செவ்வாய், 26 அக்டோபர், 2010

இஸ்லாத்தை தழுவினார்

முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரின் உறவினர்
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரின் மனைவி செர்லி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்திலிருந்து தன்னை விடுவித்து இஸ்லாத்தை தழுவிய தகவல் உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.


அபுதாபியிலிருந்து வெளிவரும் அமீரகத்தின் பிரபல ஆங்கில நாளேடான தி நேசனல் இன்று (26அக்டோபர்2010)வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

45 வயதான லாரன் போத் என்கிற அப்பெண்மணி, ஈரானின் பிரபல ஆங்கில தொலைக்காட்சி சேனலான பிரஸ் டிவி யில் பணியாற்றி வருகிறார்.கடந்த 24ந் தேதி ஞாயிறன்று லண்டன் நகரில் நடைபெற்ற உலகளாவிய அமைதி மாநாட்டில் பலத்த ஆரவாரங்களுக்கிடையே, தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிவித்தார்.

பின்னர் தி மெயில் என்ற இங்கிலாந்தின் ஆங்கில நாளேட்டின் நிருபரிடம் பேசிய போது, தான் ஹிஜாப் அணிவதாகவும் ஐவேளை தொழுது வருவதாகவும் மேலும் மது பானங்கள் அருந்துவதையும் பன்றி இறைச்சி சாப்பிடுவதையும் முற்றிலும் நிறுத்திக் கொண்டதாக தெரிவித்தார். இஸ்லாத்தை தழுவியதிலிருந்து இன்று வரை 45 நாள்கள் ஆகிவிட்டன..தனது வாழ்நாளின் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட இத்தனை நாள்களுக்கு மது அருந்தாமல் இருந்ததில்லை என தெரிவித்துள்ள அவர், இரவாகிவிட்டால் யாராவது தமக்கு மது ஊற்றிக் கொடுத்தே ஆக வேண்டும் என்றிருந்த மனநிலையிலிருந்து தாம் முற்றிலும் விடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.

பாலஸ்தீனில் ஊடகத்திற்காக பணியாற்றிய போது இஸ்லாத்தை படிக்கத் தொடங்கியதாக கூறும் இவர், இராக் போருக்கெதிராகவும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அரங்கேற்றி வரும் அக்கிரமத்திற்கெதிராகவும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

டோனி பிளேருக்கு சமீபத்தில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்.. முஸ்லிம்களை நீங்கள் பைத்தியக்காரர்களாகவும், அபாயகரமானவர்களாகவும் நீங்கள் பார்க்கிறீர் என விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் வேறொரு மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்ட டோனி பிளேர் தனது உறவினர் ஒருவரின் இஸ்லாமிய பிரவேசம் குறித்து; கருத்து தெரிவிக்கவில்லை.

லாரன் போத்தின் இஸ்லாமிய பிரவேசத்தை பெரும்பாலான முஸ்லிம்கள் வரவேற்றுள்ளனர். நேற்றைய தினம் இணையதளத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் போர்க் குற்றவாளியான டோனி பிளேருக்கு இப்போது நல்லதோர் உறவினர் கிடைத்துள்ளார் என பதிவு செய்துள்ளனர்.

தமிழில் : கொள்ளுமேடு ரிஃபாயி.