வியாழன், 12 ஆகஸ்ட், 2010
7 வயது மகளை கூவி, கூவி விற்ற கொடுமை ; போதைக்கு வழி தெரியாத தந்தையின் முடிவு
கடப்பா: குடி போதைக்கு தனது மகளையே விற்ற கொடுமை ஆந்திராவில் நடந்திருக்கிறது. இந்த சம்பவம் சுற்றுப்பகுதியில் அதிர்ச்சியை தந்திருந்தாலும், குழந்தையை வாங்குவதற்கும் ஒருவர் ஆயிரம் ரூபாய் கொடுத்து, வர மறுத்த அந்த குழந்தையை தர, தர., வென இழுத்துச்சென்றவரை இப்பகுதி மக்கள் நையப்புடைத்தனர் என்பது கொஞ்சம் ஆறுதல்.
ஆந்திராவில் ஒரு சில மாவட்டங்களில் குழந்தையை விற்கும் கொடுமை சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. மலையோர மக்கள் தங்களுடைய வறுமையை போக்கிட இப்படி முடிவு எடுக்கிறார்களாம். நேற்று கடப்பா மாவட்டம் ராமாபுரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த விவரம் வருமாறு: லக்கிரெட்டிபள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா (40 ). இவர் கூலித்தொழில் ( கட்டட பணி ) செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜம்மா இறந்து விட்டார். இதனையடுத்து மகள் பூதேவி (வயது 7 ) தந்தை (?) யுடன் இருந்து வந்தார்.
புள்ளை வேணுமா, புள்ளை வேணுமா : குடிப்பழக்கம் கொண்ட கிருஷ்ணய்யா அடிக்கடி தனது மகளை துன்புறுத்தி வந்துள்ளார், இதனையடுத்து இவரது தாத்தா , பாட்டி இல்லத்திற்கு கொண்டு பின்னர் ஒரு ஹாஸ்டலில் சேர்த்தனர். இந்நிலையில் கடந்த ஆக.5 ம் தேதி வீட்டிற்கு கொண்டு வரப்பட்டாள். இவளை டவுணில் ஒரு ஓப்பன் பகுதிக்கு கொண்டு சென்று புள்ளை வேணுமா, புள்ளை வேணுமா என கூவி , கூவி ஏலம் விட்டார் கிருஷ்ணய்யா. குழந்தை கண்ணீருடன் என்ன செய்வது என அறியாமல் திகைத்து நின்றது.
ஆரம்ப விலை 300 என ஏலத்தை துவக்கினார். இந்த வியாபாரத்தில் இந்த வழியாக சென்ற காதர்பாட்சா என்பவர் விலைக்கு வாங்கி கொள்வதாக கூறி தந்தையிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தார். இவருடன் செல்ல பூதேவி மறுக்கவே தர, தரவென இழுத்து சென்றார்.இதனை பார்த்த இப்பகுதி மக்கள் கூடி நின்று காதர்பாட்சாவையும், கிருஷ்ணய்யாவையும் நையப்புடைத்தனர். தொடர்ந்து போலீஸ் வரவே காதர் ஓடி விட்டார். கிருஷ்ணய்யாவை போலீசார் கைது செய்தனர். குழந்தை மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குழந்தையை விற்க முடிவு செய்தேன் : போலீசாரிடம் குழந்தை விற்க வந்த காரணம் குறித்து கிருஷ்ணய்யா கூறியதாவது: நான் குடிப்பழக்கம் கொண்டவன். வழக்கமான ஒரு மதுக்கடையில் கடன் கேட்டேன் தர மறுத்து விட்டனர். இதனால் குழந்தையை விற்க முடிவு செய்தேன் என்றார் மது மயக்கத்தில். ஆந்திராவில் குழந்தைகள் விற்பனை பல சம்பவங்கள் மறைமுகமாக நடந்து வந்தாலும், இந்த பூதேவியின் விற்பனை மட்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Thanks. Dinamalar.com