சனி, 16 மார்ச், 2013

ஆபத்தை விளைவிக்கும் தகவல் தொடர்பு சாதனங்கள்:ஓர் எச்சரிக்கை

இன்றைய இஸ்லாமிய இளைய தலைமுறையினரின் நடத்தைகள் படுமோசமான நிலையில் இருக்கிறது.இந்த அவல நிலையைத் துடைத்தொழிக்க முறையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளாமல் போனால் கல்வி,தொழில்,குடும்பம் ஆகிய துறைகளில் நமது வளரும் தலைமுறையினரின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன் இல்லாத அளவுக்கு தற்போது தகவல் தொடர்பு சாதனங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்தவண்ணம் உள்ளன. கல்வி, பொருளாதார பயன்பாட்டிற்காக உருவாக்கப்படும்இச்சாதனங்கள்,
ஆபாசம் போன்ற சமூக சீர்கேடுகளை பரப்புவதற்காக மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

செல்போன்களும்,தொலைகாட்சி நிகழ்ச்சிகளும்

செல்போன்கள் பயன்பாட்டிற்கு வருமுன் வீட்டில் கம்பிவட தொலைபேசி இணைப்பை வைத்திருப்போர் கூடுதல் கட்டணம் (பில்) வந்துவிடுமோ என்று அஞ்சி அவசியத் தேவைகளுக்காக மட்டுமே அதனை பயன்படுத்தி வந்தனர்.
செல்போன்கள் பயன்பாட்டிற்கு வந்ததற்கு பின்னர் குடும்பத்தில் பெரியவர்கள் சிறியோர் உட்பட அணைவரும் இதனை பயன்படுத்;த தொடங்கி விட்டனர்.இதனால் குடும்ப வருமானத்தில் ஒரு கனிசமான தொகையை செல்போன் அட்டைகளுக்காக செலவிடும் போக்கு தற்போது அதிகரித்து விட்டது.

அவசியம் இல்லாவிட்டாலும் ஆடம்பரத்திற்காக மனைவி,மக்களுக்கு விலையுயர்ந்த செல்போன்ளை வாங்கித் தரும் பழக்கம் இன்றைய சமூகத்தில் நாகரீகமாக கருதப்படுகிறது.

நவீன வசதிகளுடன் கூடிய செல்போன்களின் வரத்து சந்தைகளில் இன்றைக்கு அதிகரித்துள்ளதால்; சமூகத்தின் அணைத்து தரப்பினரிடமும் இத்தகைய செல்போன்களுக்கு மவுசு கூடியுள்ளது.இவற்றில் இருக்கும் புளூடூத்,காமிரா,இணையம் உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்தி ஆபாசமான அருவருக்கத்தக்க காரியங்களை தங்களுக்கு மத்தியில் நமது இளைய தலைமுறையினர் பரிமாறிக் கொள்வதை நம்மால் காண முடிகிறது.
கள்ளத்த்தனமாக மணிக்கணக்கில் நமது இளைஞர்களும் இளம்பெண்களும் மாற்றார்களுடன் உரையாடும் போக்கு தற்போது செல்போன்கள் வாயிலாக அதிகரித்துள்ளது.இவ்வாறு தொடரும் செல்போன் உரையாடல்கள், இறுதியில் குடும்பத்தாரைப் பகைத்துக் கொண்டு வீட்டை விட்டு அந்நியர்களுடன் ஓடிவிடும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது ஒரு புறமிருக்க,பொழுது போக்கு ஊடகம் எனப்படும் திரைப்படங்கள், தொலைக்காட்சி சேனல்கள் சமூகத்தை இன்னொரு வகையில் சீர்கேடு எனும் படு நாசக் குழியில் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு வெளிவரும் திரைப்படங்களும்,தொலைக்காட்சி நாடகத் தொடர்கள், நிகழ்ச்சிகள் அணைத்தும் தங்கு தடையற்ற முறை தவறிய ஆண்-பெண் கலப்புறவுக்கு சமூகத்தை தயார் படுத்தும் வகையில் தான் தயாரிக்கப் படுகின்றன.

நடன அரங்குகள் ( DANCE CLUB )போன்றவை மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டும் தான் இருந்தன என்பதாக சில காலங்களுக்கு முன் வரை கேள்வி பட்டிருக்கிறோம்.ஆனால் இத்தகைய நடன அரங்குகளை நமது தொலைக்காட்சி சேனல்கள் தமது நிகழ்ச்சிகளின் வாயிலாக ஒவ்வொரு வீடுகளிலும் அரங்கேற்றி வருவதை இன்று நம்மால் காண முடிகிறது.
நடன அரங்குகள் போன்ற ஆபாச கேளிக்கை மையங்கள் குறித்து கற்பனையில் கூட நினைத்துப் பார்த்திராத பாமர மக்களுக்கு நடன போட்டி என்ற பெயரில் சினிமாப் பாடல்களுக்கு அரைகுறை ஆடையுடன் பெண்னை ஆணுடன் ஆபாசமாக ஆடவிட்டு புது வித ஆபாச இன்பத்தை பார்வையாளர்களுக்கு நமது தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன.

