை நபிகளார் செய்த தியாகத்தை மறக்கத்துனிந்து விட்டதோ என அஞ்சக்கூடிய அளவிற்கு இந்த நாளை தெரியாமல் இருந்து வருகின்றனர்.
இந்த அவல நிலையைக் களைந்து முஸ்லிம்களின் தேசிய அடையாளங்களில் ஒன்றான இந்த இஸ்லாமிய புத்தாண்டை நினைவில் கொண்டு நபியவர்களைப் போல நாடு துறக்கும் தியாகம் செய்ய நம்மால் முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் இஸ்லாம் தடுத்திருக்கும் பாவமான காரியங்களிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்வேன் என இந்நாளில் நாமனைவரும் சபதம் கொள்வோமாக.
வாசகர்கள் அனைவருக்கும் இனிய இஸ்லாமிய புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்.


டிசம்பர் 6: தொடர் முழக்கப் போராட்டம் ஏன்?- தமிமுன் அன்சாரி

இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளமாகவும், வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்த பாப்ரி மஸ்ஜித், மதவெறி பயங்கரவாதிகளால் 1992, டிச.6 அன்று தகர்க்கப்பட்டது.இந்தியர்களின் அமைதி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை உள்ளிட்ட பண்புகளின் மீதும், மதச்சார்பின்மையின் மீதும் விழுந்த பேரிடியாக அத்துயர நிகழ்வு அமைந்தது. உலக அளவில் இந்திய தேசம் தலை குனிந்தது.பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர்.6ஐ கறுப்பு தினமாக, கடந்த 18 ஆண்டுகளாக தேசம் கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த செப்.29,2010 அன்று பாப்ரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற சுமார் 60 ஆண்டுகால வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்தது. அது தீர்ப்பா? கட்டப்பஞ்சாயத்தா? என்ற விவாதத்துக்கு வழி வகுத்திருக்கிறது. சட்ட நுட்பங்களின் அடிப்படையிலும், ஆவணங்களின் அடிப்படையிலும் தீர்ப்பு வழங்காமல் புராண நம்பிக்கைகளின் அடிப்படையிலும், புதிய பிரச்சனைகள் வரக்கூடாது என்ற நோக்கிலும் அத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக இந்திய சட்ட நிபுணர்களும், செய்தி ஊடகங்களும், அரசியல் தலைவர்களும், அறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சிவில் வழக்கில் இது போன்ற தீர்ப்புகள், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் பல மோசமான தீர்ப்புகள் வெளிவரக் காரணமாகிவிடும் என கண்டித்துள்ளனர். பாப்ரி மஸ்ஜித் இடம் தொடர்பான வழக்கில் மூன்று தரப்பு மனு செய்தார்கள் என்பதற்காக மூன்று பேருக்கு நிலத்தை பிரித்துக் கொடுப்பது என்ன நியாயம்? ஒருவேளை 5 பேர் வழக்கு தொடுத்திருந்தால் 5 பேருக்கும் நீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்குமா? என தேசமே கேள்வி எழுப்புகிறது. அதுவும் நிராகரிக்கப்பட்ட இரண்டு மனுதாரர்களுக்கும் நிலத்தில் சொந்தம் இருப்பதாகக் கூறுவது எந்த வகை சட்ட நீதி என்ற கேள்விக்கு பதில் இல்லை.450 ஆண்டு காலத்துக்கும் மேலாக அனுபவித்த ஒரு சொத்தில் 1528ம் ஆண்டு முதல் 1949 டிச 22 வரை தொழுகை நடத்தப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பான ஆவணங்களை சமர்த்தபின்னரும் அந்த நிலம் முஸ்லிம்களுக்குச் சொந்தமில்லை என்பதும், அங்குதான் ராமர் பிறந்தார் என்பதும், ‘போனால் போகிறது உங்களுக்கும் ஒரு துண்டு நிலம் தருகிறோம்’ என்பதும் அரசமரத்தடியில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து வடிவிலான தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. இதை இத்தோடு விட்டுவிட வேண்டும் என பலர் ‘நல்லெண்ண’ அறிவுரைகளை வழங்குகிறார்கள். பாப்ரி மஸ்ஜிதை இடித்தது போல், நாளை காசியிலும், மதுராவிலும் உள்ள பள்ளிவாசல்களையும் இடிப்போம் என்றும், மேலும் நாடு முழுக்க குறி வைத்திருக்கும் 3 ஆயிரம் பள்ளிவாசல்களையும் கேட்போம் என்றும் விஸ்வஹிந்து பரிசத் கூக்குரலிடுகிறது. இவை குறித்து ‘சமரசம்‘ பேசும் தலைவர்கள் ஏனோ கண்டு கொள்வதில்லை.பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் ‘பெருந்தன்மை’ காட்டினால், மேலும் மூவாயிரம் பள்ளிவாசல்களை இழக்க வேண்டிவருமே என்ற நியாயமான அச்சத்திற்கு யாரும் பதில் சொல்ல முன்வருவதில்லை. இந்நிலையில் நீதிகேட்டு நெடும்பயணத்தை நடத்தி வரும் தமுமுக, தன் கடமைகளைத் தொடர்கிறது. 1995 முதல் மக்களைத் திரட்டி டிசம்பர் 6களில் அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில்:எதிர்வரும் டிசம்பர் 6, 2010 அன்று• பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு குறித்த மேல் முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும்.• பாப்ரி மஸ்ஜிதை இடித்த வழக்கில் ரேபரேலி நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணைகளை விரைவு படுத்தவேண்டும்.• பாப்ரி மஸ்ஜிதை இடித்தவர்கள் குறித்து லிபர்ஹான் கமிஷன் விசாரித்து குற்றம் சாட்டிய அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் நடைபெறும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் நியாயவான்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம். இது மனிதநேயத்திற்கும், மதவெறிக்கும் இடையே நடக்கும் வாழ்வுரிமை போராட்டமாகும்.ஏற்கனவே 18 ஆண்டுகள் போராட்டத்தில் கழிந்து விட்டன. ஆனாலும் சலிப்படைய மாட்டோம். இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும், போராடிக் கொண்டே இருப்போம்.இது குறிப்பிட்ட சமூக மக்களுக்கான போராட்டம் அல்ல. இந்திய அரசியல் சாசன சட்டத்தையும், சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியையும் பாதுகாப்பதற்கான போராட்டம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.அனைத்து சமுதாய சகோதரர்களே, தமிழின உணர்வாளர்களே, திராவிட இயக்கச் சொந்தங்களே, இடதுசாரித் தோழர்களே, ஒடுக்கப்பட்ட சமூகப் போராளிகளே, ஆதிக்க எதிர்ப்பு சிந்தனையாளர்களே.. வாருங்கள். ஒன்றுபடுவோம். நீதிக்காகப் போராடுவோம்.

