ஐ.பி.எல்., கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் ஏற்படுத்திய பரபரப்புகளை விட, அதன் முக்கிய நபரான லலித் மோடி ஏற்படுத்தி விட்டார். சசி தரூர் வெளிப்படையாக பேசி மாட்டிக்கொண்டார் என்றால், சசி தரூர் புழங்கிய கோடிகள் அவரை வெளிச்சத்தில் கொண்டு வந்திருக்கிறது.
பல்வேறு ரகமான ஊழல்கள் அலசப்பட்டாலும், கிரிக்கெட் போட்டிகளை வைத்து நடக்கும் ஊழல் பிரமாண்டமானது. தற்போது வரித் துறையினர், கம்பெனித் துறையினர் மேற்கொண்ட சோதனைகளில், ஆவணங்கள் பரிசீலனைகளில் மோடி நடத்திய ஊழல் அரைகுறையாக அம்பலமாகியிருக்கின்றன. இந்த ஐ.பி.எல்., குழுமத்தில் மோடி போக்கை சிலர் ஆதரிக்கவில்லை. அதேபோல, பல்வேறு கிளைகளை இந்த அமைப்பு ஆரம்பிக்க முயன்றதில், கிரிக்கெட் கன்ட்ரோல் போர்டுடன் சரியான இணக்கம் இல்லை. அது குறித்தும் விசாரணை நடக்கிறது. ஆனால், மோடி எல்லாரையும் தாண்டி முன்னணிக்கு வந்து தற்போது சிக்கியிருக்கிறார். வருமான வரித்துறையின் தலைமையகத்தில், மோடி சம்பந்தப்பட்ட கோப்புகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. வரும் 23ம் தேதி கிரிக்கெட் கன்ட்ரோல் வாரியத்தில் இருந்து பொறுப்பானவர்கள், ஆஜராக கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
கறுப்புப் பணம்
முதலில் ஐ.பி.எல்., துவங்கிய 2008ல் மோடி கட்டிய வரி 2.5 கோடி ரூபாய். தெற்கு ஆப்ரிக்காவுக்கு ஐ.பி.எல்., மாற்றம் செய்யப்பட்டதும் அவர் கட்டிய அட்வான்ஸ் வரி 32 லட்சம் ரூபாய். பின்பு, இந்த ஆண்டு அவர் கட்டிய வரி 11 கோடி ரூபாய். ஆனால், 2006ல் வரி கட்டாத அளவுக்கு வருமானம் இன்றி இருந்தவர் மோடி. அப்படி பார்க்கும் போது, கிரிக்கெட் விளையாட்டில் புழங்கிய கறுப்புப் பணம் மற்றும் சூதாட்டமாக ஆட்டத்தின் முடிவுகளை முடிவு செய்தது, தற்போது அதிக சந்தேகத்தை எழுப்புகிறது. அது மட்டுமின்றி, மோடியின் உறவினர்கள் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் குழுவின் முக்கிய அங்கம் வகிப்பவர்கள். இதன் தலைவர் சுரேஷ் செல்லாராம் என்பவர் மோடியின் மைத்துனர். இவருக்கு 44 சதவீத பங்குகள் உண்டு. தற்போது நைஜீரியாவில் இருக்கிறார். மோடி குடும்பத்திற்கு நெருக்கமான மனோஜ் படாலே மற்றொரு முக்கியப்புள்ளி. இந்த அணியில் சம்பந்தப்பட்ட பலருக்கும் கறுப்புப் பணம் சேமித்து வைக்கப்படும் பகாமாஸ் மற்றும் வெர்ஜின் ஐலண்டு ஆகிய இடங்களில் தொடர்பு இருக்கிறது. அங்கு, கம்பெனிகள் வேறு இருக்கிறது. ஏற்கனவே மொரீஷியசில் இருக்கும் சில பணக்காரர்கள் இந்த ஐ.பி.எல்.,லில் சேர்ந்தது குறித்து மோடியிடம் கேட்கப்பட்ட போது, 'சுறுசுறுப்பான பணக்காரர்கள், எனக்கு வேண்டியவர்கள்; இதில் சம்பந்தப்பட்டிருப்பதற்கு நானா பொறுப்பு' என்றார்.