சுருங்கச் சொன்னால் ஆபாசமான விஷயங்களை காண்பது கண்கள் செய்யும் விபச்சாரம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் எச்சரித்துள்ள அந்த பாவத்தை செய்பவர்களாக சமூகத்தை இந்த தொலைக்காட்சிகள் மாற்றியிருக்கின்றன.
குடும்ப உறவுகளை குலைக்கும் மெகா சீரியல்களும்,அவ்வப்போது ஒளிபரப்ப படும் விளம்பரங்களும் காண்போர் மனங்களில் ஓர் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தி வருகின்றன.

இதற்கு இஸ்லாம் வழங்கும் தீர்வு என்ன..?

இத்தகைய இழிவுகளிலிருந்து சமூகத்தை சீர் படுத்த இஸ்லாம் சில வழிகளை கற்றுத் தருகிறது.இறைவன் தன்னிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்யுமாறு குர்ஆனில் நமக்கு கற்றுத் தருகிறான்..

'(நபியே நீர் கூறும்) இருள் படரும் போது ஏற்படும் தீங்குகளை விட்டும் (இறைவா)உன்னிடம் (நான்)காவல் தேடுகிறேன். (சூரா அல் பலக்- 3)

இதனை விவரித்து நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்...
சூரியன் மறையும் நேரம் வந்து விட்டால் உங்களின் சிறுவர்களை வீட்டிலிருந்து வெளியில் வராமல் தடுத்துக் கொள்ளுங்கள்.அந்த நேரத்தில் ஷைத்தான் வீதியில் சுற்றுகிறான். (அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி).ஆதாரம்:புகாரி, முஸ்லிம் )

எவ்வளவு உண்மை..!ஷைத்தான் வருவதாக நபிகளார் கூறும் அந்த இருள் சூழ்ந்த வேளையில் தான் பாவமான அருவருக்கத்தக்க,தீய சிந்தனையைத் தூண்டக் கூடிய நாடகங்களும் நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப் படுகின்றன.

இந்த நேரங்களில் தங்களையும் தங்களது குடும்பத்தாரையும் ஷைத்தானிய சேனல்களிடமிருந்து தற்காத்து கொள்ளாமல் போனதால் அதன் கதாபாத்திரங்களில் லயித்து ஒழுக்கம்,சமுதாயக் கட்டுப்பாடு ஆகியவை காற்றில் பறக்க விடப்பட்டு முறையற்ற ஆண்-பெண் கலப்புறவு தங்கு தடையின்றி உள்ளூர் முதல் உலக அளவில் அரங்கேறி வருகின்றது.
தொலை தொடர்புக்கான எளிய சாதனமாக பயன்பட்ட செல்போன்கள் ,இத்தகைய கள்ளத் தனங்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்தி தரும் தரகு வேலை செய்பவையாக உருமாறியிருக்கின்றன.இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கின்றன என்பதை தற்போது நாம் கண்டு வருகின்றோம்.

ஆகவே நமது பெண்களின் வெளி உலகத் தொடர்புகள் எவ்வாறு இருக்க வேண்டு;ம் என்பதை குறித்தும், செல்போன்,தொலைக்காட்சி சேனல்கள், திரைப்படங்கள், இணையதளம் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை முறைப்படி கையாள்வதற்குரிய கீழ்கானும் சில ஆலோசனைகள் நமது குடும்பங்களில் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.

1.பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்,வேலையில்லா இளைஞர்கள்,இளம் பெண்கள் (திருமணமான-திருமணமாகாத)ஆகிய தரப்பினரை செல்போன் பயன்படுத்துவதை குடும்ப பெரியவர்கள் கட்டாயம் அனுமதிக்க கூடாது.மேற்படி தரப்பினர் அவசியம் கருதி வெளியே செல்லும் போது அவசரமாக குடும்பத்தாரை தொடர்பு கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால்..அருகிலுள்ள பொது தொலைபேசி சேவை (Pஊழு) பூத்களை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

2.குடும்ப பெரியவர்கள்,தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள்,பாடல்கள்,நடனப் போட்டிகள் போன்ற பாலுணர்வைத் தூண்டுபவற்றையும்,குடும்ப உறவுகளை சீர்குலைக்கும் நாடக நெடுந்தொடர்களையும் தமது குடும்பத்தினர் பார்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

தொலைக்காட்சி சேனல்களை முற்றிலுமாக பார்க்கவே கூடாது என்பது இதன் பொருளல்ல அறிவியல் கண்டுபிடிப்புகள்,மருத்துவ உண்மைகள்,வன விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்க்கை முறை பற்றிய தகவல்கள்,சிறார்களுக்கு தெம்பையும் துணிவையும் ஊட்டும் (ADVENTURE- இடர்பாடான சூழ்நிலைகளில் பயணம் செய்யும்) நிகழ்ச்சிகள்,ஏழை நாடுகள் மற்றும் போரினால் சீரழிந்து கிடக்கும் நாடுகளில் மக்கள் படும் விவரிக்க இயலாத ஏழ்மையையும் துன்பங்களையும் சித்தரிக்கும் (DOCUMENTARY) ஆவணப் படங்களை போன்றவற்றை பார்க்கவும் அதிலிருந்து படிப்பினை பெறவும் இளைஞர்களையும் சிறுவர்களையும் ஊக்கப் படுத்த வேண்டும்.இதற்கு அவர்கள் தயாராகாத பட்சத்தில் தொலைக்காட்சியை மூடிவிடுவது சிறந்ததாகும்.

