ஞாயிறு, 10 ஜூலை, 2011

தமிழ் சமூகம் சந்திக்கும் சவால்களும், சமூக நீதிக்கான வழிமுறைகளும்


கடந்த 03.07.2011 ஞாயிறு மாலை தம்மாம் நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், சவுதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள பேரா.அ.மார்க்ஸ் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.


வாரம் சவுதிக்கு வருகை தந்த அ.மார்க்ஸ் கடந்த வெள்ளி (01.07.2011) அன்று தலைநகர் ரியாத் மாநகரில் உரையாற்றியிருந்தார்.

மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தம்மாம் கருத்தரங்கில் பேரா.அ.மார்க்ஸ் 'தமிழ் சமூகம் சந்திக்கும் சவால்களும், சமூக நீதிக்கான வழிமுறைகளும்' எனும் தலைப்பில் சுமார் ஒன்னரை மணி நேரம் சிறப்புரையாற்றினார்.
அவரது உரையில் குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்கள்.

'தமிழ் சமூகம் மட்டுமல்ல எந்த ஒரு சமூகமும் ஒரே சமூகமாக எக்காலத்திலும் இருந்ததில்லை, இருக்கவும் முடியாது. எனவே தமிழ் சமூகம் என்பதை விட தமிழ் சமூகங்கள் எனக் குறிப்பிடுவதே சிறந்தது. ஆனால் பன்மைத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். மற்றவர்களோடு இணைந்து வாழ்வது தான் அடிப்படை அரசியல்.

உதாரணமாக, தமிழகத்தின் முன்னாள் ஆளுனர் திரு.ராம் மனோகர் ராவ் ஐபிஎஸ், ஒருமுறை தமிழகத்தில் ஒரு பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சென்றிருந்த போது, 'அருமையான கலைநயமுள்ள பள்ளியைக் கட்டிய நீங்கள் ஏன் நபி (ஸல்) அவர்களின் படத்தை ஏன் மாட்டவில்லை' என்று கேள்வி எழுப்பினாராம். உயர் அதிகாரத்தில் பணியாற்றும் ஓர் உயர் அதிகாரி சமூகத்தின் பிற சமய கோட்பாடுகளை புரிந்து வைத்துள்ளதில் உள்ள குறைபாடு தான் இது.

நபியாகவே இருந்தாலும் உருவ வழிபாடு கிடையாது என்பதில் உறுதியானவர்கள் முஸ்லிம்கள் என்ற அடிப்படையை புரிந்து கொண்டிருந்தால் ராம் மனோகர் ராவ் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க மாட்டார்.

எனவே தான் காந்தியடிகள் செக்யூலரிஸம் கொள்கையை அரசியல் கொள்கையாக மாற்றி அமைக்க பெரும்பாடுபட்டார். அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு எனும் கொள்கையை உறுதியாக நம்பினார். இதனால் தான் இந்துத்துவ பயங்கரவாதிகள் காந்தியை கொலை செய்ய ஏழு முறை முயற்சித்தனர்.

முதல் சுதந்திர போராட்டமான கிலாஃத் இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்தவர் காந்தி. அதேபோல் தமிழகத்தில் நடைபெற்ற ஒடுக்கப்பட்டோர் ஆலய நுழைவு போராட்டத்தில் பங்கு கொண்டவர் காந்தியடிகள். இதன் காரணத்தால், காஞ்சி மட அன்றய பீடாதிபதி மகா பெரியவாள் என மரியாதையாக அழைக்கப்பட்ட சங்கராச்சாரியாரின் ஆரிய தர்மம் எனும் பத்திரிக்கையில் கடுமையாக சாடி எழுதப்பட்டார். பிற சமூகங்களைப் பொறுத்தவரை TOLERANCE ஓ COMPROMISE ஓ தேவையில்லை. ACCEPTENCE தான் தேவை என்பதை ஆணித்தரமாக காந்தி வலியுறுத்தி வந்தார். அதன் காரணமாகவே கொல்லப்பட்டார்.