தமிமுன் அன்சாரியின் Face Book குறிப்பிலிருந்து.....

முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்

முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றால் பல்வேறு அனாச்சாரங்கள் அரங்கேறுவதைப் பார்க்கின்றோம். ரதம் போன்று ஒற்றை ஜரிகைகளாலும் வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற நிகழ்வுகளை "பஞ்சா" என்ற பெயரில் பலர் இந்தியா முழுவதும் செய்து வருகின்றனர். மும்பை, குஜராத், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் மேலப்பாளையம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 

முஹர்ரம் பண்டிகை என்று அழைக்கப்படும் இப்பண்டிகையில்(?) ஹுஸைன் (ரலி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக இப்பண்டிகை(?) கொண்டாடப்பட்டு வருகிறது. முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் நடக்கும் அனாச்சாரங்களைக் கூர்ந்து கவனித்தால் இது இஸ்லாத்தில் உள்ள பண்டிகை அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம். உதாரணமாக முஹர்ரம் பண்டிகையில் தீமிதித்தல், பூக்குளித்தல், உடல் முழுவதும் சந்தனம் பூசி பிச்சை எடுத்து காணிக்கை செலுத்துதல் மேலும் மாற்று மதத்தவர்கள் தம் கடவுளுக்கு ரதம் அமைத்து ஊர்வலம் செல்வது போன்று நம் சகோதரர்களும் இதுபோன்று ரதம் அமைத்து அதனுள் பஞ்சா(கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைக்கின்றனர். இது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முழுக்க முழுக்கத் தழுவியிருக்கிறது. 

முஹர்ரத்தின் முதல் பத்து நாட்களில் இறைவன் ஹலாலாக்கிய மீன், கறி போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்கின்றனர். இதற்காக ஒரு சிறுவனையோ அல்லது வாலிபனையோ பிரத்யேகமாக விரதம் இருக்கச் செய்து பத்தாம் நாள் அலங்கரித்த குதிரையில் ஏற்றி ஊர்வலம் செல்வர். இந்த சிறுவனையும் அவனை ஏற்றி வரும் குதிரையையும் புனிதமாகக் கருதி கண்ணியமாக்குகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் எல்லா நிகழ்வுகளுக்கும் இஸ்லாத்திற்கும் எள் முனையளவும் சம்மந்தமில்லை. மாற்று மதக் கலாச்சாரங்களைப் பின்பற்றி ஷியாக்களால் உருவாக்கப்பட்டவைதான் இவையனைத்தும். குறிப்பாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும். இதன் தாத்பரியம் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடியதாகும். அதாவது ஷியாக்களின் கொள்கையான ஐந்து புனிதர்களை வணங்கும் கொள்கைதான் இந்த பஞ்சாவின் அடிப்படையாகும்.
அதாவது
1) முஹம்மது (ஸல்) அவர்கள்,
2) அவர்களின் திருமகளார் பாத்திமா (ரலி),
3) அலி (ரலி),
4) ஹஸன் (ரலி),
5) ஹுஸைன் (ரலி)
என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் கையாகும். உருது மற்றும் ஹிந்தியில் பாஞ்ச் என்றால் ஐந்து என்று எல்லோரும் அறிவோம். இதை அடிப்படையாகக் கொண்டே பஞ்சா என்ற பெயர் வந்தது. 