3.வீட்டில் இணையதள வசதி உள்ளவர்கள் அதனைப் பயன்படுத்துவோரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.அவர்கள் எந்த மாதிரியான தளங்களில் தமது நேரங்களை செலவிடுகின்றனர்..?அவை எப்படி பட்டது என்பதை கண்டறிந்து தீமையை விதைக்கும் தளமாக இருந்தால் அவற்றை காண தடை விதிக்க வேண்டும்.மேலும் சாட்டிங் செய்பவர்களாக இருந்தால் அவர்கள் யாருடன் சாட்டிங் செய்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

4.அருகிலுள்ள நகரங்களுக்கு செல்வதாக இருந்தாலும் பெண்களை தனித்து பயனம் செய்ய அனுமதிக்கக் கூடாது.அவ்வாறு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் திருமணம் செய்ய விலக்கப்பட்ட (மஹ்ரமான)வர்களோடு மட்டும் பயனிக்க செய்ய வேண்டும்.(கணவனோ அல்லது தந்தை,உடன்பிறந்த சகோதரர்களை துணைக்கு அழைத்து செல்வது சிறந்ததாகும்)சிறுவர்களை மட்டும் துணைக்கு அழைத்து செல்லும் பெண்களை தற்போது பேருந்துகளில் அதிகமாக காண முடிகிறது.அவ்வாறு சிறுவர்களோடு பெண்கள் பயணிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.சிறுவர்கள் துணையோடு பயணித்தல் என்பது தணித்து பயணிப்பதற்கு சமமானதாகும்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.. தனியாக பயணிப்பதில் ஏற்படும் அபாயம் குறித்து நான் அறிந்திருக்கும் அளவுக்கு மக்கள் அறிந்திருந்தால் ஒருவருமே இரவு தனியாக பயணம் செய்யமாட்டார்கள்.(அறிவிப்பவர்:இப்னு உமர் (ரலி),ஆதாரம்:புகாரி)

பெண்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது விலையுயர்ந்த நகைகள் ஆடைகள் அணிந்து செல்வதையும்,மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மேக்கப் செய்து கொள்வதையும் வாசனைத் திரவியங்களை பயன்படுத்துவதையும் கட்டாயம் அனுமதிக்கக் கூடாது.
மேற்கூறப்பட்ட ஆலோசனைகளை குடும்ப பெரியோர்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து அவற்றை தமது குடும்பத்தில் செயல்படுத்த முன்வர வேண்டும்.

இஸ்லாம் தகவல் தொடர்பு சாதனங்களக்கு எதிரானதா..?

இஸ்லாம் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு எதிரான மார்க்கமல்ல..சாதாரணமாக கத்தியைக் கொண்டு காய்கறி,பழங்கள் போன்றவற்றையும் நறுக்கலாம்.அதே கத்தியைக் கொண்டு ஆளையும் கொல்ல முடியம்.யாரும் கத்தியைக் கொண்டு கொலை பாதகத்தை செய்ய விரும்பமாட்டாhகள்.இதைப் போலவே.. தகவல் தொடர்பு சாதனங்களை ஆக்கப்பூர்வமான வழியில் இஸ்லாம் அனுமதித்துள்ள வகையில் ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுருங்கச் சொன்னால் அவற்றை இல்லாமல் ஆக்குவதை விட.. இஸ்லாமிய மயமாக்கி விடுவதே சாலச் சிறந்ததாகும்.

இறைவன் கூறுகிறான்..
உங்கள் கரங்களை நாசத்தின் பால் கொண்டு செல்லாதீர் (குர்ஆன்:2-195) மேலும் கூறுகிறான்..
விசுவாசிகளே.. நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.. அதன் எரிபொருள் மனிதர்களும் கற்களுமாகும். (குர்ஆன்:66-6)

மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களை சற்று ஆராய்ந்து மனதில் கொண்டு நம்மை நாமே நரகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முயல்வோமாக.
இறைவன் நம் அணைவருக்கும் அருள் புரிவானாக....!

நன்றி: மக்கள் உரிமை வார இதழ்.
(மக்கள் உரிமை டிசம்பர் 19-25,2008 இதழில் வெளியான கட்டுரை)
(தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் ஈமானை மறந்து காதல் என்ற பெயரில் மாற்றார்களோடு கள்ள உறவை மேற்கொண்டு சமுதாயத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் ஐக்கிய அரபு அமீரகம் அல்-அய்ன் மண்டல தமுமுக சார்பில் சமுதாயத்தை விழிப்படைய செய்யவும்,அதற்கான ஆலோசனைகளை வழங்கும் வகையிலும் மேற்கண்ட கட்டுரை மக்கள் உரிமையில் வெளியிடப்பட்டது)