எனவே முதலில் எந்த சமூகமும் பன்மை சமூகம் தான் என்பதனையும், அவற்றை அவரவர் நம்பிக்கைப்படி உள் வாங்கி அங்கீகரித்து அனைவருக்கும் ஒரே நீதி என்ற இலக்கை நோக்கி பயணிப்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்.

தமிழ் சமூகம் பண்டைய காலந்தொட்டே பல சமூகங்களாக பிரிந்து வாழ்ந்துள்ளது என்பது வரலாறு. செந்தமிழ், கொடுந்தமிழ், இழிசனர் தமிழ், சமண தமிழ், சைவத் தமிழ் என பல சமூகங்களாக வாழ்ந்துள்ளனர்.

இன்றும் கூட சமூக காரணங்களால் மட்டுமல்ல, மாறாக அரசியல் காரணங்களால் கூட தமிழ் கமூகம் பல்வேறு கூறுகளாகவே பிரிந்துள்ளது.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இன்று சமச்சீர் கல்வி படும்பாடு. கடந்த அரசால் அங்கீகரிக்கப்பட்ட காரணத்தால் இன்றய அரசால் சமச்சீர் கல்வி உதாசீனப்படுத்தப்படுகிறது.
நான்கு ஆண்டு கால ஆய்வின் பின் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி இன்று அற்ப காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வேதனையானது. அவசியம் என அரசு கருதினால் சில மாற்றங்களோடு அல்லது சில நீக்கங்களோடு உடனே அமுல்படுத்த முனைய வேண்டும். ஒப்புக் கொள்ளப்பட்ட பின் பாடத்திட்டத்தில் சில அம்சங்கள் நீக்கப்பட்டதற்கான முன்னுதாரணங்கள் உண்டு.
உதாரணமாக நண்பர் கவிஞர் இன்குலாப், ராஜராஜ சோழன் காலத்தில் நடைமுறையில் இருந்த பெண்ணடிமைத் தனத்தை - தாசித்தனத்தை சாடி எழுதிய கவிதை நீக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். அதுபோல் இப்பொழுதும் நாங்கள் அளித்த வரைவு பாடத்திட்டத்தில் கடந்த கலைஞர் அரசு செய்த இடைச்சொருகல்களை நீக்கி அமுல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

அரசியல் ரீதியான தமிழ் சமூக பிளவு என்றால், சமூக ரீதியான பிளவுகளுக்கு சிறந்த உதாரணம் இரட்டை குவளை நிலை, காலணி அணிய அனுமதி மறுப்பு போன்றவற்றை குறிப்பிடலாம். சில இடங்களில் ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல ஏற்படுத்தப்பட்டுள்ள தடையையும் கூட இவ்வகையில் சேர்க்கலாம்.

பாண்டிச்சேரியில் நடைமுறையில் இருந்த இதுபோன்ற ஒரு தடை சமீபத்தில் தமுமுகவின் தீவிர முயற்சிக்குப் பின் நீக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமூக முன்னேற்றத்திற்கான வழிகளாக நான் குறிப்பிடுவது இத்தகைய வேறுபாடுகள் களைப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் அப்துல் கலாம் போன்றவர்கள் அணு உலை அமைப்பது தான் நமது முன்னேற்றத்திற்கான பாதை என வலியுறுத்தி வருகின்றனர்.

அணு உலை விபத்திற்கு பின் அனேக நாடுகள் அணு உலையை மூடிவிடுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. ஏனெனில் அணு உலையின் பயன்பாடு ஏறத்தாழ 25 வருடங்கள் தான். ஆனால் அணு கழிவுகளால் ஏற்படக்கூடிய ஆபத்து சுமார் 30,000 வருடங்களாகும். எனவே அபுல்கலாம் குறிப்பிடுவது போல் மேலிருந்து கீழாக வளர்ச்சியோ முன்னேற்றமோ அடைய முடியாது. மாறாக நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் குறிப்பிடுவது போல் வளர்ச்சியோ, முன்னேற்றமோ கீழ் மட்டத்திலிருந்து அமைய வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும். அதனை நோக்கியே நாம் பயணப்பட வேண்டும்.

