கிரிக்கெட் என்னும் மாய வலை : உரத்த சிந்தனை
இந்தியாவில் உள்ளது போன்ற கிரிக்கெட் மோகம், வேறு எந்த நாட்டிலும் கிடையாது. கிரிக்கெட் மட்டைகளோடு திரியும் சிறுவர்களை, நாடு முழுவதும் காணலாம். சிறிய காலியிடம் இருந்தால் கூட அங்கு நான்கு பேர், குச்சியை நட்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சிறுவனும், தான் சச்சினாக வேண்டும் என்று கனவு கொண்டிருக்கிறான்.
ஆனால், நிஜத்தில் அதற்கான வாய்ப்பு எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது, மிகப் பெரிய கேள்விக்குறி. தேசிய அணியில் அதிகபட்சம் 15 பேர் தான் இடம்பிடிக்க முடியும். சரி, மாநில அணியிலாவது வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கினாலும், அதில் பெரிய இடத்து பிள்ளைகள் மற்றும் கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டப்பட்டவர்கள் தான், எளிதாக நுழைய முடிகிறது.
நிலைமை இப்படி இருந்தும், தங்களது குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்ற பெற்றோர், அவர்களுக்குத் தேவையான கிரிக்கெட் சாதனங்களை பல ஆயிரம் ரூபாய் செலவழித்து வாங்கித் தருகின்றனர். அதுமட்டுமா, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பயிற்சி அளிப்பதாகக் கூறி, பள்ளிகளில் பணம் கறக்கும் நிலைமையும் உள்ளது. குறிப்பாக, கோடைக்கால பயிற்சி முகாம் எனக் கூறி, சிறுவர்களிடம் ஆயிரக்கணக்கில் பறித்து விடுகின்றனர். ஆனால், உருப்படியான பயிற்சி எதையும் அளிப்பதாகத் தகவல் இல்லை. மக்களின் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி, இந்திய கிரிக்கெட் வாரியம் கோடிகளை குவித்து வருகிறது. போதாத குறைக்கு, ஆடு, மாடுகள் போல கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர். உதாரணமாக, தமிழகத்தை எடுத்துக் கொண்டால், சென்னையைத் தவிர சர்வதேச போட்டிகள் நடத்துவதற்கான மைதானம் ஏதும் இல்லை. உலகக் கோப்பைக்காக, சென்னையை ஒட்டி மிகப் பிரமாண்டமான மைதானம் கட்ட, தமிழக அரசிடம் இருந்து நிலம் வாங்கிய கிரிக்கெட் வாரியம், அதை கட்டும் திட்டத்தை கைவிட்டது.
கிரிக்கெட் வருமானத்தின் இன்னொரு பரிணாம வளர்ச்சியாக, ஐ.பி.எல்., என்ற அமைப்பு துவக்கப்பட்டு, பல ஆயிரம் கோடிகளை குவித்து வருகிறது. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள், கடந்த 12ம் தேதி துவங்கி, 45 நாட்கள் நடக்க உள்ளன. இந்த காலகட்டம், மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடக்கும் சமயம். இரவு 12 மணி வரை, மாணவர்களை "டிவி' முன் உட்கார வைத்து ஐ.பி.எல்., சம்பாதிப்பதால், மாணவர்களது படிப்பு கடுமையாக பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமா? ஐ.பி.எல்., அமைப்பில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்கத் திட்டமிட்டுள்ளனர். அதன் மூலம், அடுத்த ஆண்டு 90க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படுமாம். இந்த அணியை வாங்க, குறைந்தபட்ச கேட்புத் தொகை 1,100 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல், ஏலம் கேட்டு அணியை வாங்க வேண்டும். ஓர் அணிக்கு 1,100 கோடி ரூபாய் என்றால், மொத்தமுள்ள 10 அணிகள் மூலம் எவ்வளவு சம்பாதித்திருக்கும் இந்த ஐ.பி.எல்.,? இந்த சம்பாத்தியத்தின் மூலம் மக்களுக்கு அல்லது ரசிகர்களுக்கு கிடைத்தது ஒன்றுமில்லை. கிரிக்கெட் போட்டிகளைக் கூட, "டிவி'யில் இலவசமாக பார்க்க முடியாது. கட்டணச் சேனல்கள் மூலம் ஒளிபரப்பப்படுவதால், ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு, "டிவி' சேனலுக்கு பணம் கட்ட வேண்டியுள்ளது.
