எங்கே போனது மனிதநேயம் : தெருவில் கைவிடப்பட்ட முதியவர் : உயிருக்கு பேராடும் அவலம்
பொதுமக்கள் கூறியதாவது: மழை பெய்து கொண்டிருந்த போது, ஒரு ஆட்டோ அந்த பகுதியில் வந்து நின்றது. அதில் இருந்த ஒரு நபர் இந்த முதியவரை அப்பகுதியில் இறக்கிவிட்டார். இருட்டாக இருந்ததால் ஆட்டோவையும், இறக்கிவிட்ட நபரையும் அடையாளம் காணமுடியவில்லை. முதியவர் அங்கேயே கிடந்தார். மறு நாள் காலையில், நாங்கள் 108 ஆம்புலன்சிற்கு போன் செய்தோம். அவர்கள் 'இந்த முதியவரை எடுத்துச் செல்ல முடியாது' என மறுத்துவிட்டனர். அவர் பலம் பெறுவதற்காக சத்துமாத்திரை மற்றும் ஊசி போட்டுச் சென்றனர். தல்லாகுளம் போலீசாரையும் தொடர்பு கொண்டோம். அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து இப்பகுதி மக்கள் இந்த முதியவருக்கு உணவு அளிக்கிறோம். குடும்ப பிரச்னை காரணமாகவே அவரது உறவினர்கள் அல்லது பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து விட்டிருக்கலாம், என கருதுகிறோம்,'' என்றனர்.
அவரிடம் நாம் விசாரித்த போது, '' தண்ணீர், டீ தாருங்கள்' என கேட்டு பருகிக் கொண்ட அவர், தன்னை பற்றி கூற பேச மறுத்து விட்டார்.
உடல் நலம் குன்றி, மனஉறுதி தளர்ந்து, வயதான நிலையில் தெருவோர திண்ணைகளை தேடி அலையும், அவரது பரிதாப நிலையை உணர்ந்து உறவினர்கள் வந்து காப்பாற்ற வேண்டும், இல்லையேல் கருணை உள்ளத்துடன் செயல்படும் முதியோர் இல்லங்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் இவருக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
நவ நாகரிக உலகத்திலே காசு மட்டுமே வாழ்க்கை என்ற அளவில் மனித இனம் மிக வேகமாக பணத்தை சம்பாதிப்பதிலேயே குறியாக வாழ்ந்துக்கொண்டு பெற்ற தாய் தகப்பனை மறக்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாகப் பீற்றிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளில் முதியோர் இல்லங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நமது இந்திய தேசத்திலும் கூட இத்தகைய இல்லங்கள்
அதிகரித்து வருவதை கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள தினமலர் செய்தியும் இது தொடர்பானது தான்.
இஸ்லாத்தின் அறிவுரை....
இஸ்லாம் பெற்றோரைப் பேணுவது குறித்து மிகவும் கடுமையாக நாகரீகமே வளர்ந்திராத காலத்தில் சுமார் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே வலியுறுத்தி உள்ளது.
குர்ஆன் கூறுகிறது...
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான் அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால்,அவர்களை சீ என்று (எரிச்சலோடு) சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம், இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேசுவீராக!
இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக. மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை (ப் பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களுக்குக் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக. (அத்தியாயம் 17 : வசனங்கள் 23 , 24 )
இவ்விரு வசனங்களின் அறிவுறுத்தலின் படி பெற்றோரைப் பேண முயற்சிப்போம்.!