திங்கள், 29 மார்ச், 2010

உறவை சேர்த்து வாழ்வது என்றால் என்ன?

நம்மோடு யார் கொஞ்சி குலாவுகிரார்களோ அவர்களோடு உறவாக இருப்பதா? இல்லை.
இதோ! நபி[ஸல்] கூறும் உறவின் இலக்கணம் பாரீர்;
உக்பா இப்னு ஆமிர்[ரலி] அவர்கள் நபி[ஸல்] அவர்களிடம் வந்து, யாரசூலுல்லாஹ்! எனக்கு சில உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் நான் உறவாக இருக்க விரும்புகிறேன். அவர்களோ என்னை வெறுக்கிறார்கள். நான் அவர்களுக்கு நலம் நாடுகிறேன்! அவர்களோ எனக்கு தீமையையே நாடுகின்றனர் இந்நிலையில் நான் என்னசெய்வது எனவினவ, அதற்கு நபி[ஸல்]அவர்கள் இந்த நிலையில் நீர் இருக்கும் வரை அவர்களை சுடுசாம்பல் தின்னவைத்தவர் போன்றவராவீர்! மேலும், உறவினர்களின் தீமையைவிட்டும் உம்மை காப்பதற்காக ஒரு மலக்கு உம்முடன் இருந்துகொண்டே இருப்பார் என்று நபியவர்கள் கூறினார்கள்.நூல்;முஸ்லீம் 4640.
மேலும், உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் போதுமென்று சொல்லாத விஷயங்கள் இரண்டுதான். 1. செல்வம் 2 .ஆயுள். கோடிக்கணக்கில் செல்வத்தை சேர்த்து வைத்துள்ளவனிடம், இன்னொரு கோடியை காட்டிஇது வேணுமா? என்றால் ஆமா! வேணும் என்றுதான் சொல்வான். அதுபோல நூறுவயசு குடுகுடு கிழவனிடம் அவன் உயிர் பிரியும் நேரத்தில் உனக்கு இறுதி ஆசை என்ன? என்றால் இன்னொரு பத்து வருஷம் வாழ்ந்தால் நல்லாருக்குமே என்பான்!
நாம் விரும்பும் செல்வமும்-ஆயுளும் அதிகமாக வேண்டுமெனில் இதோ நபியவர்களின் பொன்மொழி பாரீர்!
தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணிவாழட்டும்.நூல்;புஹாரி,எண் 5985
நம்முடைய உறவுக்கு உதவுவதால் நமக்கு கிடைக்கும் இரட்டிப்பு பரிசுகளை பாரீர்;
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உடைய மனைவி ஸைனப்(ரலி) அறிவித்தார். பள்ளிவாயிலில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ்(ரலி)வுக்கும் மற்றும் என் அரவணைப்பிலுள்ள அனாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் என்னுடைய அரவணைப்பில் வளரும் அனாதைகளுக்காகவும் என்னுடைய பொருளைச் செலவழிப்பது ஸதாகாவாகுமா என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ்(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள் எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்கள் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரின் நோக்கமும் என்னுடைய நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கவேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் 'ஸைனப்' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'எந்த ஸைனப்?' எனக் கேட்டதும் பிலால்(ரலி), 'அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி(ஸல்) 'ஆம்! ஸைனபுக்கு இரண்டு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்திற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது" எனக் கூறினார்கள். நூல்;புஹாரி,எண் 1466
உறவை சேர்த்து வாழ்ந்தால்த்தான் நம்முடைய இலக்கான சொர்க்கத்தை அடைய முடியும்;
ஒரு மனிதர் நபி[ஸல்]அவர்களிடம் வந்து, 'சொர்க்கத்தில் என்னை சேர்ப்பிக்கக்கூடிய நற்செயலை எனக்கு அறிவித்து தாருங்கள் என வினவ, அதற்கு நபியவர்கள்,*அல்லாஹ்வை வனங்கு.*அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கதே!*தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தை வழங்கு.*உறவினரை சேர்த்து வாழ்வீராக!என்று கூறினார்கள்.
இம்மையிலேயே தண்டனைதர தகுதியான பாவம்!
இந்த உலகில் பல்வேறு பாவங்களை செய்கிறோம். நாம் செய்யும் பாவங்களுக்காக அல்லாஹ், உடனுக்குடன் தன்டிக்கநினைத்தால் நாம் யாருமே தப்பமுடியாது. நாம் செய்யும் பாவங்களுக்கான தண்டனையை மறுமைவரை தள்ளிவைத்துள்ளான். இருப்பினும்,
நபியவர்கள் கூறினார்கள்;
மறுமையில் தண்டனை கிடைப்பதற்கு முன் இம்மையிலும் துரிதமாக தண்டனை அளிப்பதற்கு ஏற்ற பாவங்கள்; அநியாயமும், உறவை முறிப்பதும்தான்.
நூல்;அபூதாவூத்
சொர்க்கத்தின் திறவுகோல் உறவு;
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
நூல்;புஹாரி,எண் 5984
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சொர்க்கமே இலக்கு! அந்த சொர்க்கத்தை அடைய பழுதடைந்திருக்கும் நமது 'உறவு' பாலத்தை இன்றே புதுப்பிப்போம்! இறையருள் பெறுவோம்!!



With Best Regards,
Reyas Ahamad.

Heriot Watt University,Academic City,Dubai.Tel : 04-3616989/99 Email: R.Ahamad@hw.ac.uk Web: www.hw.ac.uk/dubai