தென்மாநிலங்களை சுனாமி தாக்கியபோது, கிரிக்கெட் வாரியம் முன்வந்து ஒரு பைசாவாவது செலவிட்டதா? அதேபோல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் புயல், பூகம்பம் தாக்கியபோதெல்லாம் இந்த கிரிக்கெட் ஹீரோக்களும், வாரியமும் எங்கு இருந்தனர் என்பதே தெரியாது. தமிழகத்தில் சுனாமி தாக்கியபோது, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தான் இங்கு ஓடோடி வந்து, மக்களோடு மக்களாக தங்கியிருந்து, வீடு கட்டித் தர உதவினார். அதே நேரத்தில், இங்குள்ள ஹீரோக்களும், கிரிக்கெட் மூலம் கோடிகளை சம்பாதித்த ஹீரோக்களும் எட்டிப் பார்க்கவில்லை. இந்தியாவில், "டிவி' மற்றும் நேரடி ஒளிபரப்பு வசதிகள் வருவதற்கு முன், அதாவது, 30 ஆண்டுகளுக்கு முன், மேல்தட்டு பிரமுகர்களின் விளையாட்டாகவே கிரிக்கெட் இருந்தது. "டிவி' நேரடி ஒளிபரப்புடன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் தலைதூக்கியதும், மற்ற விளையாட்டுகளை நம் மக்கள் மறந்தே போய்விட்டனர். ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகளை எடுத்துக் கொண்டால், மொத்தமே ஒன்றரை மணி நேரம் தான். போட்டி துவங்கும் முன், இடைவேளை மற்றும் போட்டி முடிந்த பின் என, மூன்று சமயங்களில் மட்டுமே விளம்பரங்கள் செய்ய முடியும். ஆனால், கிரிக்கெட்டில் ஓவர் முடிந்ததும், விக்கெட் விழுந்ததும், பந்து பவுண்டரி தாண்டும்போது, என, நிமிடத்துக்கு நிமிடம் விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருமானமோ, பல கோடி ரூபாய்.
இப்போதுள்ள கிரிக்கெட் வாரியம், அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக் குள் வைத்துக்கொண்டு, தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறது. வாரியத்தில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மிகப் பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் தான். மாநில மற்றும் தேசிய அளவில் கிரிக்கெட் வாரியத்துக்கான உறுப்பினர், தலைவர் தேர்தலின்போது நடக்கும் அடாவடிகள், வாய் பிளக்க வைப்பவை. கை மாறும் கோடிகள், ஆள் பிடிக்கும் குதிரை பேரங்கள், கோர்ட் படியேறும் கூத்துக்கள் என, அத்தனையும் தடாலடி தான். இப்படி பதவியைப் பிடிக்கும் நபர்கள் யாரும், கிரிக்கெட் வாரியம் மூலம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் இல்லை. அப்படி இருக்கும் போது, கிரிக்கெட் வாரியம் சம்பாதிக்கும் கோடிகளை, நாட்டின் வளர்ச்சிப் பணிக்கு செலவழிக்கலாம் அல்லது ரசிகர் பயனடையும் வகையில், அவர்களிடம் குறைந்த கட்டணம் வசூலித்தல், இலவச பயிற்சிகள், இலவசமாக போட்டிகளை, "டிவி'யில் பார்க்கும் வசதி போன்றவற்றை வழங்கலாம். இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியது, மத்திய, மாநில அரசுகள் தான். வீரர்கள், வாரியம் என, இவர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வரியைப் போட்டுத் தாளிக்க வேண்டிய அரசுகள், அவர்களுக்கு வரி விலக்கு அளித்து, சாமானிய மக்களின் வயிற்றில் நெருப்பைக் கொட்டுகின்றன.
இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பெராரி கார், பரிசுப் பொருளாய் கிடைத்தது. வெளிநாட்டு காரை நேரடியாக இறக்குமதி செய்யும்போது, 100 சதவீதம் வரி கட்ட வேண்டும் என்பது விதி. அந்த வகையில், அவர் கட்ட வேண்டிய வரி, ஒரு கோடி ரூபாய். புண்ணியவான் என்ன செய்தார் தெரியுமா? காரே ஓசி; அதற்கான வரியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என எழுதிக் கேட்டு, வாங்கியும் விட்டார். இப்படி வழங்கப்பட்ட கோடிகள், அளிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் திரும்பப் பெற்று, நாட்டிலேயே அதிகமான வரியை கிரிக்கெட் வாரியத்துக்கு விதிக்க வேண்டும். அதன் மூலம் வசூலாகும் தொகையை, ஏழை மக்களுக்குப் பயன்படுத்தாவிட்டாலும், கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காவது பயன்படுத்த வேண்டும். அதை விடுத்து, கிரிக்கெட்டைப் பயன்படுத்தி, ஏதோ ஒரு சில தனி நபர்கள் பண முதலைகளாவதை அனுமதிப்பது, மக்களை முட்டாளாக்கும் செயல்.
- பா.பாஸ்கர்பாபு, பத்திரிகையாளர்
Thanks: .dinamalar.com