அதாவது நீதிபதி ராஜேந்திர சச்சாரின் கமிட்டியில் இடம் பெற்ற அபூஸாலிஹ் குறிப்பிடுவது போல் சமூகங்களிடையேயான சம வாய்ப்புகள் உருவாக வேண்டும். அதுவே பன்மைத்துவ குறியீடாக அமையும்.

இவ்வாறு சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றிய பேரா. அ. மார்க்ஸ் இறுதியாக அங்கு கூடியிருந்த பெரும்பாலான முஸ்லிம்களுக்கான சிறப்பு கவன ஈர்ப்பு உரையாக சில நிமிடங்கள் பேசினார்.

ராஜேந்திர சச்சாரின் அறிக்கையின்படி முஸ்லிம் இயக்கங்கள் இதுவரை முயற்சிக்காத ஆனால் உடனே முன்னெடுத்துச் செல்ல வேண்டிய சில அம்சங்கள் உள்ளன. இவற்றை தனித்தனியாக குறிப்பிட்டு ஒற்றுமையாக அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் இணைந்து குரலெழுப்ப முன்வர வேண்டும்.

முதலாவதாக, சமூகங்களுக்கான சம வாய்ப்பு. இதன்படி முஸ்லிம்களுக்கு மாத்திரம் தனியாக 10 சதவிகித இட ஒதுக்கீடு அனைத்து அம்சங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென சச்சார் அறிக்கை வலியுறுத்துகிறது.

இரண்டாவதாக, சட்டமன்ற, பாராளுமன்ற அவைகளிலே இட ஒதுக்கீடு பெறத் தாமதமானாலும், அந்தந்த மாநில அதிகாரத்திலுள்ள நகரசபை, உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பெற குரல் கொடுக்க வேண்டும். இதுபோன்ற இட ஒதுக்கீடு ஆந்திர மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படுவது அறிந்ததே.

அடுத்ததாக சிறைக் கொட்டடிகளில் வாடி வரும் முஸ்லிம் கைதிகள் எதிர்வரும் ஜுலை 15 அண்ணா நினைவு நாளில் விடுதலை செய்யப்பட அரசை வலியுறுத்த வேண்டும்.
சச்சார் கமிட்டியின் பரிந்துரைப்படி தேர்வு குழுக்களில் 10 சதவீத இடஒதுக்கீடு பெற அரசை நிர்பந்திக்க வேண்டும்.

இந்தியாவிற்கு ஏற்பட்ட களங்கமான பாபரி மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தில் அரசு உடனடியாக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் உறுதியளித்தபடி மஸ்ஜித் கட்டித்தர கோரி வலியுறுத்த வேண்டும். அயோத்தியிலுள்ள இந்து தீவிரவாதியான சுவாமி ராம் விலாஸ் வேதாந்தியின் மிரட்டலுக்கு பயந்து இடிக்கப்பட்ட இடத்தில் மஸ்ஜித் கட்டாமல் காலம் தாழ்த்துவதை கைவிட்டு, உடனடியாக பள்ளி கட்டி தந்து சமூக நீதியை பாதுகாக்க அரசை நிர்பந்திக்க வேண்டும்.

முக்கியமாக, பல காலமாக வரைவு நிலையிலுள்ள 'இனக்கலவர தடுப்பு சட்ட மசோதா' வை (COMMUNAL RIOTS PREVENTION ACT) உடனடியாக நிறைவேற்றுவதுடன் சாட்சிகளுக்கான பாதுகாப்பையும், உயிர் உத்திரவாதத்தையும் தர அரசுக்கு நெருக்கடி தர வேண்டும்.

சுமார் ஒன்னரை மணி நேர மேற்கண்ட உரைக்குப் பின் சபையோரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்த கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சகோ.கபீர், அப்துல் சத்தார் மற்றும் சிவக்குமார் செம்மையாக செய்திருந்தனர்.

சிறப்புச் செய்தியாளர்.





--