(இரத்த தானம் செய்கிறார் உமர் ஷரிப்... )
கடந்த 2008 தொடங்கி அவருடன் எனக்கு பழக்கம். அமீரகத்திற்கு வந்து சிலமாதங்கள் கழித்து அமீரக தமுமுக நிர்வாகிகளை முதன் முதலாக அமீரக செயலாளர் யாசின் நூருல்லாஹ் அவர்களது இல்லத்தில் வைத்து சந்திக்கும் போது அவர் எனக்கு அறிமுகமானார்.அன்று தொடங்கி அவர் கடந்த தியாகத் திருநாள் வரை என்னுடன் நேரிலும் தொலைபேசியிலும் நிகழ்த்திய உரையாடல்கள் கொஞ்ச நெஞ்சமல்ல..! புதிதாக யாரையாவது அவர் ஒருமுறை சந்தித்தால் போதும் உடனடியாக அவர்களது தொலைபேசி எண்னை கேட்டு வாங்கிக் கொண்டு அவர்களுடன் நட்பை தொடர்ந்து கொண்டே இருப்பார். ஒரு விஷயத்தில் மாத்திரம் அவர் கவனமாக இருப்பார்... தான் பொதுசெயலாளர் ஹைதர் அலியின் மருமகன் என்பதை யாரிடமும் சொல்லிக் கொள்ளமாட்டார். என்னுடன் எங்கேயாவது வெளியே செல்ல நேர்ந்தால் என்னிடம் தான் யார் என்பதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்வார்.ஹைதரின் மருமகன் என்பதற்காக தான் அதிகம் கவனிக்கப்பட வேண்டும் என்ற பிரபலத்தை விரும்பாதவராக வாழ்ந்தார்.
நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் தொடர்பை துண்டித்து விட்டு அவரது எண்ணிலிருந்து எண்னை அழைத்து மணிக்கணக்கில் உரையாடுவார்.ஏன் எனது அழைப்பைத் துண்டிக்கிறீர்கள்? எனக் கேட்டால் "நீங்க கம்மி சம்பளத்துக்கு வேலை செய்றீங்க ரிபாயி பாய் உங்க பணத்தை வீணாக்காதீங்க " என்று சொல்வார்.
இறுதியாக தியாகத் திருநாளன்று எண்னை அழைத்து பெருநாள் வாழ்த்து பரிமாறிக் கொண்டது தான் அவருடன் நான் இறுதியாக பேசிய பேச்சாக இருந்தது.
நேற்று முதல் நாள் புதனன்று அமீரக தமுமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் மூலம் எனது செவியில் கேட்ட அவரது வபாத்து செய்தி நெஞ்சில் பேரிடியாக விழுந்தது.
"யா அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்க பூங்காவில் அவருக்கு இருப்பிடத்தை வழங்குவாயாக" என்று பிரார்த்திக்க நூற்றுக்கணக்கான சகோதர உள்ளங்கள் ஷார்ஜாவில் அவருக்கான ஜனாஸா தொழுகைக்காக குழுமியதை காண முடிந்தது.
அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக...!