இறைவனை ஒருமுகப்படுத்தி அவனுக்கு இணையேதும் கூடாது என்று கூறும் இஸ்லாத்தில் இந்த ஐந்து தெய்வக் கொள்கை எப்படி சாத்தியமாகும். அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவப் பிரச்சாரம் வளர்ந்து பெரும்பாலும் இந்த பண்டிகைகள் உயிரோட்டமற்று ஏதோ கடனுக்காக நடத்தப்படுகின்றன. ஷியாக்களால் உருவாக்கப்பட்டு அது முஸ்லிம்களின் ஒரு பண்டிகையாகவே பல முஸ்லிம்களும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய அரசாங்கமும் இதை முஸ்லிம்களின் பண்டிகையாகவே கருதுகிறது. இந்த இஸ்லாத்தைத் தகர்க்கும் அனாச்சாரங்களை கண்டிக்க வேண்டிய சில மார்க்க அறிஞர்கள், மௌலவிகள் கூட இந்த முஹர்ரம் மாதத்தில் ஆஷுரா நோன்பு என்ற தலைப்பில் ஹுஸைன் (ரலி)யின் கர்பலா போர்க்களத்தையும், சோக வரலாற்றையும் பேசி மக்களிடம் பாராட்டுகள் பெறுவதுதான் கொடுமையிலும் கொடுமை.  

இப்படி ஹுஸைன் (ரலி) இறந்ததை பெரும் துக்கதினமாக அனுஷ்டிக்க மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நான்கு கலீஃபாக்கள் ஆட்சி நடத்தினார்கள் அவர்கள் யாரும் நபி (ஸல்) அவர்களின் இறந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவில்லை எனும் போது அவர்களது பேரர் என்ற காரணத்தினால் அவரை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்துவது வரம்பு மீறிய செயலாகும். 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஹஸைன், ஹுஸைன் இருவரும் உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள். (ஆதாரம் புகாரி) இப்படிப் பல சிறப்புகள் அவ்விருவருக்கும் உண்டு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இவர்கள் பெயரால் நடத்தப்படும் பித்அத்துக்களை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. குறிப்பாக இப் பஞ்சா ஊர்வலத்தில் மாரடித்தல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது யா அலீ!, யா ஹுஸைன்! என்று அவர்கள் இறந்த தினத்தில் மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. 


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (மரணித்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுது) தன் கன்னத்தில் அடித்துக் கொண்டோரும் சட்டையைக் கிழித்துக் கொண்டவரும், அறியாமைக்கால அழைப்பைக் கொண்டு அழைத்தவரும் நம்மைச் சார்ந்தவரல்ல.
(அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்) 


மேலும் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித் தராத வழியில் ஹுஸைன்(ரலி) அவர்களின் மறைவிற்காக நோன்பு வைப்பது அத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பது நேர்ச்சை செய்வது, பாத்திஹா ஓதிக் கொளுக்கட்டை போன்ற பதார்த்தங்களைப் பரிமாறுவது போன்ற அனாச்சாரங்களை முஸ்லிம்கள் களைவதோடு மற்ற அறியாத முஸ்லிம்களையும் எடுத்துக் கூறித் தடுக்க வேண்டும். 


ஊர்வலம் என்ற பெயரில் கொட்டு மேளதாளங்களுடன் செல்வதால் பல சண்டை சச்சரவுகள் ஏற்படுகின்றன. மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஊர்வலங்களில் வன்முறை ஏற்பட்டு அரசாங்கம் இந்த பஞ்சா ஊர்வலத்தைத் தடை செய்துள்ளது. இதுபோன்ற அறியாமையினால் செய்யும் செயல்களால் மதக்கலவரங்கள் ஏற்படுகின்றன. அன்பிற்குறிய முஸ்லிம்களே! நமது இறைவன் ஒருவன்தான். அவனுக்கு எந்தவகையிலும் நாம் இணைவைக்கக் கூடாது. நபி (ஸல்) அவர்களின் மரணத்தோடு தூதுத்துவம் நிறைவுற்றுவிட்டது. அதற்குப்பின்னால் ஏற்படடுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும். நபி (ஸல்) அவர்கள் எந்த காரணத்திற்காக நோன்பு நோற்றார்களோ அதே காரணத்திற்காக நாமும் நோன்பு நோற்று அதற்குரிய முழு நன்மைகளையும் அடைய அல்லாஹ் அருள் செய்வானாக.
 
நன்றி- இஸ்லாம் கல்வி.காம்,