இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதமான முஹர்ரம் பிறந்து விட்டால் அதனை புத்தாண்டாக கொண்டாட மறந்து போன இந்த இஸ்லாமிய சமுதாயம் அந்த முஹர்ரம் மாதத்தின் ஒன்பதாம் நாளை துக்க நாள் என்ற பெயரில் கொண்டாட்டங்கள் நடத்தி இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஷியா பிரிவு முஸ்லிம்களிடையே கொண்டாடப்பட்டு வரும் இந்த துக்க தின கொண்டாட்டங்கள் மெல்ல மெல்ல சன்னி பிரிவு முஸ்லிம்களிடமும் ஊடுருவி சுன்னத் ஜமாஅத் என தங்களை பறைசாற்றிக்கொள்ளும் சில அதி மேதாவி ஆலிம்கள் ஆசிர்வாதம் வழங்க தொடங்குகிறது அந்த கத்திக்குத்து திருவிழா.
நபியவர்களின் பேரன் ஜனநாயக விரோத தீய சக்திகளின் காலித்தனத்திற்கு பலியானது முஸ்லிம்களுக்கு துக்கமான ஓர் செயல் தான்.அந்த ஒரு விஷயத்தை மையப்படுத்திக்கொண்டு இஸ்லாத்தின் பெயரால் விழா எடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஊர்வலமாக செல்வதும் ஊர்வலத்திர்கிடையே கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் தங்களின் உடலை கீறிக் கொண்டு ரத்தங்களை மண்ணில் ஓட்டுவதும் நபியவர்கள் கற்றுத்தந்த இஸ்லாமிய நெறிக்கு மிகவும் முரணானதாகும்.
சகிப்புத் தன்மை என்றால் என்ன? என கேள்வி கேட்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஷியா பிரிவினர் மீது தங்களுக்கு இருக்கும் பகையை தீர்த்துக் கொள்ள இந்த முஹர்ரம் ஊர்வலத்தை ஓர் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு அந்த ஊர்வலத்தில் வெடிகுண்டு வீசி அப்பாவிகளின் உயிர்களை காவு வாங்கியுள்ளனர். இது போன்ற அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் ரவுடித்தனத்திற்கு இந்த உலகில் நான் யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன் என மார் தட்டித் திரியும் தீவிரவாதிகளும் அவர்களுக்குத் துணை போகும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் நாளை இறைவனிடம் கட்டாயம் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொண்டால் நல்லது.
இரத்த ஓட்டங்களுக்கு காரணமாக இருக்கும் இந்த முஹர்ரம் ஊர்வலத்தை தடை செய்வது பற்றி முஸ்லிம் ஜமாத்களும் இயக்கங்களும் ஆலோசிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.