ஞாயிறு, 5 டிசம்பர், 2010

டிசம்பர் 6: தொடர் முழக்கப் போராட்டம் ஏன்?- தமிமுன் அன்சாரி

இந்திய ஒருமைப்பாட்டின் அடையாளமாகவும், வரலாற்றுச் சின்னமாகவும் திகழ்ந்த பாப்ரி மஸ்ஜித், மதவெறி பயங்கரவாதிகளால் 1992, டிச.6 அன்று தகர்க்கப்பட்டது.இந்தியர்களின் அமைதி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை உள்ளிட்ட பண்புகளின் மீதும், மதச்சார்பின்மையின் மீதும் விழுந்த பேரிடியாக அத்துயர நிகழ்வு அமைந்தது. உலக அளவில் இந்திய தேசம் தலை குனிந்தது.பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர்.6ஐ கறுப்பு தினமாக, கடந்த 18 ஆண்டுகளாக தேசம் கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த செப்.29,2010 அன்று பாப்ரி மஸ்ஜித் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற சுமார் 60 ஆண்டுகால வழக்கில் அலஹாபாத் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்தது. அது தீர்ப்பா? கட்டப்பஞ்சாயத்தா? என்ற விவாதத்துக்கு வழி வகுத்திருக்கிறது. சட்ட நுட்பங்களின் அடிப்படையிலும், ஆவணங்களின் அடிப்படையிலும் தீர்ப்பு வழங்காமல் புராண நம்பிக்கைகளின் அடிப்படையிலும், புதிய பிரச்சனைகள் வரக்கூடாது என்ற நோக்கிலும் அத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக இந்திய சட்ட நிபுணர்களும், செய்தி ஊடகங்களும், அரசியல் தலைவர்களும், அறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சிவில் வழக்கில் இது போன்ற தீர்ப்புகள், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, எதிர்காலத்தில் பல மோசமான தீர்ப்புகள் வெளிவரக் காரணமாகிவிடும் என கண்டித்துள்ளனர். பாப்ரி மஸ்ஜித் இடம் தொடர்பான வழக்கில் மூன்று தரப்பு மனு செய்தார்கள் என்பதற்காக மூன்று பேருக்கு நிலத்தை பிரித்துக் கொடுப்பது என்ன நியாயம்? ஒருவேளை 5 பேர் வழக்கு தொடுத்திருந்தால் 5 பேருக்கும் நீதிமன்றம் நிலத்தை பிரித்துக் கொடுக்குமா? என தேசமே கேள்வி எழுப்புகிறது. அதுவும் நிராகரிக்கப்பட்ட இரண்டு மனுதாரர்களுக்கும் நிலத்தில் சொந்தம் இருப்பதாகக் கூறுவது எந்த வகை சட்ட நீதி என்ற கேள்விக்கு பதில் இல்லை.450 ஆண்டு காலத்துக்கும் மேலாக அனுபவித்த ஒரு சொத்தில் 1528ம் ஆண்டு முதல் 1949 டிச 22 வரை தொழுகை நடத்தப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பான ஆவணங்களை சமர்த்தபின்னரும் அந்த நிலம் முஸ்லிம்களுக்குச் சொந்தமில்லை என்பதும், அங்குதான் ராமர் பிறந்தார் என்பதும், ‘போனால் போகிறது உங்களுக்கும் ஒரு துண்டு நிலம் தருகிறோம்’ என்பதும் அரசமரத்தடியில் நடைபெறும் கட்டப்பஞ்சாயத்து வடிவிலான தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. இதை இத்தோடு விட்டுவிட வேண்டும் என பலர் ‘நல்லெண்ண’ அறிவுரைகளை வழங்குகிறார்கள். பாப்ரி மஸ்ஜிதை இடித்தது போல், நாளை காசியிலும், மதுராவிலும் உள்ள பள்ளிவாசல்களையும் இடிப்போம் என்றும், மேலும் நாடு முழுக்க குறி வைத்திருக்கும் 3 ஆயிரம் பள்ளிவாசல்களையும் கேட்போம் என்றும் விஸ்வஹிந்து பரிசத் கூக்குரலிடுகிறது. இவை குறித்து ‘சமரசம்‘ பேசும் தலைவர்கள் ஏனோ கண்டு கொள்வதில்லை.பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் ‘பெருந்தன்மை’ காட்டினால், மேலும் மூவாயிரம் பள்ளிவாசல்களை இழக்க வேண்டிவருமே என்ற நியாயமான அச்சத்திற்கு யாரும் பதில் சொல்ல முன்வருவதில்லை. இந்நிலையில் நீதிகேட்டு நெடும்பயணத்தை நடத்தி வரும் தமுமுக, தன் கடமைகளைத் தொடர்கிறது. 1995 முதல் மக்களைத் திரட்டி டிசம்பர் 6களில் அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில்:எதிர்வரும் டிசம்பர் 6, 2010 அன்று• பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு குறித்த மேல் முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும்.• பாப்ரி மஸ்ஜிதை இடித்த வழக்கில் ரேபரேலி நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணைகளை விரைவு படுத்தவேண்டும்.• பாப்ரி மஸ்ஜிதை இடித்தவர்கள் குறித்து லிபர்ஹான் கமிஷன் விசாரித்து குற்றம் சாட்டிய அத்வானி உள்ளிட்ட 68 பேர் மீது மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் நடைபெறும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் நியாயவான்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம். இது மனிதநேயத்திற்கும், மதவெறிக்கும் இடையே நடக்கும் வாழ்வுரிமை போராட்டமாகும்.ஏற்கனவே 18 ஆண்டுகள் போராட்டத்தில் கழிந்து விட்டன. ஆனாலும் சலிப்படைய மாட்டோம். இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும், போராடிக் கொண்டே இருப்போம்.இது குறிப்பிட்ட சமூக மக்களுக்கான போராட்டம் அல்ல. இந்திய அரசியல் சாசன சட்டத்தையும், சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியையும் பாதுகாப்பதற்கான போராட்டம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.அனைத்து சமுதாய சகோதரர்களே, தமிழின உணர்வாளர்களே, திராவிட இயக்கச் சொந்தங்களே, இடதுசாரித் தோழர்களே, ஒடுக்கப்பட்ட சமூகப் போராளிகளே, ஆதிக்க எதிர்ப்பு சிந்தனையாளர்களே.. வாருங்கள். ஒன்றுபடுவோம். நீதிக்காகப் போராடுவோம்.

தமிமுன் அன்சாரியின் Face Book குறிப்பிலிருந்து.....