சுனந்தா புஷ்கர்
அதேபோல, சசி தரூர் தோழியான சுனந்தா புஷ்கர், 'கொச்சி பிரான்சைஸ்' என்ற பெயரில் இதில் ஈடுபட்டது குறித்தும் தற்போது விசாரிக்கப்படுகிறது. வெறும் லட்சம் ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்த இவர், இக்கம்பெனி மூலம் 70 கோடி ரூபாய் லாபம் பார்த்தது தான், சசி தரூர் பதவிக்கு வேட்டு வைத்தது. இவர், தனக்கு வந்த பங்குப் பணத்தை தற்போது வேண்டாம் என்று தன் வக்கீல் மூலம் கூறுகிறார். பொதுவாக கம்பெனி சட்டப் பிரிவுகள் படி, 'வியர்வை சிந்தி பெறும் பங்குகள்' அதாவது ஸ்வெட் ஈகுவிடி என்பது கம்பெனி பங்குதாரர்கள் அல்லது பெரிய பொறுப்பில் இருப்பவர்கள், கம்பெனியில் நான்காண்டுகள் நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் பெற வேண்டியது. ஆனால், துபாயில் தொடர்புடைய சுனந்தா இதில் எந்த ரகத்திலும் வராதவர். தொழில் துவங்கியதும் இந்த அளவு ஆதாயம் என்றால், அதில் புதைந்திருக்கும் மர்மம் என்ன? துபாயில் தொடர்பு வைத்திருக்கும் சில பணக்காரர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஏனெனில், கிரிக்கெட்டிற்கும் அதன் பிரபலங்களுக்கும் துபாய் ஒரு சொர்க்க பூமி.
தற்போது சுனந்தா பற்றியும் விசாரணை துவங்கியிருக்கிறது. சசி தரூர் எந்த அளவு இந்த பணப் பரிவர்த்தனைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், ஐ.பி.எல்., என்றதும் மிகப்பெரும் தொழிலதிபர்கள், அவர்கள் உறவினர்கள் என்று எல்லாருமே முக்கியஸ்தர்கள். அதனால், ஐ.பி.எல்., விளையாட்டு என்ற பெயரில் நடந்த பணப் பரிவர்த்தனைகள் இதுவரை நடந்திராத பெரிய மோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று எல்லாரும் எதிர்பார்க்கின்றனர். அதே சமயம், மத்திய விவசாயத்துறை அமைச்சர் பவார் போன்ற பல அரசியல்வாதிகள் கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்டிருந்தும், எப்படி மோடி போல பெயர் கெடாமல் இருக்கின்றனர் என்ற கேள்வியும் எழுகிறது.
தரூரை தொடர்ந்து மோடி
ஐ.பி.எல்., போட்டி துவங்கியதில் இருந்து ஏதாவது ஒரு பிரச்னை கிளம்பி கொண்டு தான் இருக்கிறது. கடந்தாண்டு, பொதுத்தேர்தல் காரணமாக போட்டியை நடத்துவதா, வேண்டாமா என பிரச்னை கிளம்பியது. தேர்தலுக்கு பின் வைத்து கொள்ளுங்கள் என அரசு கேட்டுக்கொண்டும், மோடி தான் எடுத்த முடிவில் விடாப்பிடியாக இருந்தார். தென்னாப்ரிக்காவிற்கு போட்டியை மாற்றி வெற்றிகரமாக நடத்தி காட்டினர். இது அரசுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. மேலும், அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயும் குறைந்தது. தற்போது சசி தரூர் விவகாரம், மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. இதில் சசி தரூரை இழக்கவேண்டியதாகிவிட்டது. இதையடுத்து, மத்திய அரசு விஸ்வரூபம் எடுக்க துவங்கிவிட்டது, தொடர்ந்து வரும் நடவடிக்கைகளை பார்த்தாலே தெரிகிறது. வருமான வரித்துறையும் வரிந்து கட்டி இறங்கியுள்ளது. இதில் பல பூதங்கள் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதான் சமயம், ஐ.பி.எல்.,லில் தங்களுக்கு எவ்வித வாய்ப்பும் கிடைக்கவில்லை என கவலைப்பட்டு கொண்டிருந்த அரசியல்வாதிகளும், எதிராக காய் நகர்த்த துவங்கிவிட்டனர். இப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு,'செக்' வைக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி போர்டு நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில், மோடியை நீக்க ஏகமனதாக முடிவு செய்யப்படுகிறது. கிரிக்கெட் போர்டு தலைவர் ஐ.பி.எல்., சேர்மனாக நியமிக்கப்பட இருக்கிறார். ஐ.பி.எல்., போட்டி 25ம் தேதி முடிகிறது. 26ம் தேதி மோடி பதவியை துறக்கிறார்.
- நமது சிறப்பு நிருபர் -
நன்றி:தினமலர்.காம்