ராமநாதபுரம், கடலில் ஏற்படும் மாற்றத்தை கண்டறியும் திறன் கொண்ட "ஆந்தோசா' உயிரினம், மன்னார் வளைகுடாவை விட அந்தமான் கடற்பகுதியில் அதிகம் காணப்படுகிறது. எண்ணற்ற புகழ் கொண்ட மன்னார் வளைகுடாவில், பல்வேறு சிறப்புகளை கொண்ட உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில், பலரும் அறியாத உயிரினம் "ஆந்தோசா'. பவளப்பாறை இனத்தை சேர்ந்த இவற்றை, "கடல் தாமரை' என்றும் அழைக்கின்றனர். இது, குடல் இல்லாத உயிரினம். உறிஞ்சி உண்ணும் பழக்கம் கொண்ட இது, மணல் பாங்கான பகுதியில் மட்டுமே இருக்கும். எப்போதும் மணலுக்குள் புதைந்து இருப்பது இதன் இயல்பு. இவற்றுக்கு ஏற்ற சூழல் வரும் போது மட்டும் வெளியில் வந்து, தாமரை போல தன் உடலை விரிந்து நிற்கும். அப்போது தன்னை கடந்து செல்லும் உயிரினங்களை இரையாக உறிஞ்சிவிடும். மிகச் சிறிய உயிரினங்களே இவற்றின் உணவாக இருந்தாலும், அவற்றின் சத்துக்களை மட்டுமே இவை உறிஞ்சும். உண்ட பின் ஓடுகளை துப்பிவிடுகிறது. இவற்றால் வேகமாக மற்றொரு இடத்துக்கு செல்லமுடியாது. இந்தியாவில் அந்தமான் கடற்பகுதியில் 252, மன்னார் வளைகுடாவில் 117 வகையும் உள்ளன. லட்சத்தீவு, கட்ச் வளைகுடாவில் குறைந்த அளவில் தான் உள்ளன. கடலில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ளும் தன்மை இவற்றுக்கு உண்டு. இதை கடலின் கண்காணிப்பாளராக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் இவற்றை உணவாக பயன்படுத்துவதில்லை. அதே நேரத்தில், அலங்கார பொருளுக்காக அறுவடை செய்யப்படுகிறது. பயன்பாடு குறைவு என்பதால், இங்கு இதன் அழிவு குறைவு. தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பேய் கணவாய் மீன்களுக்கு நிகராக, இவற்றின் மாமிசத்தை வறுத்து உண்ணும் வழக்கம் உள்ளது.
Thanks. .dinamalar.com